புதன், 22 ஜனவரி, 2020

காலைவாரிய காங்கிரஸ்: திமுக செயற்குழுவில் கோபக் குரல்!

 கழுத்தறுத்த காங்கிரஸ்:  திமுக செயற்குழுவில் கோபக் குரல்! மின்னம்பலம் : திமுக தலைமைச் செயற்குழுவில் ஆபரேஷனுக்கு தயார் என்று அக்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியிருந்ததை மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி இதழில் நேற்று (ஜனவரி 21) மாலை 7 மணி பதிப்பில் வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் இன்று உங்களில் ஒருவன் என்ற தலைப்பில் திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் அதை உறுதிப்படுத்தியிருக்கிறார் . தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கியமான ஆறு தீர்மானங்கள் பற்றி விளக்கிய ஸ்டாலின், “ நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றோம். அதில் சில இடங்களில் உள்ளாட்சித் தேர்தலில் தொய்வு தெரிகிறது. தயக்கமும் சுணக்கமும் ஏன் என்பதை ஆலோசனை செய்தாக வேண்டும். கழக நிர்வாகிகள் உங்களால் முடிந்தளவு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள். தலைமைக் கழகத்தால்தான் தீர்க்க முடியும் என்கிற விஷயங்களைச் சொல்லுங்கள். பரிசீலித்துத் தீர்த்து வைக்கும். நோய் வந்தால் உடனடியாக அதற்கு மருந்து தந்தாக வேண்டும். இல்லாவிட்டால் எந்த மருந்துக்கும் குணமாகாத நோயாக அது மாறிவிடும். சிறு பிரச்சினைதானே என்று மறைத்தால், அது உள்ளுக்குள்ளேயே வளர்ந்து பெரிய பிரச்சினையாக ஆகிவிடும்.

அவசியமான ‘ஆபரேஷனை’செய்துதான் ஆக வேண்டும். கூடினோம் கலைந்தோம் என்று எப்போதும் இருந்ததில்லை. இனியும் இருக்க முடியாது. தனிமனிதர்களின் விருப்பு-வெறுப்பு-சுயநலத்தைவிட இயக்கத்தின் இலட்சியமும் அதற்கான வெற்றியும் முதன்மையானது. தலைவர் கலைஞர் நமக்கு அந்த எண்ணத்தைத்தான் ஊட்டி வளர்த்திருக்கிறார். எனவே, தனிப்பட்ட முறையில் ஓரிருவர் தவறு செய்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது. இயக்கம்தான் நமக்கு முக்கியம்” என்று தான் பேசியதை கடிதமாக வெளியிட்டு மின்னம்பலம் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.
கன்னியாகுமரி
தலைமைச் செயற்குழுக் கூட்டத்தில் குமரி மேற்கு மாவட்டச் செயலாளர் மனோ தங்கராஜை பேச அழைத்தார் ஸ்டாலின். திமுக காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியதில் முக்கியப் பங்கு குமரி மேற்கு மாவட்டத்துக்கு உண்டு. இங்கேதான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவும் காங்கிரஸும் தனித்தே போட்டியிட்டன.

இதுபற்றிப் பேசிய மனோ தங்கராஜ், “ஆரம்பத்தில் நன்றாகத்தான் பேச்சு வார்த்தை நடத்திவந்தோம். ஆனால் சில இடங்களில் திமுகவினரும் நிற்க விரும்பினார்கள். அதுபற்றி அவர்களிடம் தெரிவித்தபோது சிக்கல் ஏற்பட்டது. கடைசியில் காங்கிரஸ் நம் கழுத்தறுத்துவிட்டது. காங்கிரஸ் தனித்துப் போகவில்லை என்றால் குமரியில் இன்னும் நாம் வெற்றி பெற்றிருப்போம்” என்று கூறினார் மனோ தங்கராஜ். அவர் சொன்னதை குறித்து வைத்துக் கொண்டார் ஸ்டாலின்.
நீலகிரி
உள்ளாட்சித் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் திமுக கணிசமான உறுப்பினர்களைப் பெற்றிருந்தபோதிலும் நீலகிரி மாவட்டச் செயலாளர் முபாரக் மீது அம்மாவட்டத்தைச் சேர்ந்த சில செயற்குழு உறுப்பினர்கள் தொடர்ந்து புகார்கள் தெரிவிக்க முயல அவர்களை பேசச் சொன்னார் ஸ்டாலின்.
“உள்ளாட்சித் தேர்தலில் நின்ற வேட்பாளர்கள் எல்லாரிடமும் தலைக்கு இவ்வளவு என்று பணம் வாங்கிவிட்டார்” என்பதுதான் புகார்.
இதற்கு முபாரக்கிடம் ஸ்டாலின் பதில் கேட்க, கண்கலங்கியபடியே பேசிய முபாரக், “நான் வேட்பாளர்களிடம் பணம் வசூலித்தது எனக்காக அல்ல. கட்சி நிகழ்ச்சிகளுக்காகத்தான். அதற்கான கணக்குகளை விரைவில் நான் தலைமையிடம் சமர்ப்பிக்கிறேன்” என்று சொல்லும்போதே கண் கலங்கிவிட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலத்தில் திமுக அடைந்த தோல்வி குறித்தும் தலைமைச் செயற்குழு கூட்டத்தில் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
அதை மாலை 7 மணி பதிப்பில் காண்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக