புதன், 22 ஜனவரி, 2020

அச்சுறுத்தும் கொரோனோ: விமான நிலையங்களில் சோதனை!

 அச்சுறுத்தும் கொரோனோ: விமான நிலையங்களில் சோதனை!மின்னம்பலம் : தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனோ வைரஸிற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் சீனாவிலிருந்து இந்தியா வரும் விமான பயணிகளிடையே தீவிர மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சீனாவில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த வாரத்திலிருந்து பரவி வருகிறது. முதலில் இது கடல் உணவு மற்றும் இறைச்சி சந்தையில் விலங்குகளிடம் இருந்து பரவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய வைரஸ் தற்போது மனிதனிலிருந்து மனிதனுக்குப் பரவும் என்று சீனாவின் மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது. குவாங்டாங், வுகான் ஆகிய மாகாணங்களில் இந்த நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 1.1. கோடி பேர் வசித்து வரும் வுகானில் 100க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்த நிலையில் 15 மருத்துவ பணியாளர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வகை காய்ச்சல் ஏற்பட்டால் சுவாசத்தில் பிரச்சினை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும். இந்நிலையில் இந்த பாதிப்பினால் 9 பேர் வரை உயிரிழந்துள்ளதாகச் சீனா தெரிவித்துள்ளது.
தாய்லாந்து, ஜப்பான், தென் கொரியா போன்ற நாடுகளிலும் சிலருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் சமீபத்தில் சீனாவின் வுகான் மாகாணத்துக்குச் சென்று திரும்பியவர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அமெரிக்காவுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. 30 வயதுடைய ஒரு நபர் வுகானுக்கு சென்று வந்ததார். ஆனால் அவர் கடல் உணவு சந்தைக்குச் செல்லவில்லை. இந்த காய்ச்சல் பாதிப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுக் கண்காணிப்பிலிருந்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே இந்தியாவில் அனைத்து விமான நிலையங்களிலும் தீவிர சோதனை நடத்த மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய முக்கிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவின் ஹாங்காங்கில் இருந்து, சென்னைக்குத் தினசரி நள்ளிரவு, 12:30 மணிக்கு, 'கேத்தே பசிபிக்' விமானம், நேரடி சேவையாக வந்து, மீண்டும் அதிகாலை, 2:00 மணிக்கு, ஹாங்காங் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் இந்த விமானத்தில் வரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று முன் தினம் வந்த 368 பயணிகளுக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் இந்த வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.
ஒருவேளை பயணிகளுக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டால் அவர்களைத் தனி ஆம்புலன்ஸ் மூலம் தண்டையார்பேட்டையில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சுகாதாரத் துறை அமைச்சர் தமிழகத்தில் யாருக்கும் இந்த பாதிப்பு இல்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக