புதன், 1 ஜனவரி, 2020

நெல்லைக் கண்ணன் பெரம்பலூரில் கைது!

நெல்லைக் கண்ணன் பெரம்பலூரில் கைது!மின்னம்பலம் : மோடி மற்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷாவை அவதூறாக பேசிய விவகாரத்தில், பெரம்பலூரில் தங்கியிருந்த நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.
நெல்லையில் டிசம்பர் 29 ஆம் தேதி எஸ்டிபிஐ நடத்திய குடியுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய நெல்லை கண்ணன், “மோடி பிரதமர். ஆனால் அமித் ஷாதான் அவருக்கு மூளை. சண்டியனே அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சிடுச்சுன்னா, இவர் சோலி முடிஞ்சுடுச்சு. அது ஒரு பக்கம். நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டேங்கியலே” என்று பேசினார்.
இந்த காணொளி வேகமாக பரவிய நிலையில், அமித் ஷாவை கொலை செய்ய நெல்லை கண்ணன் தூண்டியதாக குற்றம்சாட்டிய ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர், அவரைக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இதுதொடர்பாக நெல்லைக் கண்ணன் மீது மூன்று பிரிவுகளில் கீழ் நெல்லை மேலப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே நெல்லை தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக நெல்லை கண்ணன் நேற்று அனுமதிக்கப்பட அங்கும் பாஜகவினர் போராட்டம் நடத்தியதால் வேறு மருத்துவமனைக்கு இடமாற்றப்பட்டார்.

நெல்லை கண்ணனை கைது செய்ய வேண்டுமென இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று மாலை சென்னை மெரினா காந்தி சிலை அருகே தர்ணாவில் ஈடுபட்டு கைதாகினர்.
இந்த நிலையில் பெரம்பலூரிலுள்ள குரு லாட்ஜில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை, பெரம்பலூர் காவல் துறையினர் இன்று (ஜனவரி 1) மாலை 6.30 மணியளவில் கைது செய்துள்ளனர். அவரை லாட்ஜ் அறையிலிருந்து வெளியேறவிடாமல் தடுத்துவைத்துள்ளனர். தொடர்ந்து, நெல்லை கண்ணனை அழைத்துச் சென்று விசாரிப்பதற்காக நெல்லை மேலப்பாளையம் காவல் துறையினர் பெரம்பலூருக்கு விரைந்துள்ளனர்.
இதனிடையே ஹெச்.ராஜா தனது சமூக வலைதளப் பக்கங்களில், “ஆப்பரேஷன் சக்சஸ்!” என்று பதிவிட்டுள்ளார். நெல்லைக் கண்ணன் கைது செய்யப்பட்டத் தகவலை வெளிப்படுத்தும் விதமாகவே ஹெச்.ராஜா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக