சனி, 18 ஜனவரி, 2020

ஸ்டாலினிடம் பேசிய சோனியா:! கலைஞரை தனது தந்தை போல் ... சோனியா அம்மையார்

ஸ்டாலினிடம் பேசிய சோனியா: கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!மின்னம்பலம் : திமுக-காங்கிரஸ் இடையேயான கூட்டணி சர்ச்சைக்கு 8 நாட்களுக்குப் பிறகு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி தர்மத்தை மதிக்கவில்லை என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கடந்த 10ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை திமுக-காங்கிரஸ் கூட்டணியில் விரிசலை உண்டாக்கியது. இது டெல்லி அளவுக்கு தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அறிக்கையைக் காரணமாக வைத்து காங்கிரஸ் கூட்டிய எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
விவகாரம் பெரிதானதை உணர்ந்த டெல்லி மேலிடம், கே.எஸ்.அழகிரியை டெல்லிக்கு அழைத்தது. இதனையடுத்து, டெல்லி சென்ற கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தனது அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்தார்.

இதன் பின்னர் திமுக தலைவர் ஸ்டாலினை சோனியா காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். “அறிக்கை தொடர்பாக அழகிரியிடம் பேசியிருக்கிறேன். இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் வராது.” என்று அப்போது ஸ்டாலினிடம் சோனியா உறுதியளித்துள்ளார். அரசியல் பேச்சுக்கள் முடிந்த பிறகு தயாளு அம்மாள் உடல்நலம் குறித்து அக்கறையோடு விசாரித்ததோடு, ஸ்டாலின் குடும்ப உறுப்பினர்கள் குறித்தும் விசாரித்துள்ளார் சோனியா.

இதன் தொடர்ச்சியாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் யாரையாவது பேச அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காக முதல்வர் பதவியில் இருக்கும், அதே சமயம் திமுகவுக்கு மிகவும் நெருக்கமானவராக கருதப்படும் நாராயணசாமியை அனுப்பியுள்ளது டெல்லி மேலிடம்.

பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்ட பிறகு ஸ்டாலினிடம் நாராயணசாமி, “சோனியா மேடம் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளார். கலைஞரை தனது தந்தை போல அவர் நினைத்தார். அதுபோலவே உங்கள் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டிருக்கிறார். அழகிரி ஏதோ தவறுதலாக அவ்வாறு அறிக்கை வெளியிட்டுவிட்டார். அதனை தவறாக எடுத்துக்கொண்டு பெரிதுபடுத்த வேண்டாம்” என்று சொல்லியுள்ளார்.

இதன்பிறகுதான் கே.ஆர்.ராமசாமி, கே.வி.தங்கபாலு, கோபண்ணா, விஷ்ணுபிரசாத் சகிதம் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார் கே.எஸ்.அழகிரி. இந்த சந்திப்பின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ்.அழகிரி, கூட்டணியில் விரிசல் இல்லை என்று தெரிவித்தார்.
அடுத்த அரை மணி நேரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “மறைமுகத் தேர்தல் பதவிகளில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த இடங்களே வழங்கப்பட்டதாக கே.எஸ். அழகிரி “வெளிப்படையாக” ஒரு அறிக்கையை வெளியிட்டார். சுமுகமாகப் பேசித் தீர்த்திருக்க வேண்டிய மறைமுகத் தேர்தல் இடப் பங்கீடு குறித்து, அறிக்கை மூலம் பொது வெளிக்குக் கொண்டு சென்றது, கடந்த சில நாட்களாக இரு தரப்பிலும் விரும்பத்தகாத கருத்துப் பரிமாற்றத்திற்கு வழி வகுத்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

திமுகவின் மனப்பாங்கினை உணர்ந்த கே.எஸ். அழகிரி அவர்கள், “தி.மு.க. - காங்கிரஸ் இடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது” என்றும், “மதவாத, பாசிச சக்திகளையும் அவர்களை ஆதரித்து கைப்பாவைகளாகச் செயல்பட்டு வருபவர்களையும் எதிர்த்து திமுக மேற்கொண்டுள்ள உறுதியான நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஆதரவளித்து துணை நிற்கும்” என்றும் அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் ஆக்கபூர்வமாகத் தெரிவித்துள்ளார். இன்று அண்ணா அறிவாலயத்தில் என்னை நேரில் சந்தித்து இதுகுறித்து பேசியும் உள்ளார் என்று தெரிவித்த ஸ்டாலின்,

“கூட்டணி தொடர்பாக ஏதோ ஒரு சில இடங்களில் இருதரப்பிற்கும் ஏற்பட்ட சில நிகழ்வுகளை முன் வைத்து- இரு தரப்புமே இந்த விவாதத்தை மேலும் பொதுவெளியில் நடத்திக் கொண்டிருப்பது திமுக கூட்டணியில் சிறு ஓட்டையாவது விழாதா என்று ஏங்கித் தவிக்கும் “குள்ள நரி சக்திகளுக்கும்” “சில ஊடகங்களுக்கும்” மேலும் அசைபோடுவதற்கான செயலாக அமைவதை நான் ஒரு சிறிதும் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.

மேலும், “விரும்பத்தகாத இத்தகைய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், இனியும் இவ்வாறு ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்பதாலும், கூட்டணி குறித்த கருத்துகளை இரு கட்சியினரும் பொது வெளியில் தெரிவிப்பதை கட்டாயம் தவிர்த்திட வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார் ஸ்டாலின்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக