ஞாயிறு, 12 ஜனவரி, 2020

இந்தியா இந்துக்கள் நாடு: பிரேமலதா பேச்சு!

இந்தியா இந்துக்கள் நாடு: பிரேமலதா பேச்சு!மின்னம்பலம் : இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா பேசியுள்ளார்.
தேமுதிக சார்பில் சென்னை கொரட்டூரில் இன்று (ஜனவரி 12) பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் 101 பானைகளில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதில், தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வேட்டி, சேலைகள் மற்றும் பொங்கல் பரிசுகளை வழங்கினர்.
விழாவில் பேசிய விஜயகாந்த், “நான் ஐந்து தெய்வங்களை வணங்குகிறேன்.
அதில் எனக்காக பிரார்த்தனை மேற்கொள்ளும் தொண்டர்களாகிய நீங்கள்தான் எனது முதல் தெய்வம். மக்களுக்கு நல்லது செய்ய விரைவில் பூரண உடல்நலம் பெற்று மீண்டு வருவேன்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டார்.
மேலும், தேமுதிக தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா விஜயகாந்த், “அரசியலில் தற்போது தேமுதிகவின் ஆட்டம் ஆரம்பமாகியுள்ளது. ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இது யானை பசிக்கு சோளப் பொறி போன்றதுதான். அடுத்து வரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூடுதல் இடங்களில் வெற்றிபெற அனைவரும் உழைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “விஜயகாந்துக்கு அனைத்து மதமும் ஒன்றுதான். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரே சாதி, ஒரே குலம் என்ற நிலையைக் கொண்டவர்தான் விஜயகாந்த். அதனால்தான் அனைத்து பண்டிகைகளையும் தேமுதிக கொண்டாடி வருகிறது” என்று தெரிவித்த பிரேமலதா, சிஏஏ குறித்தும் பேசினார்.
“குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சிலர் குரல் எழுப்புகிறார்கள். சிலர் ஆதரவும் தெரிவிக்கிறார்கள். ஆனால், நாம் சரியாக சிந்தித்து சொல்வோம். இந்தியா என்றால் இந்துக்கள் நாடுதான். அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நம்மோடு இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் சகோதரத்துவத்துடன் பழகிவருகிறார்கள். பல மொழிகளும், பல மதங்களும் இருக்கும் நமது நாட்டில் எந்த பிரிவினையும் இல்லை. ஆனால், மதத்தை பயன்படுத்தி தீவிரவாதத்தில் ஈடுபடுபவர்களுக்குத்தான் இந்தியாவில் இடமில்லை” என்று பேசினார் பிரேமலதா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக