புதன், 1 ஜனவரி, 2020

BBC : ஐ.நா. வளர்ச்சி இலக்குப் பட்டியல்: ஏழ்மை ஒழிப்பில் தமிழகம் முதலிடம்.. தொடர் சாதனை ..

முரளிதரன் காசிவிஸ்வநாதன - பிபிசி தமிழ் : சமீபத்தில் வெளியிடப்பட்ட
இந்தியாவின் நிலையான வளர்ச்சி இலக்கு தரவரிசைப் பட்டியலில் கேரளா முதலிடத்தைப் பிடிக்க, தமிழ்நாடு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் ஆண் - பெண் விகிதாச்சாரம் உள்ளிட்ட பிரிவுகளில் கடந்த ஆண்டைவிட தமிழ்நாடு பின்தங்கியுள்ளது. உலகம் முழுவதும் நிலையான வளர்ச்சிக்கென சில பிரிவுகளைப் பட்டியலிட்டு, ஒவ்வொரு பிரிவிலும் ஒவ்வொரு நாடும் எந்த அளவுக்கு மேம்படுகின்றன என்பதை கணக்கிட ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை முடிவெடுத்தது. இதில் 193 நாடுகள் கையெழுத்திட்டிருக்கின்றன. இந்த இலக்குகளை 2030ஆம் ஆண்டில் எட்ட வேண்டுமெனத் திட்டமிடப்பட்டிருக்கிறது.
இந்தியாவைப் பொறுத்தவரை நிடி ஆயோக், நிலையான வளர்ச்சி இலக்கைக் கணக்கிட 16 பிரிவுகளை வரையறுத்தது. ஒவ்வொரு பிரிவிற்கும் 100 புள்ளிகள் வழங்கப்படும். அந்தப் புள்ளிகளின் அடிப்படையில், இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் எந்த இடத்தில் இருக்கின்றன என்பது தரவரிசைப்படுத்தப்படும். இந்த தரவரிசைப் பட்டியல் 2018ல் முதன்முதலாக வெளியிடப்பட்டது.


2018ஆம் ஆண்டில் இமாச்சலப் பிரதேசம், கேரளாவுக்கு அடுத்தபடியாக 66 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தை தமிழ்நாடு பிடித்திருந்தது. ஆனால், இந்த ஆண்டு, 67 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கேரளா, இமாச்சலப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்திற்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது.

2019ஆம் ஆண்டில் இந்தியா, 60 புள்ளிகளையே எடுத்திருக்கிறது. அந்த வகையில் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 19 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் இந்திய சராசரியைவிட மேம்பட்ட நிலையில் உள்ளன. 16 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்திய சராசரியைவிட கீழான நிலையில் இருக்கின்றன. இந்தப் பட்டியலில் 50 புள்ளிகளுடன் பிஹார் கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது.

கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால், உத்தரப்பிரதேசம், ஒடிஷா, சிக்கிம் ஆகிய மாநிலங்கள் வேகமாக வளர்ச்சி கண்டிருக்கின்றன.
ஏழ்மையை ஒழிப்பது, பசியை ஒழிப்பது, சமத்துவமின்மையைக் குறைப்பது, பாலின சமத்துவம், சுத்தமான நீர் கிடைக்கச் செய்வது ஆகிய 16 பிரிவுகளில் தமிழ்நாடு சில பிரிவுகளில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
< குறிப்பாக, ஏழ்மையை ஒழிப்பது என்ற விஷயத்தில் 72 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
சுகாதாரத் துறையைப் பொறுத்தவரை, 72 புள்ளிகளுடன் ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களுடன் சேர்ந்து இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. குறிப்பாக, பிரசவத்தின்போது தாய்மார்கள் இறக்கும் விகிதம் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் தமிழ்நாட்டின் நிலை மேம்பட்டிருக்கிறது.
சிறந்த கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு மணிப்பூருடன் இணைந்து நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

ஆனால், பசியை ஒழிப்பது என்ற பிரிவில், தமிழ்நாடு பத்தாவது இடத்தையே பிடித்திருக்கிறது. குழந்தைகளுக்குச் சரிவிகித உணவு கிடைக்கச் செய்வது, நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுவது, பெண்களிடம் ரத்த சோகை ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதே, இந்தப் பிரிவில் தமிழ்நாடு பின்னால் இருப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது.
>பாலின சமத்துவத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு மிகவும் பின்னால் இருக்கிறது. இந்தப் பிரிவில் இமாச்சலப் பிரதேசம், கேரளா போன்ற மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஆனால், தமிழ்நாடு வெறும் 40 புள்ளிகளுடன் பிஹாருக்கு இணையாக 12வது இடத்தில்தான் இருக்கிறது. குடும்ப வன்முறை, பொதுத் தொகுதிகளில் பெண்கள் வெற்றிபெறும் விகிதம், பிறப்பின்போது ஆண் - பெண் விகிதாச்சாரம் ஆகியவற்றில் பின்தங்கியிருப்பதே, இந்தப் பிரிவில் தமிழ்நாடு பின்தங்கியிருப்பதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

தூய்மையான குடிநீரை வழங்குவதில் பெரும்பாலான மாநிலங்களின் நிலை மேம்பட்டிருக்கிறது. இலக்குகளை எட்டும் நிலையிலும் அவை இருக்கின்றன. இதில், தமிழ்நாடு 7வது இடத்தைப் பிடித்திருக்கிறது. நாட்டிலேயே தில்லி மட்டுமே இதில் பின்தங்கியிருக்கிறது.
எல்லோராலும் பெறத்தக்க தூய எரிசக்தியை அளிப்பதில் தமிழ்நாடு 90 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் இருக்கிறது. கண்ணியமான வேலை மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பிரிவில், 6வது இடத்தை தமிழ்நாடு பிடித்திருக்கிறது. வேலை வாய்ப்பு, வேலை வாய்ப்பின்மை, வங்கிக் கணக்கு ஆகிய அம்சங்கள் இதில் கணக்கில் கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஆச்சரியகரமாக, தொழில்துறை - உள்கட்டமைப்பு என்ற பிரிவில் குஜராத் முதலிடத்தைப் பிடித்திருக்க தமிழ்நாடு 14வது இடத்தையே பிடித்திருக்கிறது. இந்தப் பிரிவைப் பொறுத்தவரை, 100 பேருக்கு எத்தனை பேர் மொபைல் போன் வைத்திருக்கிறார்கள், எவ்வளவு பேர் இணைய இணைப்பு வைத்திருக்கிறார்கள், உற்பத்தித் துறையில் எவ்வளவு பேர் பணியாற்றுகிறார்கள் உள்ளிட்ட பிரிவுகளில் மாநிலத்தின் நிலை கணக்கிடப்படுவதோடு, பிரதமரின் கிராம சாலைத் திட்டத்தின் கீழ் எவ்வளவு சாலைகள் போடப்பட்டிருக்கின்றன என்பதும் கணக்கிடப்படும்.

இந்தப் பிரிவில் பிரதமரின் கிராம சாலைத் திட்டம் என்ற அம்சத்தில் தமிழ்நாடு பூஜ்யம் சதவீத இலக்குகையே எட்டியிருக்கிறது. இதனால்தான், உற்பத்தித் துறை வேலை வாய்ப்பு, மொபைல் போன் இணைப்பு ஆகியவற்றில் கிட்டத்தட்ட இலக்குகளை எட்டியிருக்கும் தமிழகம் பின்தங்கிய மாநிலமாகக் காட்டப்படுகிறது.
சமத்துவமின்மையைக் குறைப்பதிலும் தமிழ்நாடு மிகவும் பின்தங்கி, 16வது இடத்தில்தான் இருக்கிறது. பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை, கிராமப்புற, நகர்ப்புற மக்களில் கீழ் நிலையில் இருப்பவர்களின் மேம்பாடு, ஒடுக்கப்பட்டோருக்கான நிதியைச் செலவழிப்பது போன்றவற்றை வைத்து, இந்தப் பிரிவில் தர மதிப்பீடு தரப்படுகிறது.
ஆனால், இதில் பல பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தாலும், பெண் பஞ்சாயத்துத் தலைவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது, பணப் பரவலில் சமமின்மை இருப்பது ஆகிய காரணங்களால் தமிழ்நாடு பட்டியலில் பின்னால் தள்ளப்பட்டுள்ளது.

நிலைத்திருக்கக்கூடிய நகரங்கள் - சமூகங்கள் பிரிவிலும் தமிழ்நாடு 13வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. குப்பைகளை வீடு - வீடாக வந்து பெறுவது என்ற பிரிவைத் தவிர பிற பிரிவுகள் அனைத்திலும் தமிழ்நாடு பின்னால் இருப்பதால்தான், இதில் 13வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது.
பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கை என்ற பிரிவில், தமிழகம் வெறும் 45 புள்ளிகளுடன் மிகவும் பின்தங்கிய நிலையில் 17வது இடத்தையே பிடித்துள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான இலக்கில் தமிழகம் நூறு சதவீத இலக்கை எட்டிவிட்டாலும் எல்இடி பல்புகளைப் பயன்படுத்துவது, புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவில் சூரியசக்தியைப் பயன்படுத்துவது ஆகிவற்றில் பின்தங்கியிருப்பதாலேயே இந்தப் பிரிவில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளது.
>ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வேலைகளை வழங்குவது, தானிய உற்பத்தி, டியூபர்குளோசிஸ் நோய்த் தாக்கம், மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறுவது, பிறப்பின்போது ஆண் - பெண் விகிதம், இணைய சேவைப் பயன்பாடு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றில் கடந்த ஆண்டோடு ஒப்பிட்டால் தமிழகம் பின் தங்கியிருக்கிறது.
ஆனால், குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டை சரிசெய்வது, பிரசவத்தின்போது இறப்பு விகிதம், கிராமப்புற வீடுகளில் கழிப்பறை வசதி, திறந்தவெளியைக் கழிப்பறையாகப் பயன்படுத்தாத மாவட்டங்கள், மொபைல் போன் பயன்பாடு, பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் வீடுகளைக் கட்டுவது, குப்பைகளைச் சேகரிப்பது, பிறப்பைப் பதிவுசெய்வது, கொலைகளைக் குறைப்பது ஆகியவற்றில் தமிழ்நாடு மேம்பட்டிருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக