வெள்ளி, 10 ஜனவரி, 2020

2 ஆம் வகுப்பு தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியை விஜயலக்ஸ்மிக்கு 5 ஆண்டுகள் சிறை!

 தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்குச் சிறை!மின்னம்பலம் : இரண்டாம் வகுப்பு தலித் மாணவனை மலம் அள்ள வைத்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே உள்ள இராமாபுரம் புதூர் பகுதியில் பெரும்பான்மையாக கொங்கு வெள்ளாளர்களும், இஸ்லாமியர்களும், அதற்கும் குறைவாக ஆதிதிராவிடர்களும் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2015ல் விஜயலட்சுமி என்ற ஆசிரியை இரண்டாம் வகுப்புக்குப் பாடம் எடுத்து வந்தார். ஒருநாள் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கும், இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் சேர்த்து ஒரே வகுப்பறையில் விஜயலட்சுமி பாடம் எடுத்துள்ளார்.
அப்போது 3ஆம் வகுப்பு மாணவனான முகமது ஷெரிப் தன்னை அறியாமலேயே வகுப்பறையிலேயே மலம் கழித்துள்ளார். வகுப்பைக் கவனித்து வந்த ஆசிரியை விஜயலட்சுமி, இரண்டாம் வகுப்பு மாணவனான சசிதரனைக் கூப்பிட்டு, முகமது ஷெரிப் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்த மலத்தை அள்ளி வெளியே போடச் சொல்லியுள்ளார்.
விவரமறியாத சசிதரனும் ஒரு காகிதத்தில், மலத்தை எடுத்துப் போட்டுவிட்டு சுத்தம் செய்துள்ளார். பின்னர் பள்ளி முடிந்ததும் சசிதரனையும், அவரது அண்ணனான பரணிதரனையும் மலம் அள்ளியதைச் சுட்டிக்காட்டி சக மாணவர்கள் கிண்டல் செய்துள்ளனர். சசிதரனைத் தொடமாட்டோம் என்று கூறி ஒதுக்கியுள்ளனர்.


இதனால் பாதிக்கப்பட்ட சசிதரன் நடந்ததைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதையறிந்த லாரி ஒட்டுநரான சசிதரனின் தந்தை வீரசாமி, இதுகுறித்து விசாரிக்க பள்ளிக்குச் சென்றுள்ளார். ஆசிரியை விஜயலட்சுமியிடம் கேட்டதற்கு அவர் முறையாகப் பதில் அளிக்காமல் கடினமாகப் பேசியுள்ளார்.
இந்த ஆசிரியர் செய்த காரியம் என்னுடைய காலத்துக்கு மட்டுமல்ல, என்னுடைய மகன் காலத்துக்கும் மறையாது என்று வேதனைப்பட்ட வீராசாமி இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலித் மாணவன் என்பதால் தான் எனது மகனை இதுபோன்ற ஒரு செயலில் ஆசிரியை ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டியிருந்தார்.
இதையடுத்து ஆசிரியை விஜயலட்சுமி மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நாமக்கல் போலீசார் கைது செய்தனர். பின்னர் ஆசிரியர் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அப்போது, ஆசிரியை மீது தீண்டாமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது தவறு என முன்னாள் சட்ட மேலவை உறுப்பினரும், தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவரான முத்துசாமி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ஆசிரியை ஜாதி அடிப்படையில் அவ்வாறு செய்யவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது. எனினும் கொலைக் குற்றவாளியைக் கைது செய்வது போல் அவரை அழைத்துச் சென்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.
இதுதொடர்பான வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நாமக்கல் எஸ்சி/எஸ்டி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையிலிருந்து வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், ஆசிரியை விஜயலட்சுமிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும் ரூ.1000 அபராதம் விதித்தும் உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக