செவ்வாய், 31 டிசம்பர், 2019

கேரளா CAA சிஏஏவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவந்த முதல் மாநிலம்! Breaking news .. வீடியோ


மின்னம்பலம் :சிஏஏவுக்கு எதிராகக் கேரள சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் இன்று தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கேரளாவைப் பொறுத்தவரை சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆரம்பம் முதலே போராட்டம் நடைபெற்று வருகிறது. முதல்வர் பினராயி விஜயனும், எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலாவும் ஒரே மேடையில் சிஏஏவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மாநிலத்தில் பேரணிகளும் நடைபெற்றன. சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாக நார்வே பெண்ணை மத்திய அரசு கொச்சியிலிருந்து வெளியேறுமாறு உத்தரவிட்டது.
அண்மையில் கண்ணூர் பல்கலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆரிஃப் கான் சிஏஏவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசியதாக மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கேரளாவில் இதுபோன்று சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், சிறப்புச் சட்டமன்றத்தைக் கூட்டி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கேரள அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று காலை தொடங்கிய இந்த கூட்டத்தில், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப்பெறக் கோரும் தீர்மானத்தை, கேரள முதல்வர் பினராயி விஜயன் தாக்கல் செய்தார். தற்போது அந்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. முன்னதாக பேசிய, பினராயி விஜயன், இந்த சட்டம் மதச்சார்பின்மைக்கும், நாட்டின் கூட்டமைக்கும் எதிரானது. இச்சட்டம் மூலம் மத ரீதியான வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இச்சட்டம் அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைக்கும் எதிரானது. இதனை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்தார். சிஏஏவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் கொண்டு வந்த முதல் மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத்தொடர்ந்து அனைத்துக் கட்சிகளும் இதுதொடர்பாக குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக