புகழ்பெற்ற லிண்டன் அருங்காட்சியகத்துக்கு ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வருகை தருகின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். `அப்படிப்பட்ட ஓர் இடத்தில் திருவள்ளுவருக்குச் சிலை வைத்தால் அவரைப் பற்றி உலக மக்கள் தெரிந்துகொள்வதற்கு நல்வாய்ப்பாக இருக்கும்’ என்பதால் தமிழ் ஹெரிடேஜ் ஃபவுண்டேஷன், திருவள்ளுவர் சிலையை அந்த அருங்காட்சியகத்தில் நிறுவ உள்ளது.
லிண்டன் அருங்காட்சியகத்தில் இன்று திறக்கப்பட உள்ள இரண்டு சிலைகளில் ஒன்றைப் பரிசாக வழங்கியிருக்கிறார், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கோ.பாலச்சந்திரன். இவர் மேற்குவங்க மாநில அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர்.
பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் பேசினோம். “நான் பரிசளித்த திருவள்ளுவர் சிலை ஐம்பொன்னால் ஆனது. ஒவ்வொரு குறளும் ஒன்றே முக்கால் அடியைக் கொண்டவை என்பதால், இந்த திருவள்ளுவர் சிலையும் அதே அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமும் உள்ளது. நான் அளித்த திருவள்ளுவர் சிலையில் தாடி, மீசை இல்லாத 40 முதல் 45 வயது மதிக்கத்தக்கப் புலவராக அவர் உள்ளார். 19-ம் நூற்றாண்டில் எல்லீஸ் என்ற ஆங்கிலேயர் சென்னை மாநகரத்தின் ஆட்சியராக இருந்தார். அவரது கைக்குத் திருக்குறளின் மூலப்பிரதி ஒன்று கிடைத்துள்ளது.
அதைப் படித்த பிறகு, திருக்குறள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாகக் குறளின் சில பகுதிகளை ஆங்கிலத்திலும் லத்தீன் மொழியிலும் மொழிபெயர்த்தார் எல்லீஸ். திருக்குறளின் தாக்கம் காரணமாக அவரது உருவத்தை முதல்முறையாகத் தங்க நாணயத்தில் பொறித்து வெளியிட்டார்.
எல்லீஸ் வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தில் அவர் தாடி, மீசை இல்லாமல் இளவயது தோற்றத்தில் இருப்பார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பரிசளித்த திருவள்ளுவர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லீஸ் வெளியிட்ட திருவள்ளுவர் புகைப்படத்தில் அவர் தாடி, மீசை இல்லாமல் இளவயது தோற்றத்தில் இருப்பார். அதை அடிப்படையாகக் கொண்டுதான் நான் பரிசளித்த திருவள்ளுவர் சிலையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், திருவள்ளுவர் இன்னும் இளம் வயதுடன் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் எப்படி இருந்தார், அவரது பெயர் உள்பட எந்த விவரங்களும் நமக்குத் தெரியாது. இப்படித்தான் இருப்பார் எனத் தெரியாத ஒரு நபர் குறித்து ஓவியங்கள், சிலைகளை வடிக்கும்போது அவரவர்களின் கற்பனையைக் கலப்பது இயல்பு. என்னைப் பொறுத்தவரையில், உலகில் உள்ள பெரும்பாலான படைப்பாளிகள், தங்களின் படைப்புகளை இளம் வயதிலேயே படைத்துவிட்டனர். உதாரணமாக பாரதி, ஆண்டாள், ஷெல்லி, கீட்ஸ், சுந்தரர், சம்பந்தர் எனப் பலரை உதாரணமாகக் கூற முடியும்.
இந்தக் காரணங்களால்தான் முப்பாலையும் எழுதிய திருவள்ளுவர் தன் இளமைக் காலத்திலேயே மிகச் சிறந்த திறன் கொண்ட கவிஞராக இருந்திருக்க வேண்டும். அதைக் குறிப்பிடும் வகையிலேயே இளமைக் கோலத்தில் திருவள்ளுவர் சிலையை வடிவமைக்க முடிவு செய்தோம்” என்றார் உற்சாகமான குரலில். vikatan.com</
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக