திங்கள், 30 டிசம்பர், 2019

ஜார்கான்ட் பழங்குடியினர் மீதான வழக்குகள் நீக்கம் .. நெஞ்சில் பால்வார்த்த ஹேமந்த் சோரன்

முதல் கையெழுத்து: பழங்குடியினர் நெஞ்சில் பால்வார்த்த ஹேமந்த் சோரன்மின்னம்பலம் : ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக நேற்று (டிசம்பர் 29) பதவியேற்றுக்கொண்ட ஹேமந்த் சோரன் தனது முதல் நடவடிக்கையாக, பதல்கடி இயக்கம் நடத்திய பழங்குடியினர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்றிருக்கிறார்.
இதற்கு முந்தைய முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையிலான பாஜக ஆட்சியில், பழங்குடியினரின் நில சட்டங்களில் திருத்தம் கொண்டு வந்து, தொழிற்சாலைகளுக்கு அவற்றை வழங்க வழி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பழங்குடியின அமைப்பினர் தொடங்கிய இயக்கம்தான் பதல்கடி.
பதல்கடி, பதல்கரி என்றும் உச்சரிக்கப்படுகிறது. 2018இல் இந்த பெயர் நாடெங்கும் பரபரப்பாக உச்சரிக்கப்பட்டது. 2018 ஜூன் 19 அன்று, ஐந்து தன்னார்வ தொண்டு ஊழியர்கள் பதல்கடி இயக்கத்துடன் தொடர்புடைய ஆயுதமேந்தியவர்களால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். ஜார்க்கண்டின் குந்தி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் அவர்கள் தெரு நாடகம் செய்து கொண்டிருந்தனர். பதல்கடி ஆதரவாளர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களை ‘டிக்கஸ்’ (வெளியாட்கள்) என்று முத்திரை குத்தினார்கள்.

ஜூன் 26 அன்று, குந்தி பகுதியில் உள்ளூர் பாஜக எம்.பி. கரியா முண்டாவின் வீட்டிலிருந்த மூன்று பாதுகாப்புப் படையினரை ஆயுதமேந்திய பதல்கடியினர் கடத்திச் சென்றனர். பதல்கடி குழுக்கள் ஜார்க்கண்டின் குந்தி, கும்லா, சிம்டேகா மற்றும் மேற்கு சிங்பம் ஆகிய மாவட்டங்களில் தீவிரமாகச் செயல்பட்டன.
பதல்கடி இயக்கம் சார்பில் ஜார்க்கண்டின் 200க்கும் மேற்பட்ட கிராமங்களில் கல் தகடுகள் மற்றும் அடையாள பலகைகள் வைக்கப்பட்டன. அந்தக் கல் உத்தரவுகள் பழங்குடியினருக்கு எதிரான மத்திய அல்லது மாநில அரசுகளின் உத்தரவுகளை நிராகரித்தன. இவை வெளிநபர்களுக்கு எச்சரிக்கையாக வைக்கப்பட்டன. ‘ஜல், ஜங்கிள் மற்றும் ஜமீன் அதாவது நீர், காடு மற்றும் நிலம் ஆகியவை பழங்குடியினருக்கே சொந்தம் என்பதற்காகத்தான் பதல்கடி இயக்கம். கடந்த பாஜக ஆட்சியில் இந்த பதல்கடி இயக்கத்தினர் என்ற வகையிலும், இந்த இயக்கத்தினர் என முத்திரை குத்தப்பட்டும் ஏராளமான பழங்குடியினர் மீது வழக்குகள் போடப்பட்டன.
இந்த நிலையில்தான், முதல் அமைச்சரவை முடிவில், ஹேமந்த் சோரன் அரசாங்கம் 2017-2018ஆம் ஆண்டில் பதல்கடி இயக்கத்தின்போது மக்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஞாயிற்றுக்கிழமை கைவிட்டது, அதே போல் ரகுபர் தாஸ் அரசாங்கம் சோட்டானக்பூர் மற்றும் சந்தால் பரக்னா குத்தகை சட்டங்களை மாற்ற முயற்சி செய்ததைத் தொடர்ந்தது மக்கள் கடுமையாகப் போராடினார்கள். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை ஜார்க்கண்ட் பழங்குடியினருக்கு பெரும் ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக