திங்கள், 30 டிசம்பர், 2019

நெல்லை கண்ணன் கைதாகிரரா.. மோடி, அமித் ஷாவை சோலியை முடிச்சுடுவீங்கன்னு பார்த்தேன்... வில்லங்க வீடியோ .


மின்னம்பலம் : மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இந்தியா முழுதும் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மற்ற மாநிலங்களில் வன்முறைகள் வெடித்தாலும் தமிழகத்தில் அமைதியாக ஆர்பாட்டங்களும், பேரணிகளும் நடந்துகொண்டிருக்கின்றன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், பிரதமர் மோடிக்கும் உயிராபத்து ஏற்படுத்தும் அளவுக்கு நெல்லையில் எஸ்டிபிஐ நடத்திய குடியுரிமை மாநாட்டில் நெல்லை கண்ணன் பேசியிருக்கிறார் என்று டிஜிபியிடம் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இன்று (டிசம்பர் 30) புகார் அளித்திருக்கிறார்.
அப்படி நெல்லை கண்ணன் அந்த மாநாட்டில் என்ன பேசியிருக்கிறார்? நெல்லை கண்ணன் பொதுவாகவே தன் மேடைப் பேச்சில் அனைவரையுமே அவன், இவன் என்ற ஏக விகுதியோடுதான் குறிப்பிடுவார்.
கம்பராமாயணத்தில் கரைகண்ட நெல்லை கண்ணன் தனது ராமாயண சொற்பொழிவில் ராமன், ராவணன் உள்ளிட்ட பாத்திரங்களை அவன் இவன் என்று சொல்லியே பழக்கப்பட்டுவிட்டதாலோ என்னவோ... பொதுவான மேடைப் பேச்சுகளிலும் அனைவரையும் அவன் இவன் என்றே அழைப்பார். அண்மையில் தமிழக அமைச்சர்களையும் அவன், இவன் என்று ஒரு பேட்டியில் பந்தாடியிருந்தார் நெல்லை கண்ணன்.
இந்தப் பின்னணியில் டிசம்பர் 29 நெல்லையில் எஸ்டிபிஐ கட்சி நடத்திய குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார் நெல்லை கண்ணன். எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ,முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் ஹைதர் அலி ஆகியோர் மேடையில் இருக்க, அமர்ந்துகொண்டே பேசினார் நெல்லை கண்ணன். (அவர் தன் பேச்சில் குறிப்பிடும் அனைவரையும் அவன் இவன் என்றே பேசியிருந்தாலும் ஊடக அறம் கருதி நாம் அவர், இவர் என்றே குறிப்பிடுகிறோம்)
“நான் இந்துவல்ல. நான் சைவ சமயத்தைச் சேர்ந்தவன். அது தமிழர் சமயம். என் சாமிக்கும் உருவமில்லை. மாணிக்கவாசகர் சொல்கிறார், ஓர் உருவன் அல்லன் என்று. ஓ. பன்னீர் வெறும் 11 எம்.எல்.ஏ.க்களை வச்சிக்கிட்டுதான் இப்ப துணை முதல்வரா இருக்காரு. ராஜ்யசபாவுல இந்த குடியுரிமை சட்டத்தை நிறைவேத்துனவங்களும் அதிமுகவைச் சேர்ந்த 11 பேர்தான். எம்.ஜி.ஆரையும், ஜெயலலிதா பேரையும் சொல்ல அவங்களுக்கு தகுதியே இல்லை. மகாபாரதம், ராமாயணம் பொய் என்று பாரதியார் கூறியிருக்கிறார். நல்ல கவிதைகள் என்றாலும் பொய் என்று சொல்லியிருக்கிறார்.
மோடி பிரதமர். ஆனால் அமித் ஷாதான் அவருக்கு மூளை. சண்டியனே அமித் ஷாதான். அமித் ஷா சோலி முடிஞ்சிடுச்சுன்னா, இவர் சோலி முடிஞ்சுடுச்சு. அது ஒரு பக்கம். நீங்க ஒருத்தனும் முடிக்க மாட்டேங்கியலே... நீங்க ஏதாச்சும் பண்ணுவீங்கனு நானும் நினைச்சுக்கிட்டுதான் இருக்கேன். ஒண்ணும் நடக்கமாட்டேங்குது. ஒரு சாயபும் பண்ணித் தரமாட்டேங்குதான்” என்று ஆரம்பித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார் நெல்லை கண்ணன்.
இந்தப் பேச்சு பாஜகவினரிடம் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. ‘சோ லியை முடிக்கிறது’ என்றால் பொதுவான அர்த்தம் வாழ்க்கையை முடிப்பது என்பதே. எனவே நெல்லை கண்ணன் அமித் ஷாவை கொலை செய்யத் தூண்டும் வகையில் பேசியிருக்கிறார் என்று பாஜகவினர் சமூக தளங்களில் அந்த வீடியோவை பரவ விட்டிருக்கிறார்கள்.
ஒருபடி மேலே போய் பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, இதுகுறித்து தமிழக டிஜிபியிடம் புகார் அளித்திருக்கிறார். அவர் தன் பேஸ்புக் பக்கத்தில், “காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நெல்லை கண்ணன் மாண்புமிகு பிரதமர் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் இருவரையும் முஸ்லீம்கள் கொலை செய்ய வேண்டும் என்று தூண்டுகிறார். மாநில டிஜிபி அவர்களிடம் புகார் செய்துள்ளேன். எதுவும் அசம்பாவிதம் நடக்கும் முன் தமிழக அரசு அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நெல்லை கண்ணன் அப்படி பேசும்போது மேடையில் அவரைச் சுற்றி முன்னாள் வக்ஃப் வாரிய தலைவர் ஹைதர் அலி, எஸ்டிபிஐ தலைவர் முபாரக், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் ஆகியோர் அருகே அமர்ந்திருந்தனர். நெல்லை கண்ணன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த முபாரக் ஆகியோர் மீது பாஜக புகார் அளித்திருப்பதால் விரைவில் நெல்லை கண்ணன் கைது செய்யப்படுவார் என்கிறார்கள் நெல்லை வட்டாரத்தில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக