வியாழன், 21 நவம்பர், 2019

காங்கிரஸ் சிவசேனாவுடன் கூட்டணி ஆட்சி! ..சோனியா காந்தி சம்மதம்?

மராட்டியத்தில் திடீர் திருப்பம்: சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி சம்மதம்?தினத்தந்தி : மராட்டியத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி. மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர் அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது.


இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று பங்கேற்க  தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சிவசேனா ஆட்சி அமைக்கப்போவதாகக் கூறி வருகிறது அது எவ்வாறு செல்கிறது என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் ஆச்சரியம் தெரிவிக்கும் வகையில், அப்படியா பேச்சு நடத்துகிறார்களா எனக் கேட்டார். அவரது மழுப்பலான பதிலால்  மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த  நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், நாடாளுமன்ற வளாகத்தில் இன்று மதியம் 12.30 மணியளவில் சந்தித்துப் பேசினார். அப்போது மராட்டிய  விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொண்டனர்.

பிரதமருடனான சந்திப்பை தொடர்ந்து பாரதீய ஜனதா சிவ சேனா ஆதரவுடன் மராட்டியத்தில் ஆட்சி அமைக்கும் என  பரவலாக பேசப்பட்டது.

மராட்டியத்தில் சிவசேனாவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சித் தலைவர்கள் கே.சி.வேணுகோபால், மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரை மராட்டிய காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து பேசினர். கூட்டத்தில் பாலாசாகேப் தோரத், பிருத்விராஜ் சவான், நசீம் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சி  மராட்டிய  ஒருங்கிணைப்புக் குழு இன்று டெல்லியில் கூடியது. காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்த டெல்லியில் உள்ள தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின்  இல்லத்திற்கு வருகை தந்து உள்ளனர். காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்  சந்திப்புக்குப் பிறகு சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் சரத் பவாரை சந்தித்து பேச உள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக