வியாழன், 21 நவம்பர், 2019

மம்தா பானர்ஜி : பண மூட்டைகளோடு வரும் பாஜகவின் கூட்டாளி ஒவைசி ..


தினமலர் : கோல்கட்டா: முஸ்லிம்களின் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து பண மூட்டையுடன் வரும் சில தலைவர்கள் பாஜ.,வின் தோழர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் ,சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், திரிணமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், ''ஹிந்து மத அடிப்படைவாதிகள் போல, நாட்டில் முஸ்லிம் மக்களிடமும் ஒரு சில பயங்கரவாதிகள் உள்ளனர். ஹிந்து அடிப்படைவாதிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதுபோல், இந்த முஸ்லிம் பயங்கரவாதிகளிடம் இருந்தும் மேற்குவங்க மக்கள் விலகி இருக்க வேண்டும். இந்த முஸ்லிம் பயங்கரவாதம், ஐதராபாத்தில் இருந்து திணிக்கப்படுகிறது,'' என்றார்.
இதற்கு ஏ.ஐ.எம்.ஐ.எம்., கட்சித் தலைவரும், ஐதராபாத் எம்பி.,யுமான அசாதுதீன் ஓவைசி, ''மம்தா பானர்ஜி மேற்குவங்கத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்களுக்கு ஒரு தகவலை கூறியுள்ளார். அந்த மாநிலத்தில் எங்கள் கட்சி அசைக்க முடியாத சக்தி என்பதால் பயப்படுகிறார்'' எனக் கூறினார். இதனால் இருகட்சிகள் இடையே அரசியல் மோதல் வலுத்தது.


இந்நிலையில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட மம்தா, மீண்டும் ஓவைசியை தாக்கி பேசினார்.
 மம்தா பேசியதாவது: வெளியில் இருந்து வந்து முஸ்லிம் மக்களின் காவலர்களாக காட்டிக்கொள்ளும் தலைவர்களை நம்பக்கூடாது. மேற்குவங்கத்தை சேர்ந்த தலைவர்களால் மட்டுமே உங்களுக்காக போராட முடியும். முஸ்லிம்களின் காவலர்கள் எனக் கூறிக் கொண்டு ஐதராபாத்தில் இருந்து பண மூட்டையுடன் வரும் சில தலைவர்கள் பாஜ.,வின் தோழர்கள் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் விஷயத்தில் முஸ்லிம் மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு மம்தா பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக