செவ்வாய், 26 நவம்பர், 2019

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பேட்டி : இந்திய பாதுகாப்புக்கு பாதகமான எதையும் செய்யப்போவதில்லை ... வீடியோ


வீரகேசரி :  இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எந்த காரியத்தையும் இலங்கை செய்ய போவதில்லை ; ஜனாதிபதி கோத்தாபயவின் முதல் நேர்காணலின் முழுவடிவம்"
இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமான எந்த காரியத்தையும் இலங்கை செய்ய போவதில்லை ; ஜனாதிபதி கோத்தாபயவின் முதல் நேர்காணலின் முழுவடிவம் நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் தனது அரசாங்கம் பணியாற்றும் என்றும் இந்தியாவின் நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்தையும் செய்யப் போவதில்லை என்றும் கூறியிருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ , இலங்கை நடுநிலையாக செயற்படுவதையே தான் விரும்புவதாகவும் வல்லரசு நாடுகளின் அதிகார சண்டைகளுக்குள் தான் அகப்படுவதை விரும்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் தடவையாக ‘ பாரத்சக்தி ‘ என்ற இணையதள செய்தி சேவையின் பிரதம ஆசிரியர் நிதின் ஏ.கோகலேவுக்கு வழங்கியிருக்கும் விரிவான நேர்காணல் ஒன்றில் இதைத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ,

‘ சகல நாடுகளுடனும் சேர்ந்து பணியாற்றவே நாம் விரும்புகின்றோம். எனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் சீனாவுடனான இலங்கையின் நெருங்கிய ஈடுபாடு வெறுமனே வர்த்தக நோக்கிலானது. அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 வருட குத்தகைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும்,   பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் அரசாங்கம் கொடுத்தது ஒரு தவறு. அது தொடர்பான உடன்படிக்கையை மீள பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த வேண்டியிருக்கிறது. ” என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதியின் விரிவான நேர்காணலில் முக்கியமான அம்சங்களை கேள்வி , பதில் வடிவில் கீழே தருகின்றோம்.
கேள்வி : பிராந்தியத்தியத்திலுள்ள சகல வல்லாதிக்க நாடுகளுடனும் சம அளவு தூரத்தில் இருக்க போவதாகவும், நடுநிலையாக இருக்க போவதாகவும் ஜனாதிபதியான வந்தவுடன் நீங்கள் கூறினீர்கள். தேசிய பாதுகாப்பு உங்களுடைய முன்னுரிமைக்குரிய விடயமாக இருக்கிறது. யாருடன் அனுசரித்து நிற்கிறீர்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் தேசிய முன்னுரிமைக்குரிய விடயத்தில் நீங்கள் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். இலங்கையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு போட்டி நிலவுகிறது என்பது பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில் : நாம் ஒரு நடுநிலையான நாடாக இருக்க விரும்புகின்றோம்என்பதை எனது பதவியேற்பு நிகழ்வின் போது கூட குறிப்பிட்டேன். இதற்கு உலகில் உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் தற்போதைய புவிசார் அரசியலில் இந்து சமுத்திரம் மிகவும் முக்கியமான ஒரு பங்கை வகிக்கிறது என்பதை எல்லோரும் அறிவீர்கள். இலங்கை புவியியல் ரீதியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அமைவிடயத்தில் இருக்கிறது. இலங்கைக்கு கிழக்கிலிருந்து மேற்கிற்கு சகல கடற் பாதைகளும் நெருக்கமாகவே கடந்து செல்கின்றன. இந்த கடல் பாதைகளின் முக்கியத்துவத்தை நீங்கள் அறிவீர்கள். குறிப்பாக ஆசிய நாடுகள் அபிவிருத்தியடையும் போது அவற்றின் உற்பத்திகளை உலக நாடுகளுக்கு எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. அதே வேளை அபிவிருத்தி அடையும் போது எரிபொருள் தேவைப்படுகிறது. அந்த எரிபொருள் மத்திய கிழக்கிலேயே இன்னமும்இருக்கிறது. அங்கிருந்தே எரிபொருள் வந்தாக வேண்டும். கனிய வளங்கள் ஆபிரிக்காவில் இருக்கின்றன. அவையும்அங்கிருந்து எமக்கு கிடைக்கின்றன. இது மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அந்த கடற் பாதைகள் உலகம் முழுவதற்கும் சுதந்திரமானதாக இருக்க வேண்டும். இக்கடற்பாதைகளை எந்தவொரு நாடும் கட்டுப்படுத்தக் கூடாது.
அதன் காரணத்தினால் தான் நடுநிலை என்பது பற்றி நான் கூறினேன். நாம் ஒரு நாட்டுடன் சேர்ந்து கொண்டு செயற்பட விரும்பவில்லை. இலங்கை ஒரு சிறிய நாடு என்ற வகையில் ஏதாவதொரு நாட்டுடன் இணைந்து செயற்படுவது என்பது பிரச்சினையானது. வல்லரசுகளின் அதிகார சண்டைக்குள் அகப்பட்டுக் கொள்ள நாம் விருமபவில்லை. அடிப்படையில் நாம் சகல நாடுகளுடனும் சேர்ந்து பணியாற்றவே விரும்புகின்றோம். எந்தவவொரு நாட்டுக்கும் பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு செயலையும் செய்வதற்கு நாம் விரும்பவில்லை.
இந்தியாவின் அக்கறைகளின் முக்கியத்துவத்தை நாம் விளங்கிக் கொள்கின்றோம். இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடிய நடவடிக்கைகளில் எம்மால் ஈடுபட முடியாது. இந்த பிராந்தியத்தில் நாம் இருக்கின்றோம். இங்கு இந்தியாவே பெரிய வல்லரசு. மற்றைய நாடுகளின் கருத்துக்களையும் விளங்கிக் கொண்டு அதன் பிரகாரம் நாம் செயற்பட வேண்டியிருக்கிறது. இன்று சகலரும் விரும்புவதும் சகலருக்கும் முக்கியமாக தேவைப்படுவதும் பொருளாதார அபிவிருத்தியேயாகும்.
அந்த பொருளாதார அபிவிருத்தியை அடைவதற்கு நாம் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அல்லது மட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவாக இருக்க விரும்புகின்றோம். எமது நாட்டை , எமது தொழிற்துறைகளை எமது வணிகத்தை பாதுகாக்கும் அதே வேளை திறந்த போக்கையும் கடைபிடிக்க வேண்டும். உலகின் பொருளாதாரத்தில் ஈடுபாடு காட்டுவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். அதன் காரணத்தினால் தான் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, சீனா , ஜப்பான் ஆகிய நாடுகளிடம் இருந்து உதவியைப் பெற விரும்புகின்றோம். இது முக்கியமானதாகும். ஆனால் யதார்த்த நிலைக்கும்  நாம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது.
சீனாவுடனான எமது ஈடுபாட்டை பொறுத்த வரையில் குறிப்பாக மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் அந்த ஈடுபாடு வெறுமனே வர்த்தக நோக்கத்திலானதாகும். ஆனால் ஆரம்பத்தில் இருந்தே உலக ஆய்வாளர்களும் அவதானிகளும் அந்த மண்டலத்துக்குள் எம்மை வைத்துவிட்டார்கள். அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பொறுத்தவரையிலும் கூட இந்தியாவை சுற்றி வளைக்கின்ற முத்து மாலையின் ஒரு பகுதியாக அந்த துறைமுகத்தை காண்பிக்க அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால் எமது திட்டங்களின்படி அது அவ்வாறில்லை. துறைமுகத்தின் கட்டுப்பாட்டை நாம் சீனாவுக்கு ஒருபோதும் கொடுக்க கூடாது.
கேள்வி : ஆம். ஆனாலும் துரதிஷ்டவசமாக முன்னைய அரசாங்கம்  ?
பதில் : முன்னைய அரசாங்கம் 99 வருட குத்தகைக்கு அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுத்துவிட்டது. சீனா எங்களது நல்ல நட்பு நாடு என்ற போதிலும் கூட , எமது அபிவிருத்திக்கு சீனாவின் உதவி தேவை என்ற போதிலும் கூட அது ஒரு தவறு என்று கூறுவதற்கு நான் பயப்படவில்லை. மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி எமக்கு உதவ சிறந்ததொரு உடன்படிக்கைக்கு வருமாறு நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பேன்.
அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடக்படிக்கை குறித்து மக்கள் அதிருப்தி  அடைந்திருக்கிறார்கள். நாம் எதிர்காலத்தை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. என்ன நடக்கும் ? முதலீட்டுக்காக ஒரு சிறிய நிலத்தைக் கொடுப்பது வேறு விடயம். வர்த்தக சொத்தையோ அல்லது ஹோட்லையோ அமைக்க அனுமதிப்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் கேந்திர முக்கியத்துவம் உடைய ஒரு துறைமுகத்தை அவ்வாறு  கொடுப்பது ஏற்புடையதல்ல. அதன் கட்டுப்பாடு எம்மிடம் இருக்க வேண்டும். நாம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கிறது. மிகவும் முக்கியமான ஒரு இடத்தின் கட்டுப்பாட்டை கையளிப்பது ஏற்புடையதல்ல. அதுவே எனது நிலைப்பாடு. இந்தியாவுடன் நெருக்கமாக பணியாற்ற நாம் விரும்புகின்றோம்.
அத்துடன் சீனாவுடன் சேர்ந்து பணியாற்றவும் நாம் விரும்புகின்றோம். இராஜ தந்திர உறுவுகளும் பொருளாதார உறவுகளும் எல்ல இடத்திலும் காணப்படுகின்றன. சீனாவுடன் நெருக்கமாக இந்தியா செயற்படுகிறது. இந்தியாவின் முதலீடு சீனாவுக்கு செல்கிறது என்பதை நான் அறிவேன். சீனாவின் முதலீடும் இந்தியாவுக்கு வருகிறது. அதே போன்றே நாமும் முதலீடுகளையும் உதவிகளையும் விரும்புகின்றோம். ஆனால் நாம் இராணுவ ரீதியிலோ புவிசார் அரசியல் போட்டா போட்டியிலோ சம்பந்தப்பட்டு; கொள்ள விரும்பவில்லை.
இந்தியா , சிங்கப்பூர், ஜப்பான் , அவுஸ்திரேலியா போன்ற உலக நாடுகளுக்கு நான் ஒரு விடயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன். சீனாவின் ஈடுபாடு குறித்து அந்த நாடுகள் அஞ்சுகின்றன என்பNது யாதார்த்தம். ஆனால் உண்மையில் எமது நோக்கம் வர்த்தக ரீதியானதே. இலங்கையில் வந்து முதலீடு செய்யுமாறு இந்தியா , சிங்கப்பூர், ஜப்பான் ,அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளை அழைக்கின்றேன். சீனா மாத்திரம் முதலீடு செய்வதற்கு அனுமதிக்காதீர்கள். இந்த நாடுகளின் அராங்கங்கள் அவற்றின் தனியார் கம்பனிகளை இலங்கையில் வந்து முதலீடு செய்யுhமறு உற்சாகபடுத்த வேண்டும். ஒரு நாட்டை முதலீடு செய்ய அனுமதித்து விட்டு மனம் குமுற கூடாது. அதனால் நான் பகிரங்கமாகவே கூறுகின்றேன். இலங்கையில் வந்து இந்த நாடுகள் முதலீடு செய்வதை நான் விரும்புகின்றேன். இலங்கை ஒரு சிறிய நாடு. பெரிய நாடுகளின் போட்டா போட்டிக்குள் அகப்படுவதற்கு நான் விரும்பவில்லை. தயவு செய்து அதை விளங்கிக் கொள்ளுங்கள்.
எம்மீது நெருக்குதல்களை பிரயோகிப்பதை விடுத்து எம்மை கொண்டு எமது பொருளாதார அபிவிருத்திக்கு உதவுகின்ற செயற்பாடுகளில் ஈடுபடுங்கள். பல வழிகள் இருக்கின்றன. பணத்தை மாத்திரம் நான் கூறவில்லை. எமது உற்பத்திகளை நீங்கள் கொள்வனவு செய்யுங்கள். எம்மிடம் தேயிலை, கருவா, மிளகு, தெங்கு ஆகியவை இருக்கின்றன. விவசாயத்துறையில் எமக்கு நீங்கள் உதவ முடியும். கல்வித்துறை இருக்கிறது. உயர் தொழிநுட்ப கம்பனிகள் அதில் முதலீடு செய்யலாம். நிச்சயமாக நான் அதிகாரிகளின் கெடுபிடிகளை இல்லாமல் செய்ய விரும்புகின்றேன். நாட்டின் நன்மைக்காக பழைய கட்டங்கள் ஒழுங்கு  விதிகளில் இருக்கக் கூடிய சிக்கல் தன்மையை இல்லாமல் செய்ய நான் விரும்புகின்றேன். முதலீட்டுக்கு வசதியான சூழ்நிலையை நான் உருவாக்குவேன்.
இந்தியாவிடம் பேசவிருக்கும் விடயங்கள்
கேள்வி : நீங்கள் கூறிய இந்த விடயங்கள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவை. ஆனால் இவ்வாரம் இந்தியாவுக்கு நீங்கள் செல்லவிருக்கிறீர்கள். அங்கு நீங்கள் இந்திய தவைர்களுடன் பேசக் கூடிய சில விடயங்களை கூறுங்கள் ?
பதில் : ஒரு நட்பு நாடு என்ற வகையில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்றுவோம் என்பதை இந்திய அரசாங்கத்துக்கு மீண்டும் நான் உறுதியாகக் கூறுவேன். இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்கு பாதகமாக அமையக் கூடிய எந்தவொரு காரியத்திலும் நாம் ஈடுபட மாட்டோம். பலதுறைகளில் முதலீடுகளை செய்து எமக்கு உதவுமாறு நான் அவர்களிடம் வேண்டுகோள் விடுப்பேன். கல்வித்துறையிலும் தொழிநுட்பட அபிவிருத்தியிலும் எமக்கு உதவுமாறு கேட்பேன். அது முக்கியமானதாகும். தற்போதைய இந்திய அரசாங்கமும் பிரதமர் நரேந்திர மோடியும் அயல் நாடுகளுடனான அணுகுமுறைகளை மாற்றிக் கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன்.
கேள்வி : நீங்கள் இந்தியாவில் பேசுவதற்கு பெருமளவு விடயங்கள் இருக்கின்றன. இந்திய தலைவர்களுடன் சிறப்பான பேச்சுவார்த்தைகளை நடத்துவீர்கள் என்று நம்புகின்றேன். இறுதியாக 2 கேள்விகள். ஒன்று ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்த வாக்களித்த விதம், தமிழர்களும் முஸ்லிம்களும் உங்களுக்கு வாக்களித்திருந்தால் நீங்கள் மகிழச்சியடைந்திருப்பீர்கள் என்றும், எனினும் நீங்கள் தெரிவு செய்யப்பட்டுவிட்டீர்கள் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தீர்கள். முழு நாட்டுக்குமே நீங்கள் ஜனாதிபதி என்றும் கூறியிருந்தீர்கள். சிறுபான்மை இனத்தவருடனான நல்லிணக்க செயற்முறைகளை எவ்வாறு முன்னெடுப்பீர்கள் ?
நல்லிணக்கத்துக்கான ஒரே வழி அபிவிருத்தியே
பதில : அபிவிருத்தியே அதற்கு ஒரே வழி என்பதே எனது நம்பிக்கை. கடந்த பல வருடங்களாக தமிழ் அரசியல் தலைவர்களும் சிங்கள தலைமைகளும் கூட நடைமுறை சாத்தியமற்ற விடயங்களை பேசிக் கொண்டிருந்தார்கள். மக்களை முட்டாள்களாக்குவதற்கே முயற்சித்தார்கள். எம்மால் செய்யக் கூடியவற்றின் மீதே நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நாட்டில் இலங்கையராக வாழ்வதற்கு ஒவ்வொருவருக்கும் நல்ல சந்தர்ப்பத்தை வழங்க வேண்டும். நல்ல கல்வியை வழங்க வேண்டும். அதற்கும் சிறப்பான வாழ்வைப் பெறுவதற்கு; நல்ல தொழில் வாய்ப்பைப் பெறுவதற்கும் கண்ணியமாக வாழ்வதற்கும் நல்ல வாய்ப்புக்களை கொடுக்க வேண்டும். அதற்கான உகந்த சூழலை நான் உருவாக்குவேன்.
ஏனைய அரசியல் விடங்களை யும் முன்னெடுக்கலாம். அவற்றை பற்றியும் பேசலாம். ஆனால் மக்களின் நல்வாழ்வை அலட்சியம் செய்து அந்த அரசியல் விடயங்களில் மாத்திரம் கவனம் செலுத்த முடியாது. நாட்டையும் அதன் பகுதிகளையும் உட்கட்டமைப்பு அபவிருத்திகளையும் மேம்படுத்துவது முக்கியமானதாகும். எம்மால் முடிந்ததை நாம் செய்தோம். அந்த பகுதிகளில் கூடுதல் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு கல்வியை மேம்படுத்துவதற்கும் தனியார் தொழிற்துறை செயற்பாடுகளை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி என்று நான் குறிப்பிடும் போது பொதுவான கல்வியைக் கூறவில்லை. தொழிற் கல்வியையும் விருத்தி செய்ய வேண்டும். நீண்ட காலமாக பாடசாலை செல்வதற்கே வாய்ப்பை பெறாத காடுகளில் சண்டையிட்டுக் கொண்டிருந்தவர்கள் இப்போது அவர்களுக்கு சிலவகையான பயிற்சிகளைக் கொடுத்து அவர்களின் ஆற்றல்களை மேம்படுத்தவும் குறிப்பிட்ட சில தொழில் வாய்ப்புகளை அவர்கள் பெறுவதற்கும் நாம் வகை செய்ய வேண்டும்.இந்த தொழில் வாய்ப்புகளை உருவாக்கிவரும் சமமான தொழில் வாய்ப்புகளை பெருவதற்கும் அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதே எமது கவனத்திற்குறிய விடயங்கள்.
கேள்வி: இறுதிகேள்வி நீங்கள் ஒரு எதேச்சதிகாரி அல்லது சிங்கள இனவாதித்தலைவர் என்பது மேற்கு நாடுகள் உங்களைப்பற்றி ஏற்படுத்திய படிமம். நீங்கள் அதிகாரத்துக்கு வருவதைக் கண்டு முஸ்லிம்கள் அஞ்சினார்கள் அவர்களுக்கு எவ்வாறு நம்பிக்கையூட்டப் போகின்றீர்கள்?
நான் இனவெறியன் அல்ல
பதில்: நான் நினைக்கிறேன் என்னைப்பற்றி எதேச்சதிகாரி அல்லது சிங்கள இனவெறித் தலைவர் என்று ஏற்படுத்தப்பட்ட படிமம் போர்காலத்தின் போது உருவாக்கப்பட்ட தவறான எண்ணமாகும்.20 வருடங்களாக நான் இராணுவத்தில் இருந்தது உண்மைதான்.ஒரு இராணுவ அதிகாரி என்ற வகையில் பயங்கரவாதத்திற்கு எதிராக நான் போராடினேன்.பிறகு இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்று வெளிநாடு சென்றேன்.சுமார் 12 வருடங்கள் அமெரிக்காவில் வாழ்ந்தேன்.பிறகு திரும்பி வந்து பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினேன்.
ஆனால் அப்போது பாதுகாப்பு செயலாளராக மாத்திரமே மக்கள் என்னை அடையாளம் கண்டனர்.அதன்காரணத்தினால் தான் என்னை ஒரு எதேச்சதிகாரி என்று அவர்கள் நினைக்கிறார் போல. நான் ஒரு ஒழுக்க கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கின்ற மனிதன். அதற்காக நான் எந்தவொரு சமூகத்திற்கும் எதிரானவன் என்று அர்த்தப்படாது.நான் ஒரு இன வெறியன் அல்ல என்பதை எனது நடவடிக்கையின் ஊடாக நிரூபித்திருக்கிறேன்.சமுதாயத்தில் ஒரு பிரிவினருக்காக மாத்திரம் நான் செயற்படுவதில்லை.அதன் காரணத்தினால்தான் நாட்டை முன்னேற்றும் பணியில் எம்முடன் இணையுமாறு தமிழர்களையும் முஸ்லிம்களையும் அழைத்தேன்.
சர்வாதிகாரியல்ல
எதிரணியினர் என்னை ஒரு சர்வாதிகாரி அல்லது எதேச்சதிகாரி என்று காட்டியிருக்கலாம்.ஈனால் நான் அவ்வாறானவனல்ல. எனது நடவடிக்கையில் மக்கள் அதைக் காண்பார்கள்.ஆனால் என்னுடன் இணையுமாறு அவர்களிடம் கூற விரும்புகிறேன்.அதேவேளை வதந்திகளையும் ஊர்கதைகளையும் கேட்டு பிரசாரங்களை செய்ய வேண்டாம் என்று ஊடகங்களை விசேடமாக கேட்டுக் கொள்ள விரும்புகின்றேன்.என்னை விளங்கிக் கொள்ளுங்கள். என்னுடன் பேசுங்கள் என்னை சந்தியுங்கள் நான் எவ்வாறு செயற்படுகின்றேன் என்பதை பாருங்கள் .என்னைப்பற்றி சரியான படிமத்தை போடுங்கள்.இது ஒரு சிறிய நாடு, வளர்ந்து வருகின்ற நாடு எங்களுக்கு ஆட்கள் உதவவேண்டும்.எனது வழியில் தடைகளை போடக்கூடாது. அது எவருக்குமே உதவப்போவதில்லை.
கேள்வி: போரின் இறுதிகட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமைமீறல்கள் குறித்து உங்களது அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும், சில சந்தரப்பங்கபளில் உங்களுக்கு எதிராகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன அதைப்பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்:போர் என்பது ஒரு மலர் படுக்கை அல்ல என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.உள்நாட்டு பாராக இருந்தால் என்ன? அமெரிக்கர்களும் பிரிட்டிஷ் காரர்களும் ஈராக்கிற்கு அல்லது ஆப்கானிஸ்தானுக்கு வந்து நடத்துகின்ற போராக இருந்தாலும் இதுவே உண்மை. போர் எங்குமே மென்மை வாய்ந்ததாக இருப்பதில்லை. ஆனால் இலங்கை ஒரு வறிய நாடு நாம் அதிகாரம் குறைந்தவர்கள். அதனால் எமக்கு எதிரான விடயங்கள் வெளிச்சம் போட்டு காணப்படுகின்றன.அவ்வாறு செய்வது நேர்மையானதல்ல.நாம் ஒரு பௌத்த தேசத்தை சேர்ந்தவர்கள். மிகவும் அமைதியான நாட்டவர்கள்.பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றை கொண்டவர்கள். நாம்வளமான ஒரு கலசாரத்தையும் பண்பு விழுமியங்களையும் கொண்டவர்கள்.
கேள்வி : எனவே இங்கு வாழ்வு மிகவும் அமைதியானதாக இருக்கும் என்று கூறுகிறீர்கள் ?
புலம்பெயர் தமிழர்களிடம் வேண்டுகோள்
பதில் : ஆம். புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தவர்களும் பழைய விடயங்களை மறந்துவிடுமாறு கேட்டு;க கொள்கின்றேன். கண்டிப்பதனால் எவரும் பயனடைவதில்லை. அதைவிடுத்து எமது நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இன, மத, பேதங்களுக்கு அப்பால் எமது நாட்டு மக்களுக்கு உதவுவதற்கு நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். சிறுபாண்மை இனத்தவர்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடிய சில குறிப்பிட்ட விடயங்களை செய்யும் போது பெரும்பாண்மை சமூகத்தவரும் தஙடகளது எதிர் வினையைக் காட்டுவார்கள். சிறுபான்மை இனத்தவர்களுக்கு சமத்துவமான உரிமைகள் இருக்கின்றன. ஆனால் சில குறிப்பிட்ட காரியங்களை அவர்கள் செய்ய கூடாது. யதார்த்த நிலையை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். முன்னேரிய சமூகங்கள் என்ஞ சொல்லப்படுகின்ற வற்றிலும் கூட அவர்கள் என்னதான் முன்னோக்கி நகர்ந்திருந்தாலும் இத்தகைய பிரச்சினைகள் அங்கும் இருக்கத்தான் செய்கின்றன.
கேள்வி : சமூகங்களுக்கிடையில் எப்போதும் வேறுபாடுகள் இருக்கவே செய்யும் ?
பதில் : நாம் அதை விளங்கி; கொள்ள வேண்டும்.
virakesari.lk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக