புதன், 13 நவம்பர், 2019

காங்கிரஸ் : மகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்..

tamil.samayam.com : மகாராஷ்டிர ஆளுநரின் நான்கு மாபெரும் தவறுகள்...பட்டியலிட்டு விளாசும் காங்கிரஸ்!!
மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதன் மூலம், ஜனநாயத்தையும், அரசமைப்புச் சட்டத்தையும், அந்த மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி கேலிக்கூத்தாக்கிவிட்டார் என்று காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.
மேலும், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதற்கு முன், மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான வழிமுறைகளை கண்டறியாமல், நான்கு மாபெரும் தவறுகளையும் அவர் இழைத்துவிட்டார் என்றும் காங்கிரஸ் சாடியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆட்சியமைக்க உரிமைக் கோர, தேசியவாத காங்கிரஸுக்கு செவ்வாய்க்கிழமை இரவு 8:30 மணி வரை (24 மணி நேரம்) அந்த மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி அனுமதி அளித்துள்ளார் என திங்கள்கிழமை இரவு தகவல்கள் வெளியாகின.
ஆனால், மகாராஷ்டிர அரசியலில் மற்றொரு திடீர் திருப்பமாக, குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் இன்று மதியம் பரிந்துரைத்தார்.
அவரது பரிந்துரையை ஏற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, இதுதொடர்பான தங்களது ஒப்புதலை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது. மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று, மகாராஷ்டிராவில் உடனடியாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.


பொதுவாக, ஒரு மாநிலத்தில் மிகவும் அசாதாரண சூழல் நிலவும்போது அமல்படுத்தப்படும் குடியரசுத் தலைவர் ஆட்சி (சட்டப்பிரிவு 356), மகாராஷ்டிராவில் இன்று சர்வசாதாரணமாக, மின்னல் வேகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது.

மின்னல் வேகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்...சிவசேனாவின் கோரிக்கைக்கு 'நோ' சொன்ன உச்ச நீதிமன்றம்!!

இதனை உறுதிப்படுத்தும் வகையில், மகாராஷ்டிர மாநில ஆளுநரின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது.

அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, இதுதொடர்பாக இன்று வெளியிட்டுள்ள தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது:
மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களை வென்ற, தேர்தலுக்கு முந்தைய கூட்டணி என்ற முறையில், பாஜக -சிவசேனா கூட்டணியை ஆட்சியமைக்க முதலில் ஆளுநர் அழைப்பு விடுத்திருக்க வேண்டும்.

அதற்கு வாய்ப்பில்லாதபட்சத்தில், தேர்தலுக்கு பிந்தைய பெரிய கூட்டணி என்ற முறையில் காங்கிரஸ் -தேசியவாத காங்கிரஸ் அணியை ஆட்சியமைக்க அழைத்திருக்க வேண்டும்.

இதைவிடுத்து, கட்சிகளின் தனிப்பெரும் எம்எல்ஏக்கள் பலத்தின் அடிப்படையில் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதன்படி பார்த்தாலும், பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை அழைத்த அவர், காங்கிரஸுக்கு மட்டும் ஆட்சியமைப்பதற்கான உரிமை கோர ஏன் வாய்ப்பு அளிக்கவில்லை?

மத்திய அரசின் கைப்பாவையா ஆளுநர்? மகாராஷ்டிராவில் ஏன் இவ்வளவு அவசரம்!

அத்துடன், பாஜக ஆட்சியமைக்க 48 மணி நேர கால அவகாசம், சிவசேனாவுக்கு 24 மணி நேரம் அவகாசம் அளிக்க முடிந்த ஆளுநரால், தேசியவாத காங்கிரஸுக்கு மட்டும் 24 மணி நேரம் கூட அவகாசம் அளிக்க முடியாமல் போனது ஏன்? என சுர்ஜேவாலா அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளார்.

மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி இப்படி அரசியல் உள்நோக்கத்துடன், நேர்மையற்று வெட்கக்கேடாக செயல்பட்டுள்ளதன் மூலம் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்றும் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக