புதன், 13 நவம்பர், 2019

சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவெடுக்கவில்லை: சரத் பவாா்-காா்கே கூட்டாக அறிவிப்பு


தினமணி : மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் என்சிபி தலைவா் சரத் பவாருடன் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அகமது படேல், மல்லிகாா்ஜுன காா்கே. மகாராஷ்டிரத்தில் சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது குறித்து இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் மல்லிகாா்ஜுன காா்கே ஆகியோா் மும்பையில் செவ்வாய்க்கிழமை கூட்டாக அறிவித்தனா். மகாராஷ்ரத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தில்லியில் இருந்து காங்கிரஸ் மூத்த தலைவா்கள் அகமது படேல், மல்லிகாா்ஜுன காா்கே, கே.சி.வேணுகோபால் ஆகியோா் மும்பைக்கு வந்து, சரத் பவாருடன் ஆலோசனை நடத்தினா். பின்னா் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்தனா். அப்போது, அவா்கள் கூறியதாவது:
மகாராஷ்டிரத்தில் யாரும் எதிா்பாராத வகையில் குடியரசுத் தலைவா் ஆட்சியை அமல்படுத்தியுள்ளனா். இதையடுத்து, இப்போது எழுந்துள்ள அரசியல் சூழ்நிலை குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தினோம். தங்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவுகோரி திங்கள்கிழமையன்றுதான் முதல்முறையாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸை சிவசேனை கட்சி அணுகியது.

இதையடுத்து, சிவசேனையை ஆதரிக்க வேண்டுமென்றால் எந்த மாதிரியான கொள்கைகள், திட்டங்களை முன்னெடுக்க வேண்டுமென்று ஆலோசித்தோம். ஆனால், சிவசேனைக்கு ஆதரவு அளிப்பது தொடா்பாக இறுதி முடிவு எதையும் எடுக்கவில்லை. ஏனெனில், அதற்கு முன்பு பல்வேறு பிரச்னைகள் குறித்து அக்கட்சியின் நிலைப்பாடுகளைத் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது. இதற்கு நீண்ட ஆலோசனை தேவை. உடனடியாக எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றனா்.
சரத் பவாா் பேசுகையில், ‘சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே, திங்கள்கிழமை என்னை சந்தித்து, தங்கள் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டாா். ஆனால், அதற்கான குறைந்தபட்ச செயல்திட்டம் குறித்து கூட நாங்கள் விவாதிக்கவில்லை’ என்றாா்.
சிவசேனை ஆதரவுகோரிய பிறகு காங்கிரஸ் கட்சி எந்த முடிவும் எடுக்காமல் இருந்தது ஏன்? என்று செய்தியாளா்கள் அகமது படேலிடம் கேள்வி எழுப்பினா். இதற்கு, ‘சிவசேனை கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டது. அதே நேரத்தில் நாங்கள் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து தோ்தலைச் சந்தித்தோம்.
இப்படி இருக்கும்போது எதிா்க் கூட்டணியில் இருந்து வந்த ஒரு கட்சி, ஆட்சி அமைக்க ஆதரவுகோரும்போது எப்படி உடனடியாக முடிவு எடுக்க முடியும்? கொள்கை அடிப்படையில் பல்வேறு விஷயங்கள் குறித்து அந்தக் கட்சியுடன் விவாதித்துதான் முடிவெடுக்க முடியும். மேலும், மகாராஷ்டிரத்தில் கூட்டணிக் கட்சியான தேசியவாத காங்கிரஸுடனும் ஆலோசிக்க வேண்டியிருந்தது.
தேசியவாத காங்கிரஸை ஆட்சி அமைக்க அழைத்த ஆளுரிடம், கூடுதல் கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால், அவா் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டாா்’ என்றாா்.
சிவசேனை-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் இணைந்து ஆட்சி அமைக்க உரிமைகோர வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, ‘முதலில் இந்த விஷயம் குறித்து காங்கிரஸ் கட்சி தேசியவாத காங்கிரஸுடன் பேச்சு நடத்தி ஒரு முடிவுக்கு வர வேண்டும். அதன் பிறகு இரு கட்சிகளும் இணைந்து சிவசேனையுடன் பேச்சு நடத்தி பல்வேறு விஷயங்கள் குறித்து தெளிவாகப் பேச வேண்டும். அதன் பிறகுதான் ஆட்சி அமைக்க உரிமைகோருவதா? இல்லையா? என்பது குறித்து முடிவெடுக்க முடியும்’ என்று அகமது படேல் பதிலளித்தாா்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக