செவ்வாய், 5 நவம்பர், 2019

பாஜகவில் இணைந்த கமல் கட்சி வேட்பாளர்கள்! இவ்விடம் ஆள் பிடித்து கொடுக்கப்படும் .. மய்யம் ஏஜென்சி

மின்னம்பலம் :மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பாக
போட்டியிட்ட 3 வேட்பாளர்கள் பாஜகவில் இன்று இணைந்தனர்.
2018ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மக்கள் நீதி மய்யம் கட்சியைத் துவங்கிய நடிகர் கமல்ஹாசன், ஏப்ரல் மாதம் நடந்த மக்களவைத் தேர்தலை, சிறிய கட்சிகளுடன் இணைந்து சந்தித்தார். கமல்ஹாசனின் வேட்பாளர் தேர்வே வித்தியாசமாக இருந்தது. மக்கள் நீதி மய்யத்தின் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் போட்டியிடலாம் என அறிவித்ததோடு, நேர்முகத் தேர்வு போல மதிப்பெண்களைக் கொண்டே வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தேர்தல் முடிவில் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை எனினும் கூட கணிசமான வாக்குகளை அக்கட்சி கைப்பற்றியது. கமல்ஹாசன் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் கட்சியின் கட்டமைப்பை தற்போதுமாற்றியமைத்துவருகிறார்.

இந்த நிலையில் மக்கள் நீதி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஸ்ரீகாருண்யா, ரவி, ராஜேந்திரன் ஆகிய மூவரும் சென்னை கமலாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை இன்று (நவம்பர் 5) சந்தித்து பாஜகவில் இணைந்தனர். அப்போது பாஜக மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகமும் உடனிருந்தார். பாஜகவில் இணைந்த ஸ்ரீகாருண்யா கிருஷ்ணகிரி தொகுதியிலும், சிதம்பரத்தில் ரவியும், அரக்கோணத்தில் ராஜேந்திரனும் மக்கள் நீதி மய்யம் சார்பாக போட்டியிட்டவர்கள்.

இதுதொடர்பாக பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கடந்த பாராளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக போட்டியிட்ட அரக்கோணம் தொகுதி ராஜேந்திரன், கிருஷ்ணகிரி தொகுதி ஸ்ரீகாருண்யா மற்றும் சிதம்பரம் தொகுதி ரவி ஆகியோர் என்னை நேரில் சந்தித்து தங்களை பாஜகவில் இணைத்துக்கொண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமையைக் கண்டு தாங்கள் வியந்திருப்பதாகவும், நமது பிரதமரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்களும் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், தங்களைப் போலவே இன்னும் பலர் பா.ஜ.க.வின் கொள்கையில் ஈர்க்கப்பட்டு தங்களைப்போல் இணைய இருப்பதாகவும் தெரிவித்தனர்” என்று கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக