செவ்வாய், 5 நவம்பர், 2019

பாஜகவின் திடீர் திருவள்ளுவர் பாசம்? தமிழர் விரோதத்தை மறைக்கும் ....

Ravi Palletவரைந்தவள்ளுவர்
Vijayaragavan Rajasekaran :  பாஜக திடீரென்று ஏன் திருவள்ளுவரையும் அவர்
எழுதிய திருக்குறளையும் கையிலெடுக்க வேண்டும்? இதன் பின்னணியில் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன?
சில ஆண்டுகளுக்கு முன் திருக்குறள் குஜராத்தியில் மொழி பெயர்க்கப் பட்டு அது அப்போதைய குஜராத் முதல்வர் மோடியிடம் தரப்படுகிறது. மோடி பிரதமரான பிறகு தருண் விஜய் எனும் உபியை சேர்ந்த ஆர் எஸ் எஸ் காரர் (ஆர் எஸ் எஸ் அதிகார பூர்வ பத்திரிக்கையான பஞ்சஜன்யாவின் ஆசிரியராக இருந்தவர்) திடீரென்று திருக்குறள் மீது ஈர்ப்பு ஏற்பட்டு திருவள்ளுவருக்கு கங்கைக் கரையில் சிலை வைக்க முயற்சி செய்தார். அதன் பின்னணியில் பாஜக இருந்தது.
ஆனால் உபியை சேர்ந்த தீவிர இந்துத்துவ சக்திகள் (சாமியார்கள்) அவரை தலித் என்றும் சமண மதத்தை சார்ந்தவர் என்றும் இறை மறுப்பு கொள்கை உடையவர் என்றும் கூறி சிலை வைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பிறகு திருவள்ளுவர் சிலை கங்கை கரையில் அனாதையாக கிடந்தது. கடைசியில் எதிர்ப்புகள் எழவே அதை ஏதோ ஒரு பூங்காவில் நிறுவினர். இப்படியாக திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் பற்றிய தங்கள் அரைகுறை அறிவை இந்துத்துவ சக்திகள் வெளிப்படுத்திக் கொண்டே இருந்தனர்.
சில வட இந்திய இந்துத்துவ பாதிப்பு கொண்ட வரலாற்று பேராசிரியர்கள் தமிழ் பற்றியும் தமிழர் வரலாறு பற்றியும் சங்க கால தமிழ் இலக்கியங்கள் பற்றியும் சங்க கால புலவர்கள் பற்றியும் தவறான கண்ணோட்டத்தையே வெளிப்படுத்தி பலரை திசை திருப்பி வைத்திருந்தனர்.

ஆனால் பல வெளிநாட்டு அறிஞர்களும் வெளி நாடு வாழ் தமிழர்களும் உலக அரங்கில் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளத்தை உலகறிய வைத்த பிறகு இவர்களின் பொய் பித்தலாட்டங்கள் உலக அரங்கில் எடுபட வில்லை. பல உலக பல்கலை கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்கப் பட்டிருக்கின்றன. அங்கே தமிழின் தொன்மையும் பெருமையும் பேசப்பட்டு பரப்பப் பட்டு வருகின்றன.
சமஸ்கிருதத்திற்கு இல்லாத பெருமை தமிழுக்கு இருக்கவே இப்போது பாஜக ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க நினைக்கிறது.
தமிழகத்தில் காலூன்ற வேட்டி சட்டை அணிந்து தமிழ் மரபை நாங்கள் மதிக்கிறோம் என்றும் ஏற்கெனவே உலகெங்கிலும் பரவி இருக்கும் திருக்குறளை உலகமெங்கும் பரப்புகிறோம் என்றும் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குவது.
அதே போல உலக அரங்கில் கிருத்துவத்துக்கு முன்பே எங்கள் நாட்டில் திருக்குறள் எனும் நீதி நூல் இருக்கிறது. அவர் ஒரு இந்து துறவி என்று கூற முற்படுகிறார்கள்.
அது மட்டுமல்ல திருவள்ளுவரை ஒரு சிலர் கிருத்துவர் என்று அடையாள படுத்தி இருக்கிறார்கள். அதை மாற்றி எழுதவும் இவ்வாறு செய்கின்றனர்.
உண்மையில் வெள்ளை உடை கிருத்துவத்திற்கு அடையாளம் என்பது முட்டாள்தனம். திருவள்ளுவர் வாழ்ந்த காலம் கிமு முதலாம் நூற்றாண்டு. அப்போது இயேசு கிருத்துவே பிறக்கவில்லை. மேலும் அப்போது வெள்ளை பருத்தி உடை மட்டுமே உண்டு. வேறெந்த நிறச் சாயமும் இல்லை.
மேலும் அந்த காலத்தில் இந்தியாவில் வடக்கிலும் தெற்கிலும் பெளத்தமும்தான் சமணமும் கோலோச்சிக் கொண்டிருந்தது. பல மன்னர்கள் அந்த மதங்களைத்தான் பின்பற்றியிருந்தார்கள். திருவள்ளுவர் தொண்டை மண்டலத்தை (வட தமிழகம்) சேர்ந்தவர் என்பதால் அநேகமாக சமண மதம் சார்ந்த முனிவராகத்தான் இருந்திருக்க வேண்டும். அதற்கும் சரித்திர காரணம் இருக்கிறது.
கிபி ஏழாம் நூற்றாண்டு வரை இங்கே சமணம்தான் கோலோச்சிக் கொண்டிருந்தது. குறிப்பாக மகேந்திர வர்ம பல்லவன் காலத்தில் காஞ்சியில் அப்பர் சுவாமிகள் சைவத்தை வளர்க்க படாத பாடு பட்டுக் கொண்டிருந்தார்.
சமண மதத்தின் மீது பற்று கொண்டிருந்த தஞ்சை சோழர்களிடமும் மதுரை பாண்டிய மன்னர்களிடமும் ஞானசம்பந்தர் சைவ மதத்தின் சிறப்பியல்புகளை எடுத்துரைத்து அவர்களை மாற்ற பாடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது அரசவையிலேயே பல சமணர்களை வாதில் வென்று சைவ மதத்தை தழைக்க செய்தார். சம்பந்தர் எழுதிய தேவார ஏடு வைகை ஆற்றின் எதிர் திசையில் பயணித்தது என்றும் அதனால் அந்த இடம் ஏடகம் என்றழைக்கப் படுகிறது என்றும் வரலாறு கூறுகிறது. இந்து மதம் எனும் மதமே பிற்காலத்தில் ஏற்பட்டதுதான்.
கற்றதனால் ஆய பயனின் கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின் என்ற குறளை மேற்கோள் காட்டி அவர் சைவ முனிவர் என்று கூறினால் (இத்தனைக்கும் வாலறிவன் என்பது பொதுவான கடவுள் - எந்த மதத்துக்கும் சொந்தமான கடவுள் அல்ல)....
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் .
தெய்வம் தொழா அள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை.
போன்ற குறள்களை மேற்கோள் காட்டி அவர் நாத்திகர் என்று யாராவது கூற முற்பட்டால் என்னாவது?
ஐயந்திரிபட கூறுகிறேன். திருவள்ளுவர் சமயத்துக்கு அப்பாற்பட்ட புலவர். அவர் உலக மக்களின் நன்மைக்காக திருக்குறளை எழுதி இருக்கிறார். அதில் எந்த இனமோ மதமோ நாடோ மொழியோ இடம் பெறவில்லை.
அனைவருக்கும் பொதுவான நூலை எழுதி இருப்பதால்தான் திருக்குறள் உலகப் பொதுமறை என்றழைக்கப் படுகிறது. அதற்கு குந்தகம் விளைவிக்கும் செயலை யார் செய்தாலும் அது வன்மையாக கண்டிக்கத் தக்கது.
அதே நேரம் மக்களின் கவனத்தை திசை திரும்ப விடாமல் ஹிந்தி திணிப்பு, புதிய கல்விக் கொள்கை, தமிழர்களின் வேலை பறிப்பு விஷயங்கள், தமிழகத்தில் வட இந்தியர் திணிப்பு, வேறு ஏதேனும் தமிழர் விரோத செயல்கள் புற வாசல் வழியாக நுழைகிறதா என்று எச்சரிக்கையாக கண்காணிக்க வேண்டும்.
Vijayaragavan Rajasekaran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக