ஞாயிறு, 3 நவம்பர், 2019

சென்னையில் இந்தி ரசீது ....ஸ்டாலின் : தமிழில் மாற்றாவிடில் கடும் போராட்டம் நடத்துவோம்!

ஸ்டாலினின் அடுத்த போராட்ட அறிவிப்பு!மின்னம்பலம் : போக்குவரத்து காவல் அபராத ரசீதை தமிழில் மாற்றாவிடில் திமுக சார்பில் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் பயன்படுத்தப்படும் அபராதத்துக்கான ரசீதில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் இடம்பெற்றுள்ளன. எனினும் மாநில மொழியான தமிழ் அதில் இடம்பெறவில்லை. இதுதொடர்பாக நாம் தமிழ்நாடு தினம்: தமிழ் எங்கே? என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில், அபராதம் செலுத்தியவரின் நேரடி அனுபவத்தையும் பகிர்ந்திருந்தோம்.
தபால் துறை, ரயில்வே துறை என பல இடங்களில் தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி முன்னிலைப்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டப்பட்ட நிலையில், இந்த விவகாரமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் இன்று (நவம்பர் 3) நடந்த திமுக பேச்சாளர் வெற்றிகொண்டான் மகள் வழி பேத்தி டாக்டர் கண்மணி-டாக்டர் தமிழரசன் திருமணத்தில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “தபால் துறை தேர்வில் இந்தியும் ஆங்கிலமும்தான் இருக்க வேண்டும், தமிழ் இருக்கக் கூடாது என்ற உத்தரவை எதிர்த்து போராடி அதனை தடுத்து நிறுத்தியது திமுக மக்களவை உறுப்பினர்கள்தான். ரயில்வே துறையில் இந்தியில்தான் பேச வேண்டும் என்ற உத்தரவு வந்தபோது, அதனையும் தடுத்து நிறுத்தினோம்” என்று பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, “போக்குவரத்து விதிமுறைகளை மீறி கார், பைக் மற்றும் வாகனங்களை ஓட்டினால் அதற்கு அபராதம் விதிக்கக் கூடிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் வாகன அபராதச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோமா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறும்போது, அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரசீது வழங்கப்படுகிறது. அந்த ரசீதில் ஆங்கிலம் இருக்கிறது, இந்தி இருக்கிறது, ஆனால் தமிழ் இல்லை. அதனால்தான் சொல்கிறோம்; இங்கே நடப்பது, எடுபிடி ஆட்சி என்று” என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,
“போக்குவரத்து காவல்துறை சார்பில் அபராதம் விதித்துக் கொடுக்கப்படக்கூடிய ரசீதில் கண்டிப்பாகத் தமிழ் இடம்பெற வேண்டும். அந்த ரசீதில் தமிழ் இடம்பெறவில்லை என்று சொன்னால் திமுக சார்பில் ஒரு மாபெரும் போராட்டம் நடத்தப்படும், அந்தப் போராட்டத்தை இந்த அரசு சந்திக்க நேரிடும் என்று இந்தத் திருமண விழாவின் மூலம் நான் தமிழக அரசை எச்சரிக்கிறேன்” என்றும் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக