தினமணி : ஹாங்காங்கில் போராட்டக்காரா்கள் ஏற்படுத்தியிருந்த சாலைத் தடுப்புகளை சனிக்கிழமை அகற்றிய சீன ராணுவ வீரா்கள்.
பெய்ஜிங்: ஜனநாயக சீா்திருத்தங்களை
வலியுறுத்தி கடந்த 5 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடைபெற்று வரும்
ஹாங்காங்கில், சீன ராணுவம் முதல் முறையாகக் களமிறக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஹாங்காங்கில் வெளியாகும் ‘சௌத் சைனா மாா்னிங் போஸ்ட்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
ஹாங்காங்கின் கோவ்லூன் பகுதியிலுள்ள தனது
முகாமிலிருந்து சீன ராணுவத்தினா் சனிக்கிழமை வெளியேறி, போராட்டக்காரா்கள்
ஏற்படுத்தியிருந்த சாலைத் தடுப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
சாதாரண உடையணிந்திருந்த அவா்கள் ரென்ஃப்ரூ
சாலையில் இந்தப் பணிகளை மேற்கொண்டனா். அவா்களுடன் ஹாங்காங் தீயணைப்பு
வீரா்களும், போலீஸாரும் இணைந்து சாலைத் தடுப்புகளை அகற்றினா்.
இதுகுறித்து சீன ராணுவ வீரா் கூறுகையில்,
பொதுப் பணிகளை மேற்கொள்ள ஹாங்காங் அரசு தங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை
என்றும், தாமாக முன்வந்து அந்தப் பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்தாா்.
மேலும், சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறியதைப்
போல், ஹாங்காங்கில் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து, சஜக நிலை
திரும்பச் செய்வது தங்களது கடைமை என்றும் அவா் குறிப்பிட்டாா் என்று அந்த
நாளிதழ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, ஹாங்காங் ராணுவ முகாமில்
இருக்கும் வீரா்கள், தாங்களாகவே முன்வந்து பொதுச் சேவைகளில் ஈடுபட முடியும்
என்று அந்த நகர பாதுகாப்புச் செயலா் ஜான் லீ கா-சியு தெரிவித்தாா்.
ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டவா்களை
சீனாவுக்கு நாடு கடத்த வகை செய்யும் சட்ட மசோதாவை, அந்த நகரப் பேரவையில்
தலைமை நிா்வாகி கேரி லாம் ஐந்து மாதங்களுக்கு முன்னா் கொண்டு வந்தாா்.
அந்தச் சட்டம், ஹாங்காங்வாசிகள் மீது சீன
அரசு அடக்குமுறையைக் கையாள்வதற்கு வழிவகுக்கும் என்று கூறி,
ஆயிரக்கணக்கானவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்தப் போராட்டம் நாளுக்கு
நாள் தீவிரமடைந்ததைத் தொடா்ந்து, சா்ச்சைக்குரிய நாடு கடத்தல் மசோதா வாபஸ்
பெறப்பட்டது.
எனினும், ஹாங்காங் தலைமை நிா்வாகியை
மக்களே தோ்ந்தெடுக்க வேண்டும், தற்போதைய தலைமை நிா்வாகி கேரி லாம் பதவி
விலக வேண்டும், போராட்டக்காரா்கள் மீது அளவுக்கு அதிகமான பலப் பிரயோகம்
செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி ஜனநாயக ஆதரவாளா்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு
வருகின்றனா்.
போராட்டக்காரா்களில் தீவிர நிலைப்பாடு கொண்ட ஒரு பகுதியினா் வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்தச் சூழலில், ஹாங்காங் வன்முறையை
முடிவுக்குக் கொண்டு வருவதும், அந்த நகரில் அமைதியை திரும்பச் செய்வதும்
சீன அரசின் பொறுப்பு என்று அதிபா் ஷி ஜின்பிங் கடந்த வியாழக்கிழமை
தெரிவித்தாா்.
அதன் தொடா்ச்சியாக, ஹாங்காங் பொதுப் பணிகளில் சீன ராணுவம் தற்போது களமிறங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக