வியாழன், 7 நவம்பர், 2019

மகாராஷ்டிராவில் கூவத்தூர் பாணி!


மகாராஷ்டிராவில் கூவத்தூர் பாணி!
மின்னம்பலம் :நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்ற நிலையில் சிவசேனா தனது கட்சி எம்.எல்.ஏக்களை பாந்த்ராவில் உள்ள ஹோட்டலில் தங்கவைத்துள்ளது.
105 இடங்களை வென்ற பாஜகவும், 56 இடங்களைப் பெற்ற சிவசேனாவும், முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையை புதிய அரசாங்கத்தில் பகிர்ந்து கொள்வது தொடர்பாக கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலுக்கு முன்பே பாஜக - சிவசேனா இடையே நிறைய உரசல்கள் இருந்தன. தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து முதல்வர் பதவியில் ஆதித்ய தாக்கரே, அதிகாரப் பகிர்வில் 50:50 ஃபார்முலா அமலாக்கப்பட வேண்டும் என்று சிவசேனா உறுதியாக இருப்பதால், இருவருக்கும் இடையிலான பிளவு மேலும் அதிகரித்தது.

முதலமைச்சர் பதவி தொடர்பாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையிலான அதிகார மோதல் தொடர்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பாட்டீல் மற்றும் நிதியமைச்சர் சுதிர் முன்கந்திவார் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியை சந்தித்து சட்ட அம்சங்கள் குறித்து விவாதித்தனர். மகாராஷ்டிர பாஜக தலைவர், சந்திரகாந்த் பாட்டில், “பாஜக - சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றது. அதனடிப்படையில் ஆட்சியமைய வேண்டும். இது குறித்து ஆளுநரிடம் பேசினோம். தற்போது உள்ள சட்ட நடைமுறைகள் குறித்து அவருடன் விவாதித்தோம்,” என்று ஆளுநருடனான சந்திப்புக்குப் பிறகு தெரிவித்துள்ளார்.
நாளைக்குள் மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்கப்படவில்லை என்றால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும். சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான ‘சாம்னா', தங்கள் கட்சி எம்.எல்.ஏ-க்களுக்கு பணம் தர பேரம் நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளது. அதே சமயம், தங்கள் கட்சியின் உறுப்பினர்களை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கத் தொடங்கியுள்ளது.
சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தனது இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏக்களை அழைத்து இறுதி முடிவு எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் உத்தவ் தாக்கரே பேசும் போது, "நான் கூட்டணியை உடைக்க விரும்பவில்லை, ஆனால் மக்களவைத் தேர்தலின் போது முடிவு செய்யப்பட்டதை பாஜக செயல்படுத்த வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மக்களவைத் தேர்தலின் போது முடிவு செய்யப்பட்டதை பாஜக ஒப்புக் கொண்டால் நாங்கள் அவர்களுடன் கலந்துரையாடுவோம். ஆட்சியில் 2.5 ஆண்டுகள் எங்களுக்கு முதலமைச்சர் பதவியை வழங்க முடிவு செய்தால் அவர்கள் என்னை அழைக்கலாம், இல்லையெனில் என்னை அழைக்க வேண்டாம். எங்கள் கட்சி சுய மரியாதையால் பிறந்துள்ளது" என திட்டவட்டமாக தாக்கரே கூறினார்.
சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறும் போது, “சிவசேனாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இருக்காது என்பதை உத்தவ் தாக்கரே தெளிவுபடுத்தினார். அனைத்து எம்.எல்.ஏக்களும் ஒரே குரலில் அவரது நிலைப்பாட்டை ஆதரித்தனர். மகாராஷ்டிராவின் ஆர்வத்தில் அவர் எந்த முடிவை எடுத்தாலும் அது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது” என தாக்கரேவின் கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த சந்திப்பிற்குப் பின், சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஆளுங்கட்சியான பாஜக-வுக்கு தாவி விடாமல் இருக்க, தமிழகத்தில் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் விடுதியில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது போல, பாந்த்ரா பகுதியில் உள்ள ரங்ஷர்தா ஹோட்டலுக்கு அனைத்து எம்.எல்.ஏக்களும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக