ஞாயிறு, 24 நவம்பர், 2019

தண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ ... மயில்சாமி அண்ணாதுரை பாராட்டு

water-instead-of-fuelhindutamil.in : பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் ஓடும் இருசக்கர வாகனம்: ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவரின் கண்டுபிடிப்புக்கு பாராட்டு
விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் ஹைட்ரஜனில் இயங்கும் வாகனம் குறித்து தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரைக்கு விளக்குகிறார் மாணவர் தேவேந்திரன். அருகில், விஐடி பதிவாளர் சத்தியநாராயணன். படம்: வி.எம்.மணிநாதன் வ.செந்தில்குமார்

வேலூர்  வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடந்த மாநில அளவிலான ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சியில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர் கண்டுபிடித்த, பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஹைட்ரஜன் வாயுவால் இயங்கும் இரு சக்கர வாகனத்தை, தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விஐடி பல்கலைக்கழகம் வழங்கிய ‘நாளைய விஞ்ஞானி’ நிகழ்ச்சி ‘இந்து தமிழ்' நாளிதழ், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தேசிய வடிவமைப்பு, ஆராய்ச்சி மன்றம் ஆகியற்றுடன் இணைந்து விஐடி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்டது. இதில், வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 1 மாணவர் தேவேந்திரன், உருவாக்கிய பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனம், அனைவரது பாராட்டையும் பெற்றது.

இந்த வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை மாணவரை பாராட்டியதுடன், ‘‘இந்த கண்டுபிடிப்பை விஐடி பல்கலைக்கழகத்துடன் இணைந்து அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
அவர் மேலும் பேசும்போது, ‘‘ஹைட்ரஜனில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை நேரில் பார்த்தேன். அதை பரிசோதித்ததில் ஒரு நம்பிக்கை பிறந்துள்ளது. நாளைக்கு பெட்ரோல் இல்லாவிட்டால் வாகனங்கள் ஓடாது. அதற்காக பேட்டரி வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்று ஒரு பக்கம் ஆராய்ச்சிகள் நடந்தாலும், மற்றொரு பக்கம் பேட்டரி வாகனங்களின் விளைவுகள் குறித்து விஞ்ஞான உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால், செல்போனில் இருக்கும் லித்தியம் அயன் பேட்டரி சிறிதாக இருந்தாலும் அதை சரியாக உபயோகிக்கவில்லை என்றால் என்ன ஆகும் என்று உங்களுக்குத் தெரியும்.
நம்பிக்கை
இதுபோன்ற காலகட்டத்தில் பெட்ரோலும், லித்தியம் அயன் பேட்டரியும் வேண்டாம், நம்ம வீட்டு தண்ணீரே போதும் என்பது சிறப்பான நிகழ்வு. பெட்ரோலுக்கு மாற்றாக ஒன்று கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இன்று இருக்கிறோம்’’ என்றார்.
வேலூரை அடுத்த சித்தேரி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி தசரதனின் மகன் தேவேந்திரன். இந்த கண்டுபிடிப்பின்மூலம், பெட்ரோலுக்கு மாற்றாக தண்ணீரை நிச்சயம் பயன்படுத்த முடியும் என்பதுடன், ஹைட்ரஜனை சேமிப்பதில் இருந்த சிக்கல்கள் அதனால் ஏற்படும் எதிர்விளைவுகளுக்கும், தேவேந்திரன் மற்றும் அவரது ஆசிரியர்கள் குழுவினர் விடை கண்டுள்ளனர்.
டிரைசெல் அமைப்பு
‘‘தண்ணீரில் இயங்கும் இரு சக்கர வாகனத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்ற முயற்சிக்கு ஆசிரியர்கள் ஆலோசனைகளை வழங்கினர். அதன்படி, தண்ணீரில் ஹைட்ரஜனை பிரித்து அதை வாகன இன்ஜினுக்கு நேரடியாக பயன்படுத்தினோம். முதலில் கண்ணாடி பாட்டிலில் ஹைட்ரஜனை பிரித்தபோது உஷ்ணமாகியதால் பயந்துவிட்டோம். ஹைட்ரஜன் செல்லும் குழாயும் உருகும் நிலை ஏற்பட்டது’’ என்றார் தேவேந்திரன். கண்ணாடி பாட்டிலுக்கு பதிலாக கனமான பிளாஸ்டிக் பால் கேனை பயன்படுத்தியபோது உஷ்ணப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்தது.
அலுமினியம், ரப்பர், துத்தநாக தகடுகள் கொண்ட வரிசைகள் அடங்கிய ‘டிரைசெல்’ அமைப்பில் தண்ணீரை செலுத்தி ஹைட்ரஜனை பிரித்து அதை மீண்டும் தண்ணீர் கேனுக்கு கொண்டு செல்லும் வடிவமைப்புக்கு தலைமை ஆசிரியர் உமாதேவன், ஆசிரியைகள் மஞ்சுளா, கோட்டீஸ்வரி ஆகியோர் உருவம் கொடுத்துள்ளனர். இதை ஊக்கப்படுத்தும் வகையில் பொருளாதாரரீதியாக தேவேந்திரனின் தந்தையும் உதவியுள்ளார்.
வினையூக்கி
மேலும் தேவேந்திரன் கூறும்போது, ‘‘ஒரு லிட்டர் தண்ணீரில் 3 ஸ்பூன் உப்பை சேர்த்தோம். தண்ணீரில் உப்பை சேர்த்தால் அது வினையூக்கியாக மாறி ஹைட்ரஜனை பிரிக்கும். நாங்கள் தயாரித்துள்ள இந்த கட்டமைப்புக்கு மொத்த செலவே ரூ.1,500-தான். ஹைட்ரஜனை பிரித்தெடுக்கும் டிரைசெல் அமைப்பு செயல்படுவதற்கான பேட்டரிக்கு ரூ.1,000 செலவானது. பெட்ரோலில் இயங்கும் அதே சக்தியுடன் இந்த வாகனம் இயங்குகிறது’’ என்றார்.
இதுகுறித்து விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் கூறும்போது, ‘‘இந்த கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெறவும் அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கு உதவவும் விஐடி பல்கலை. தயாராக இருக்கிறது’’ என்றார்.
விஐடி பல்கலைக்கழகத்தின் பதிவாளர் சத்தியநாராயணன் கூறும்போது, “ஹைட்ரஜனில் வாகனங்களை இயக்குவது என்ற சிந்தனையோ, ஆராய்ச்சியோ புதிது அல்ல. ஆனால், ஹைட்ரஜனை வெளியில் இருந்து எரிபொருளாகக் கொண்டுவந்து, வாகனத்தின் கொள்கலனில் நிரப்பி பயன்படுத்துவதில்தான் பலவிதமான சிக்கல்கள் உண்டு. இந்த மாணவர் குழுவினர் இந்த சிக்கலுக்கும் சேர்த்தே தீர்வு கண்டுள்ளனர். ஒருபக்கம் ஹைட்ரஜன் உற்பத்தி நடக்கும்போது அதை சேமிக்கத் தேவையில்லாமல் எரிபொருளாக உடனுக்குடன் பயன்படுத்தப்படுவதை நன்றாக சோதித்து உறுதி செய்து கொண்டோம். இதுதான் இந்த கண்டுபிடிப்பின் மீது மயில்சாமி அண்ணாதுரைக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது” என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக