ஞாயிறு, 24 நவம்பர், 2019

ஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டோம் - மீட்கப்பட்ட சிறுமி பரபரப்பு பேட்டி

ஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டோம் -  மீட்கப்பட்ட சிறுமி பரபரப்பு பேட்டி
மாலைமலர் : ஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டோம் என்று ஆசிரமத்தில் இருந்து மீட்கப்பட்ட சிறுமி கூறியுள்ளார். பெங்களூரு, பெங்களூருவில் உள்ள நித்யானந்தா ஆசிரமம் மீதும் அவர் மீதும் நாளுக்கு நாள் பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெங்களூரில் ஆசிரமம் எடுத்து நடத்தி வரும் நித்தியானந்தா தான் தியானத்தில் இருந்த நிலையில் சூரியன் உதயமாகாமல் இருக்க வைத்ததாகவும், மேட்டூர் அணையின் நீர் தேக்கப்பகுதியில் உள்ள சிவன் கோவிலின் மூல லிங்கம் தற்போது தன்னிடம் இருப்பதாகவும், அந்த கோவிலை கடந்த பிறவியில் தான் கட்டியதாகவும் கூறி பல்வேறு பரபரப்புகளை ஏற்படுத்தியவர்.
இந்தநிலையில், இவர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இங்கு 4 குழந்தைகள் கடத்தி தங்க வைக்கப்பட்டு அவர்கள் சித்ரவதை செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆசிரமத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அதில் அந்த 4 குழந்தைகளும் மீட்கப்பட்டனர். அப்போது நித்தியின் சீடர்கள் பிரன் பிரியா மற்றும் பிரியத்வா ஆகியோர் கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  மீட்கப்பட்ட 4 பேரில் இரு குழந்தைகள் புகார் தாரரான பெங்களூர் ஜனார்த்தன சர்மாவின் குழந்தைகள் ஆவர். இதையடுத்து இருவரும் அவரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சூழ்நிலையில் நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அங்கிருந்து மீட்கப்பட்ட 15 வயது சிறுமி
பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். 

அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

கடந்த 2013-ம் ஆண்டு நித்யானந்தா ஆசிரமத்தில் குரு குலத்தில் சேர்ந்தேன். 2017-ம் ஆண்டில் இருந்து ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள்  நடக்கத் தொடங்கியது.

ஆரம்பத்தில் நாங்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நடித்தோம். பின்னர் ஆசிரமத்திற்கு நிதியை பெற்று தருவதற்காக நித்யானந்தாவை விளம்பரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டோம். நள்ளிரவில் என்னை எழுப்பி நித்யானந்தாவுக்காக வீடியோ செய்ய சொல்வார்கள்.

நள்ளிரவில் அதிக நகைகளுடன் மேக்கப் போட வைப்பார்கள். நாங்கள் சுவாமி ஜியுடன் இணைந்து அவரது விளம்பர நிகழ்ச்சிகளில் நடிப்போம்.

நித்யானந்தாவின் உத்தரவின் பேரில் எனது மூத்த சகோதரி தான் இந்த வீடியோக்களை பதிவு செய்வார். இதனை நான் நேரில் பார்த்திருக்கிறேன். எனது பெற்றோரை தகாத வார்த்தைகளால் பேச வேண்டும் என்று என்னை நிர்ப்பந்தித்தனர். அதற்கு நான் உடன்படவில்லை.

ஆசிரமத்தில் நன்கொடை பெற்று தருவதற்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டோம். எனது மூத்த சகோதரியால் ஆசிரமத்தை விட்டு வெளியே வரமுடிய வில்லை.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த நிலையில் போலீசாரை கிண்டல் செய்து புதிய வீடியோவை நித்தியானந்தா வெளியிட்டு உள்ளார். 

அதில் அவர் பேசி இருப்பதாவது:நான் பேசும் தமிழ் யாருக்குமே புரியவில்லை. பேச்சை புரிந்து கொள்ளாமல் காவல்துறை என்மீது வழக்குப்பதிவு செய்து விடுகிறார்கள். தமிழகத்தில் ஏதேனும் ஒரு பிரச்சினையை மடை மாற்ற வேண்டும் என்றால் அதற்கு என்னை மட்டுமே குறி வைக்கிறார்கள் என்று பேசி உள்ளது போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக