சனி, 23 நவம்பர், 2019

மகாராஷ்டிரா: பதவிப் பிரமாணத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!

மகாராஷ்டிரா:  பதவிப் பிரமாணத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!மின்னம்பலம் : ஒரே இரவில் தேவேந்திர பட்னவிசை ஆட்சி அமைக்க அழைத்து அவருக்கு பதவிப் பிரமாணமும் செய்து வைத்தது எப்படி என்று மகாராஷ்டிர மாநில ஆளுநர் பக்த்சிங் கோஷ்யாரிக்கு காங்கிரஸ் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து தேவேந்திர பட்னவிஸுக்கு முதல்வர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்பட்டதை ரத்து செய்யுமாறு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
இன்று (நவம்பர் 23) டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா,
“ஏற்கனவே தங்களுக்கு மெஜாரிட்டி இல்லை என்று தேவேந்திர பட்னவிஸ் பகிரங்கமாக சொல்லியிருந்தது ஆளுநருக்குத் தெரியுமா தெரியாதா? மெஜாரிட்டியே இல்லாத பட்னவிஸை நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து ஆட்சி அமைக்க அழைத்தது ஏன்?

மகாராஷ்டிராவில் நவம்பர் 11 ஆம் தேதி முதல் நிலவும் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்குவதற்கு எதன் அடிப்படையில் ஆளுநர் சிபாரிசு செய்தார்? தேசியவாத காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி பட்ன்விஸ் முதல்வராக ஆதரவு தெரிவிக்கிறோம் என்று கூறினார்களா? அப்படி தெரிவித்துக் கையெழுத்திட்ட ஆவணங்கள் ஆளுநரிடம் உள்ளதா? அவ்வாறு கொடுக்கப்பட்ட கடிதத்தின்படி பட்னவிஸுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று ஆளுநர் திருப்தி அடைந்தாரா? இது எதுவுமே விடை தெரியாத வினாக்களாக இருக்கையில் இன்று நவம்பர் 23 ஆம் தேதி பட்னவிஸுக்கு காலை 8 மணிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்கிறார் ஆளுநர்.

இது இந்திய ஜனநாயகத்தின் கருப்பு நாள். அரசியல் அமைப்பை காக்க வேண்டிய ஆளுநரே அதன் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்திய அரசியல் அமைப்பை தனது விருப்பம்போல பயன்படுத்தும் கருவியாக்கிவிட்டார்” என்று கூறிய சுர்ஜிவாலா, “மகாராஷ்டிர தேர்தல் பிரச்சாரம் முழுவதும் தேவேந்திர பட்னவிஸ் பேசும்போது, ‘மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு அஜித் பவாரை ஆர்தர் ரோடு ஜெயிலுக்கு அனுப்புவேன்’ என்று அனைத்து கூட்டங்களிலும் குறிப்பிட்டார்” என்று சொல்லிய சுர்ஜிவாலா பிரச்சாரத்தில் பட்னவிஸ் பேசிய அந்த வீடியோவை திரையிட்டுக் காட்டினார்.

தொடர்ந்த அவர், “ஆர்தர் ரோடு சிறைக்கு அனுப்புவேன் என்று சொல்லிவிட்டு அஜித் பவாரை இப்போது துணை முதல்வராக ஆக்கிவிட்டீர்களே . இது மோடி காலத்தில் மட்டுமே நடக்கும். தேவேந்திர பட்னவிஸும், அஜித் பவாரும் துரியோதனும் சகுனியும் போன்று செயல்பட்டிருக்கிறார்கள். மராட்டிய மக்களுக்கு துரோகம் செய்துவிட்டார்கள். ” என்று கூறியிருக்கிறார் சுர்ஜிவாலா.
இந்த நிலையில்தான் இன்று (நவம்பர் 23) மாலை மகா விகாஸ் அகாதி என்ற கூட்டணியை அமைத்திருக்கும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிளின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
அதில், “மகாராஷ்டிர மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி நவம்பர் 23 ஆம் தேதி காலை தேவேந்திர பட்னவிஸுக்கு முதல்வர், அஜித் பவாருக்கு துணை முதல்வர் என பதவிப் பிரமாணம் செய்து வைத்ததை ரத்து செய்ய வேண்டும். பெரும்பான்மையை வைத்துள்ள அகாதி கூட்டணியை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக