சனி, 23 நவம்பர், 2019

சரத் பவார் எச்சரிக்கை : பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பார்கள்

பா.ஜ.க.வுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள் பதவியை இழப்பார்கள் -சரத் பவார் எச்சரிக்கை
உத்தவ் தாக்கரே -  சரத் பவார்.
மாலைமலர் : பாஜகவுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவியை இழக்க நேரிடும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறினார்.
மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை முடிவடைந்த நிலையில், இன்று காலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. பாஜக- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இதனால் ஆட்சிக் கனவில் இருந்த சிவசேனாவுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டது. அஜித் பவார், மகாராஷ்டிர மக்களின் முதுகில் குத்திவிட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.
அஜித் பவாரின் முடிவு, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முடிவு அல்ல என்றும், அவரது முடிவை ஆதரிக்கவில்லை என்றும் கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார். இதனால் அந்த கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.  இந்த பரபரப்பான சூழ்நிலையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தலைவர்கள் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அகமது பட்டேல் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.

அப்போது, தேசியவாத காங்கிரஸ் சரத் பவார் கூறியதாவது:-

சிவசேனா தலைமையில் ஆட்சி நடக்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் விரும்புகிறது. எங்கள் கூட்டணிக்கு 170 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தது. சில சுயேட்சை எம்.எல்.ஏ.க்களும் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக இருந்தனர். தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்களை அஜித் பவார் ஆளுநர் மாளிகைக்கு அழைத்து சென்றுவிட்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அஜித் பவார் முடிவு எடுத்துவிட்டார். மோசடியாக எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெற்றுள்ளார். அவரது செயல் ஒழுங்கீனமானது. 

பாஜகவுடன் சேர்ந்து ஆட்சியமைக்க தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எந்த தலைவர்களும், தொண்டர்களும் விரும்பவில்லை.  சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஒற்றுமையாக உள்ளன. பாஜகவுக்கு ஆதரவு தந்த எம்.எல்.ஏ.க்கள், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் பதவியை இழக்க நேரிடும். 

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக