வெள்ளி, 1 நவம்பர், 2019

சரத் பவார்- தாக்கரே கூட்டணி.. பாஜகவின் சபாநாயகரைத் தோற்கடிக்க ஆயத்தம்

பாஜகவின் சபாநாயகரைத் தோற்கடிக்க பவார்- தாக்கரே  கூட்டணி!மின்னம்பலம் : மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து பெரும்பான்மையைக் கடந்தாலும் முதல்வர் பதவியைக் கேட்கும் சிவசேனா தனது கோரிக்கையில் உறுதியாக இருப்பதால் ஆட்சி அமைப்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.
ஆட்சியில் சம உரிமை, சம பங்கு, முதல் இரண்டரை வருடங்களுக்கு சிவசேனாவுக்கே முதல்வர் பதவி போன்ற ஒப்பந்தம் எதுவும் இரு கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்தப்படவில்லை என்று பாஜகவின் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அண்மையில் தெரிவித்திருந்தார். இது சிவசேனாவை கோபத்துக்கு ஆளாக்கியுள்ளது. சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கடந்த செவ்வாய், புதன் என இரு இரவுகளில் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இந்த சந்திப்புகளில் அரசியல் பேசப்பட்டது என்றாலும் இரு கட்சிகளுக்கும் இடையே எந்த கருத்துப் பரிமாற்றமும் அதிகாரபூர்வமாக நடைபெறவில்லை. நான் பத்திரிகையாளராக இருந்த காலத்தில் இருந்தே சரத் பவாரை அறிவேன். எனவே இந்த சந்திப்பு புதிதல்ல. தீபாவளி வாழ்த்து சொல்வதற்காக அவரை சந்தித்தேன்” என்று கூறியிருந்தார்.

ஆனால் சிவசேனாவுக்கும், சரத்பவாருக்கும் இடையே மிக முக்கியமான ஒரு உடன்படிக்கை ஏற்பட்டிருப்பதாகவே மும்பை பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதாவது சிவசேனாவின் கோரிக்கைகளை பாஜக ஏற்க தொடர்ந்து மறுத்துவருவதால் ஆட்சி அமைக்க தாமதமாகி வருகிறது. அதேநேரம் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு, புதிய சபாநாயகர் பதவியேற்பு ஆகியவை நடந்தாகவேண்டும்.
தற்காலிக சபாநாயகராக மூத்த சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டு அவர் மூலம் சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பார்கள். அதன் பின் புதிய சட்டமன்றத்தின் சபாநாயகரை தேர்ந்தெடுக்க வேண்டும். பாஜக தனது உறுப்பினர் ஒருவரையே சபாநாயகராக நிறுத்த இருக்கிறது. அப்படி நிறுத்தும்போது அவருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒருங்கிணைந்து வாக்களிக்கவேண்டும். அவ்வாறு வாக்களித்தால் சட்டமன்றத்தில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது தெளிவாகிவிடும் என்று பவார் -ராவுத் சந்திப்பில் பேசப்பட்டிருக்கிறது.
288 உறுப்பினர்கள் கொண்ட மராட்டிய சட்டமன்றத்தில் பாஜக தற்போது 105 உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறது. சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
நேற்று சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, ”முதல்வர் என்றாலே எப்போதும் முதல்வர் என்று நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது. முதல்வர் பதவி உட்பட அனைத்திலும் சம பங்கு என்பது ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் இப்போது அதை மறந்துவிட்டார்கள். அவர்கள் மட்டுமே நமக்கு வாய்ப்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னோடு புதியவர்களும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக தன் வாக்கைக் காப்பாற்றத் தவறிவிட்டது” என்று பேசியிருப்பதாக சிவசேனா தலைவர்கள் வழியாக தகவல்கள் பரவி வருகின்றன.
இதற்கிடையே சிவசேனாவுடன் இறுதிக் கட்ட சமாதான முயற்சிகளில் பாஜக ஈடுபட்டிருக்கிறது. மத்தியில் கூடுதல் கேபினட் அமைச்சர்கள் மாநிலத்தில் நான்கு முக்கிய துறைகளில் ஒன்றான வருவாய் துறையை சிவசேனாவுக்கு அளிக்கிறோம் என்பது உள்ளிட்ட ஆஃபர்களை பாஜக தற்போது அளித்திருப்பதாகத் தெரிகிறது.
சபாநாயகர் தேர்தல் நடந்தால் அதில் தெரிந்துவிடும், பட்னவிஸ் முதல்வராக முடியுமா முடியாதா என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக