சனி, 2 நவம்பர், 2019

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியா?மின்னம்பலம் :
நவம்பர் 7ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்காவிட்டால் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுவிடும் என பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கன்டிவர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக-சிவசேனா கூட்டணி இணைந்து பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றியபோதிலும், முதல்வர் பதவி, ஆட்சியில் சமபங்கு என்ற கோரிக்கையில் சிவசேனா உறுதியாக இருக்கிறது. அதுபோலவே முதல்வர் பதவி பாஜகவுக்குத்தான் என பாஜக கூறிவருவதால் ஆட்சியமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது.
இதற்கிடையே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் கடந்த செவ்வாய், புதன் என இரு இரவுகளில் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவாரை சந்தித்துப் பேசியிருக்கிறார். இதனால் மகாராஷ்டிரா சபாநாயகர் தேர்தலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸும் இணைந்து பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க ரகசியமாக திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்குள் நாள் மகாராஷ்டிரா அரசியலில் திருப்பம் ஏற்பட்டு வருகிறது.

இதற்கிடையே சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவுத், சிவசேனாவைச் சேர்ந்தவரை முதல்வராக பார்க்க மகாராஷ்டிரா மக்கள் விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுதிர் முன்கன்டிவர் நேற்று (நவம்பர் 1) தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “தீபாவளி பண்டிகையின் காரணமாக பாஜக-சிவசேனா இடையிலான பேச்சுவார்த்தை தள்ளிப்போனது. இன்னும் ஓரிரு நாட்களில் பேச்சுவார்த்தை மீண்டும் நடைபெறும். பாஜக-சிவசேனா கூட்டணிக்குத்தான் மக்கள் ஆட்சியமைப்பதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். வேறு எந்தக் கட்சிக்கும் வழங்கவில்லை. எங்கள் கூட்டணி பெவிகால் மற்றும் அம்புஜா சிமெண்டை விட வலிமையானது. விரைவில் நாங்கள் ஆட்சியமைப்போம்” என்று நம்பிக்கைத் தெரிவித்தார். எனினும் நவம்பர் 7ஆம் தேதிக்குள் புதிய ஆட்சி அமையவில்லை எனில் மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதற்கு அது வழிவகுத்துவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.
வரும் 7ஆம் தேதியுடன் கடந்த பாஜக ஆட்சியின் பதவிக்காலம் முடியவுள்ளதால் அதற்குள் புதிய அரசை அமைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக