ஞாயிறு, 10 நவம்பர், 2019

தமிழகத்தில் போனியாகாத பிரசாந்த் கிஷோர் சரக்கு… கதவடைத்த அரசியல் தலைகள்…

Bhuvanan .dinaseithi.in : வட மாநிலங்களில் கல்லா கட்டும் சிலரும், சில விஷயங்களும் அதே அளவிற்கு தென் மாநிலங்களில், அதுவும் குறிப்பாக தமிழகத்தில் போணியாவதில்லை. பானி பூரி தொடங்கி மோடி வரை இதற்கு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.
இந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்திருக்கிறார்…. பிரசாந்த் கிஷோர்.
தேர்தல் வியூக நிபுணராக (?) சித்தரிக்கப்படும் பிரசாந்த் கிஷோருக்கு வட இந்திய மீடியாக்களைச் சேர்ந்த ஒருசில ஆட்களுடன் நல்ல தொடர்பு உண்டு. இவர்களைப் பயன்படுத்தி  ’அவரை தூக்கிவிட்டார், இவரை ஏற்றிவிட்டார்’ என தன்னைப் பற்றி இஷ்டத்திற்கும் கிளப்பிவிடுவது கிஷோரின் வாடிக்கை என்கிறார்கள் அவரை நன்கறிந்தவர்கள்.
தென் மாநிலங்களில் தனது கடையை விரிப்பதற்காக ஐபேக் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய பிரசாந்த் கிஷோர், தமிழக அரசியலில் புதிதாக தலையெடுக்கும் “தலை”களிடம், தனது வலையை வீசிப் பார்க்கத் தொடங்கினார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த முதல்வர் எடப்பாடியை கிஷோர் சந்தித்துப் பேசினார். கிஷோர் அடித்து விட்டதில் எடப்பாடியும் அசந்துபோனார்.

அப்புறமென்ன!
தமிழகத்தின் கள நிலவரத்தை அறிந்து சொல்லும் அசைன்மெண்ட் கிஷோரிடம் தரப்பட்டது, 5 சி பேமண்டுடன்.
அடுத்து சில வாரங்களில் சர்வே ரிப்போர்ட்டை எடப்பாடியிடம் கொடுத்திருக்கிறார் கிஷோர். ஏற்கனவே கைவசமிருந்த உளவுத்துறை அறிக்கையை அதனுடன் ஒப்பிட்டுப் பார்த்த எடப்பாடி உதட்டைப் பிதுக்கியிருக்கிறார்.


‘’சரி.. தேவைப்படும்போது தொடர்புகொள்கிறேன்’ என சொல்லி கிஷோரை அனுப்பிவைத்த எடப்பாடி, அப்புறம் அவரை தொடர்பு எல்லைக்கு வெளியிலேயே வைத்துவிட்டார்.
இந்த சமயத்தில்தான் கமலை அப்ரோச் செய்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர். கொஞ்ச நாட்களில் அதிமுகவிற்காக எடுத்த அதே சர்வேயை கொஞ்சம் உல்டா செய்து, குறிப்பிட்ட ஒரு தொகையை வாங்கிக் கொண்டு அதை கமலிடம் கொடுத்திருக்கிறார்.
கிஷோரின் ஆலோசனைப்படி மக்கள் நீதி மய்யத்தில் அமைப்பு ரீதியாக சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அத்துடன் அப்போது நடந்த எம்.பி தேர்தலில் மத்திய சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிட்ட கமீலா நாசருக்காக சில களப்பணிகளை செய்தது கிஷோர் டீம். ஆனால் எதுவுமே வேலைக்கு ஆகவில்லை.
இதனால் அப்செட்டான கமல், கிஷோரை சந்திப்பதைத் தவிர்த்துவிட்டார்.
தனது முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல, அடுத்தக் கட்டமாக ரஜினியை சந்தித்துத் தூண்டில் போட்டிருக்கிறார் கிஷோர்.
‘’ அரசியலில் நீங்கள் அடியெடுத்து வைத்தால் தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் நீங்கள்தான் என்பதை எங்கள் பூர்வாங்க ஆய்வுகள் சொல்கின்றன. இது பற்றி விரிவான ஒரு சர்வே எடுக்கட்டுமா?’’ என ரஜினிக்கு ஆசை காட்டியிருக்கிறார்.
கிஷோருடனான சந்திப்பிற்கு பிறகு, அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி மற்றும் தமிழருவி மணியனுடன் இது பற்றி ஆலோசனை செய்திருக்கிறார் ரஜினி.
‘’ அந்த ஆளோட அணுகுமுறையெல்லாம் தமிழ்நாட்டில் செல்லுபடியாகாது’’ என இருவரும் ஒரே போடாகப் போட கிஷோருக்குக் கதவை சாத்திவிட்டார் ரஜினி.
ஆனாலும் கிஷோர் அசரவில்லை!
ஒரு பிரபல திரைப்பட தயாரிப்பாளர் மூலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய்-யை சந்தித்திருக்கிறார்.
‘’ ரஜினியெல்லாம் இனி தமிழகத்தில் எடுபட வாய்ப்பில்லை. ஆனால் இளைஞரான உங்களுக்கு அரசியலில் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. எங்கள் முதற்கட்ட சர்வேயில் ஏறத்தாழ 25 சதவீத்தினருக்கு மேல் நீங்கள் முதல்வராக ஆதரவு தெரிவித்துள்ளனர். இதை மேலும் அதிகரிக்க சில வேலைகளைச் செய்ய வேண்டும்’’ என  கிஷோர் சொல்ல,
 ‘’ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நானே கூப்பிடுகிறேன்’’ என குட்பை சொல்லி அனுப்பியிருக்கிறார் விஜய்.
சொன்னபடி விஜய் இன்னும் கூப்பிடவில்லை.’ கூப்பிடும் நிலையிலும் இல்லை’ என்கிறார்கள் விஜய்க்கு நெருக்கமானவர்கள்.
இதனால் அடுத்து யாரை தமிழக முதல்வராக்குவது என்கிற தீவிர ஆலோசனையில் இருக்கிறாராம் பிரசாந்த் கிஷோர். அதுமட்டுமல்ல… நூறுக்கும் மேற்பட்டோர் பணிபுரியும் தனது ஐபேக் நிறுவனத்திற்கு வேறு ஏதாவது வேலை கொடுத்தாக வேண்டுமே என்பதுதான் அவரது இப்போதைய கவலை.
எல்லா கதவுகளையும் தட்டியாகிவிட்டது. இனி மிச்சமீதி இருப்பது பாமக, , தேமுதிக,  போன்ற உதிரிக் கட்சிகளும், ஜெ.தீபா போன்றவர்களும்தான்.
முடிந்தால் அங்கு டிரை பண்ணுங்க பாஸ்….ஆல் த பெஸ்ட்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக