வெள்ளி, 15 நவம்பர், 2019

சென்னை மேயர் தேர்தலில் உதயநிதி போட்டியிடமாட்டார் .. சென்னை மாவட்ட திமுக உதயநிதி பொறுப்பில்?

Udhayanidhi Stalin, Udhayanidhi Stalin News, Udhayanidhi Stalin DMK, Udhayanidhi Stalin Chennai Mayor, உதயநிதி ஸ்டாலின், சென்னை மேயர் பதவி, மேயர் தேர்தல்tamil.indianexpress.com : சென்னையில் 3 எம்.பி.க்கள் அலுவலகங்களை உதயநிதி மூலமாக திறந்திருப்பதும் கட்சியின் சில மட்டங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
உதயநிதி ஸ்டாலின் நேரடி கண்காணிப்பில் சென்னை திமுக நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இதன் ஒரு அம்சம்தான், திமுக.வின் 3 எம்.பி.க்களின் அலுவலகங்களையும் உதயநிதி மூலமாக திறக்க வைத்தது! இன்னொரு முக்கிய செய்தி, வருகிற மேயர் தேர்தலில் போட்டி இல்லை என முடிவு செய்திருக்கிறார் உதயநிதி.
உதயநிதி ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் ஆனபோதே, கட்சியின் அடுத்தக் கட்ட தலைமை தயாராகிவிட்டதை கட்சி நிர்வாகிகள் புரிந்து கொண்டார்கள். அதை நிரூபிக்கும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல், வேலூர் இடைத்தேர்தல், விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி இடைத்தேர்தல் என ஒவ்வொரு களத்திற்கும் நேரடியாக சென்று பிரசாரம் செய்தார் உதயநிதி. அதாவது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக, மாநிலம் முழுவதும் திமுக.வுக்கு உழைக்கும் தலைவராக உதயநிதி அடையாளம் காட்டப்பட்டார்.


தமிழச்சி தங்கப்பாண்டியன் அலுவலகத்தை திறந்த உதயநிதி ஸ்டாலின்
இப்படி மாநில அளவிலான பயணம் ஒருபுறம் இருந்தாலும், சென்னை திமுக மீது உதயநிதி கூடுதல் கவனம் செலுத்த அவருக்கு அஸைன்மெண்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. சமீப நாட்களாக சென்னையில் கட்சிக்காரர்களின் இல்ல துக்க நிகழ்வுகளில் தவறாமல் கலந்து கொள்கிறார் உதயநிதி. அதாவது, கல்யாண வீட்டுக்கு போகாவிட்டாலும் கருமாதி வீட்டுக்கு போகாமல் இருக்கக்கூடாது என்கிற கிராமத்து வழக்குதான் இதன் அடிப்படை! அதேசமயம், கட்சி நிர்வாகிகளின் குடும்ப முக்கிய திருமண நிகழ்வுகளில் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இது போக, சென்னை திமுக நிர்வாகிகளுக்கு உதயநிதியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒரு நிகழ்வுக்கு அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்து 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், சென்னையின் திமுக எம்.பி.க்கள் மூவரும் கடந்த 3 நாட்களில் அடுத்தடுத்து தங்கள் தொகுதி அலுவலகத்தை திறந்தனர்.
கலாநிதி வீராசாமி அலுவலகத்தை திறந்த உதயநிதி ஸ்டாலின்
மத்திய சென்னை எம்.பி. அலுவலகத்தை ஆயிரம்விளக்கில் தயாநிதி மாறனும், வட சென்னை எம்.பி. அலுவலகத்தை தண்டையார் பேட்டையில் கலாநிதி வீராசாமியும் அமைத்திருக்கிறார்கள். தென் சென்னை எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் சைதாப்பேட்டையில் அலுவலகம் அமைத்திருக்கிறார். இந்த 3 அலுவலகங்களையும் திறந்து வைத்தவர், உதயநிதிதான்.
கலாநிதியின் அலுவலகம் திறப்பு விழாவில் அவரது தந்தையும், கட்சி சீனியருமான ஆற்காடு வீராசாமியும் கலந்து கொண்டார். இந்த நிகழ்வுகளுக்கு தலைமையின் ஆசியும் வழிகாட்டலும் உண்டு என்பதை நிரூபிக்கும் வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த திறப்பு விழாக்களில் உதயநிதியுடன் கலந்து கொண்டார்.
சென்னையில் கட்சி ரீதியான 3 மாவட்டங்களிலும் முக்கிய முடிவுகள் இனி உதயநிதியுடன் கலந்து ஆலோசித்தே எடுக்கப்படும் என்பதற்கான முன்னோட்டம்தான் இந்த நிகழ்வுகள் என கட்சி வட்டாரத்தில் கூறுகிறார்கள். இதை வைத்து, வருகிற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மேயர் பதவிக்கு உதயநிதி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவுகிறது. கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் சிலர் உதயநிதிக்காக வேட்புமனு வாங்கியிருப்பது இந்த யூகங்களை அதிகப்படுத்தியிருக்கிறது.
ஆனால் உதயநிதியின் மனநிலை இப்போதைக்கு மேயர் பதவியை நோக்கி இல்லை. சென்னை மட்டுமல்லாமல், மாநிலம் முழுக்க கட்சி அமைப்புகளில் செல்வாக்கு பெறுவது, இளைஞரணிக்கு மாநிலம் முழுக்க 50 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, சற்றே வலுவிழந்த சென்னை திமுக.வை பழையபடி தூக்கி நிறுத்துவது ஆகிய மூன்றையே உதயநிதி தனது இலக்குகளாக வைத்திருப்பதாக கூறுகிறார்கள், அறிவாலய நிர்வாகிகள்.
அதேசமயம், சென்னை திமுக மேயர் வேட்பாளரை தேர்வு செய்யப் போவது முழுக்க உதயநிதிதான் என்பதையும் அவர்கள் உறுதிப் படுத்துகிறார்கள். அநேகமாக இளைஞரணி நிர்வாகி ஒருவருக்கே சென்னை மேயர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பு இருக்கும் போலத் தெரிகிறது.
இது ஒருபுறமிருக்க, விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி இடைத்தேர்தல் தோல்விகள்தான் சென்னை மேயர் தேர்தலில் இருந்து உதயநிதியை பின்வாங்க வைத்திருப்பதாக சிலர் குறிப்பிடுகிறார்கள். தவிர, சென்னையில் 3 எம்.பி.க்கள் அலுவலகங்களை உதயநிதி மூலமாக திறந்திருப்பதும் கட்சியின் சில மட்டங்களில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறைந்தபட்சம், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவையாவது இந்த நிகழ்வுகளுக்கு அழைத்திருக்கலாம் என்பது அவர்களது ஆதங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக