வியாழன், 7 நவம்பர், 2019

ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்! ஆசாத் பெயரை மாற்றி தந்தை பெயரை வைக்க எதிர்ப்பு

m.dailyhunt.in : ஆந்திர மாநிலத்தில் அப்துல் காலம் பெயரில் வழங்கப்பட்டு வந்த விருதின் பெயரை மாற்றியதனால் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக ட்விட்டரில் ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு 'ஏபிஜே அப்துல் கலாம் பிரதிபா புராஸ்கர்' என்று வழங்கப்பட்டு வந்த விருதின் பெயர் 'ஒய்.எஸ்.ஆர் வித்யா புராஸ்கர்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மவுலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளான நவம்பர் 11ம் தேதி தேசிய கல்வி தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. ஆந்திர மாநில பள்ளிகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருதுகள், உயர்படிப்புக்கான கல்வி உதவித்தொகை ஆகியவை வழங்கப்படுகிறது.
இந்நிலையில், 'அப்துல் கலாம் பிரதிபா புராஸ்கர்' பெயரில் வழங்கப்பட்டு வந்த இந்த விருதின் பெயர், ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தையும், அம்மாநில முன்னாள் முதல்வருமான ராஜசேகர ரெட்டியின் பெயராக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டது. இதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் ட்விட்டரிலும் #YSRCPInsultsAPJAbdulKalam என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
பெயர் மாற்றத்திற்கு எதிர்ப்பு வலுக்கவே, அரசாணையை ரத்து செய்து முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்தார். முன்னதாக இருந்த, கலாம் பெயரிலே மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக