வியாழன், 21 நவம்பர், 2019

ரணில் விக்ரமசிங்கே பதவி காலம் முடியும் முன்பே தார்மீக பொறுப்பேற்று விலகினர்... பின்னணி...

ராஜபக்‌சே ரணில் விக்ரமசிங்கேvikatan :  ராஜபக்‌சேவின் பகிரங்க அறிவிப்பு; ஒரு மணி நேரத்தில் பதவி! - ரணில் விக்ரமசிங்கே ராஜினாமா பின்னணி - த்யா கோபாலன் : இலங்கை அதிபர் தேர்தல் தோல்விக்குப் பிறகு தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் ரணில் விக்ரமசிங்கே. இலங்கையில் கடந்த 16-ம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று மறுநாள் 17-ம் தேதியே வாக்கு எண்ணிக்கை முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. இலங்கையைப் பொறுத்தவரை இலங்கை பொதுஜன முன்னணி கட்சி மற்றும் புதிய ஜனநாயக முன்னணி கட்சி ஆகிய இரண்டும் மிகப் பெரிய கட்சிகளாக உள்ளன.

அந்நாட்டில் நடைபெற்ற 8-வது அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவின் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை விட, இலங்கை பொதுஜன முன்னணி கட்சி வேட்பாளர் கோத்தபய ராஜபக்‌சே பதிமூன்று லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இலங்கையின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கோத்தபய, தேர்தல் முடிவுகள் வெளியான மறு தினமே அந்நாட்டின் அதிபராகப் பதவியேற்றுக்கொண்டார்.
இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ரணில் விக்ரமசிங்கே பிரதமராகப் பதவி வகித்து வந்தார். இதற்கிடையில் அதிபர் தேர்தலில் தங்கள் கட்சி தோல்வியடைந்ததற்குப் பொறுப்பேற்று தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

மக்கள் ஆதரவைப் பெறத் தவறிய ரணில்!
2015-ம் ஆண்டு இலங்கையில் நடந்த பொதுத் தேர்தலின் போது, ராஜபக்‌சேவுக்குச் செல்வாக்கு குறைவாக இருந்தது. அதனால் ரணில் விக்ரமசிங்கேவின் கட்சி சார்பில் போட்டியிட்ட மைத்திரிய பால சிறிசேனா வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் `ராஜபக்‌சே தலைமையில் நடந்த ஆட்சியில் பல்வேறு ஊழல் குற்றங்கள் நிகழ்ந்தன, அதற்குக் காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள். மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்’ போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டார் ரணில்.





ஆனால், அவர் பதவியேற்ற பிறகு எந்த ஒரு ஊழல்வாதியையும் கைது செய்யவில்லை மாறாக அவர் மீதே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இதற்கிடையில் சமீபத்தில் இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டு வெடிப்பு தாக்குதலால், ரணில் விக்ரமசிங்கே ஆட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்தனர்.
கோத்தபயவின் வெற்றி!
நிலைமை இப்படியிருக்க, இந்த ஆண்டு நடந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்‌சே முன்னெடுத்துவைத்த ஒரே அறிவிப்பு ‘இலங்கை மக்களின் பாதுகாப்பு’ இதை மட்டுமே முன்னிறுத்தி நாடு முழுவதும் பிரசாரம் செய்தார். மேலும் கோத்தபய முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளராக இருந்ததால் அவரின் வாக்குறுதி அனைத்துத் தரப்பு மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இறுதியில் சிங்களர்கள் மற்றும் பௌத்த மக்களிடையே சிறந்த செல்வாக்கைப் பெற்ற கோத்தபய பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.




இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர்தான் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்‌சே. தன் சகோதரர் இலங்கை அதிபராக வெற்றி பெற்ற பிறகு ரணில் விக்ரமசிங்கேவை பதவி விலக வலியுறுத்தினார் மகிந்த ராஜபக்‌சே. ``தற்போது இலங்கையில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். ஆளும் கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள் ஏற்கெனவே தங்களின் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதிபரும், அமைச்சரவையும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களிடம் இருந்தால் பயனுள்ளதாக இருக்கும்” எனப் பகிரங்கமாக அறிவித்தார்.



இதையடுத்து நேற்று பிற்பகல் ரணில் விக்ரமசிங்கே தன் கூட்டணி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு மக்களிடம் பலத்த எதிர்ப்பு இருப்பதாகவும் அவர் பதவி விலக அனைத்துத் தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரே ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளார் ரணில். அப்போது நாட்டு மக்களிடம் பேசிய அவர், ``புதிய அதிபர் புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு அனுமதி அளித்து நான் பதவி விலகுகிறேன். எனது முடிவை நாளை அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்” எனப் பேசியிருந்தார்.

சகோதரரைப் பிரதமராக்கும் அதிபர்!
ரணில் விக்ரமசிங்கே தன் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்த அடுத்த ஒரு மணி நேரத்தில், இடைக்கால பிரதமராக தன் சகோதரர் மகிந்த ராஜபக்‌சேவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்‌சே. ரணில் இன்று அதிகாரபூர்வமாகப் பதவி விலகினால், இன்று பிற்பகலே ராஜாக்‌சே பிரதமராகப் பதவியேற்பார் என அவரின் இலங்கை பொதுஜன முன்னணி கட்சியினர் தகவல் தெரிவித்துள்ளனர்.





மகிந்த ராஜபக்‌சே மட்டும் பிரதமராகப் பதவியேற்றால், இலங்கை வரலாற்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் நாட்டின் மிகப் பெரிய பதவி வகிப்பது இதுவே முதல்முறையாக இருக்கும். இலங்கை சட்ட விதிகளின் படி ஒரு அரசு 4.5 ஆண்டுகள் நிறைவு செய்தால் மட்டுமே அங்கு நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடத்தப்படும். தற்போது ஆளும் கட்சியாக உள்ள ரணிலின் கட்சி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்தான் தன் 4.5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்கிறது. அதன் பின்னரே பொதுத் தேர்தல் நடத்தப்படும். அதுவரை மகிந்த ராஜபக்‌சே இலங்கையின் இடைக்கால பிரதமராக இருப்பார் எனக் கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக