வெள்ளி, 22 நவம்பர், 2019

இலங்கை மீன்வளத்துறை அமைச்சராக திரு டக்ளஸ் தேவானந்தா நியமனம்

Janaki Karthigesan Balakrishnan : கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு அமைச்சர் பதவி
கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சரான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அமைச்சு அலுவல்களை துரிதகதியில் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்ட போது என அண்மையில் முகநூல் செய்தி வந்தது.
மாண்புமிகு கோத்தபாய ராஜபக்ஸ அவர்கள் நவம்பர் 16, 2019 தினம் சிறீலங்காவின் ஜனாதிபதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே.
அதைத் தொடர்ந்து மாண்புமிகு மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரதமராக நியமிக்கப்படுவார் எனும் செய்தி அறிந்ததும், கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியேற்கும் வரை அவரது ஆதரவாளர்களும், கட்சி அங்கத்தவர்களும் அவருக்கு ஏற்கனவே பரிச்சயமான வடமாகாண புனர்வாழ்வும், குடியேற்றமும் அமைச்சின் பொறுப்புகளையும், அத்துடன் அவர் ஓர் இந்து ஆதலால், வழமையாக அதனுடன் இணைந்த இந்து கலாச்சார அமைச்சின் பொறுப்புகளையும் ஏற்றுக்கொள்வார் என பரப்புரை செய்தனர்.  ஆனால் அவருக்கு ஒதுக்கப்பட்டதோ அனைத்து சிறீலங்காவிற்கும் பொதுவான அமைச்சான கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சாகும்
ஆதரவாளர்களும், கட்சி அங்கத்தவர்களும் அவரை வடக்கிலே முடக்க எண்ணியிருந்தாலும், கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சிறீலங்காவிற்கும், அதன் மக்களுக்கும் பொதுவானவர் என ராஜபக்ஸ் அரசு அவரைக் கனம் பண்ணி அப்பதவியை அளித்துள்ளதை அனைவரும் வரவேற்க வேண்டும்.

கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களோடு மட்டும் வாழவில்லை, அவர்களுக்கு மட்டும் சேவை செய்யவில்லை. அவரது அளப்பரிய சேவையை முஸ்லிம் மக்களுக்கும் வழங்கப்பட்டதை, யாழ் முஸ்லிம் மக்களின் வலிந்து நிர்ப்பந்திக்கப்பட்ட இடப்பெயர்வின் போது பலரும் அறிந்திருப்பர், உணர்ந்திருப்பர்.

சிறீலங்காவில் சமாதானப் பேச்சு வார்த்தைகள் தொடங்கிய நாட்களில், சகல ஆயுதப்போரட்ட இயக்கங்களையும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்து, பேச்சு வார்த்தைகளில் கலந்து சிறீலங்கா அரசியலில் அனைத்து இன மக்களுடனும் பங்குபற்ற அழைத்தபோது முதலில் முன்வந்தவரும் அவரே. ஆகவே சிறீலங்காவில் மூவினங்களினதும், தமிழ், சிங்கள, முஸ்லிம், வாழ்வாதாரமாக அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சினைப் பொறுப்பேற்க கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மிகவும் பொருத்தமானவரே. கடற்றொழிலா என்றால், சிறீலங்காவின் சகல நீரியல்வள மூலங்கள் பற்றி அவற்றில் நீச்சல் செய்து கற்றுக்கொண்டவர் ஆதலால் அதுவும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே!

மேலும் தற்போதைய அமைச்சரவை ஒரு சில அமைச்சர்களை மட்டுமே கொண்ட தற்காலிகமானது. இது அடுத்த பாராளுமன்றத் தேர்தல்வரை நீடிக்கும். இந்த நிலையில் அமைச்சர்களை மாகாணரீதியாக மட்டும் நியமிப்பது சாத்தியமில்லை என்பதை ஆதரவாளர்களும், கட்சி அங்கத்தவர்களும் புரிந்து கொள்வது அவசியம். இந்த நியமனத்தினால் கிழக்கு மாகாணமும், புத்தளம் போன்ற இடங்களில் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களால் பல வருடங்களுக்கு முன்பு குடியமர்த்தப்பட்ட இடம்பெயர்ந்த யாழ் முஸ்லிம் மக்களுக்கு மீண்டும் அவரது சேவையைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிட்டுகிறது.

வடபகுதி மக்களிடம் தன்னை நம்பி வாக்களியுங்கள் என்று கூறி, மேலும் நம்பிக்கையூட்டும் வகையில் “நாம் செய்வோம், செய்விப்போம்”, அதில் பங்காளிகளாக நீங்களும் இணையுங்கள் எனும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டும், அம்மக்கள் எதிராக வாக்களித்ததால் மனம் நொந்து, அமைச்சர் பதவியை ஏற்கத் தயங்கிய கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஏன் அமைச்சர் பதவியென வினா எழுப்புபவர்களும் உள்ளனர். வடக்கின் தமிழ் மக்கள் அவரது உண்மையான சேவையின் அழைப்பை ஏற்க மறுத்தபோது, அவரது அர்ப்பணிப்பான சேவையை நன்கு அறிந்து புரிந்திருந்த ராஜபக்ஸ அரசு, அவரை கெளரவப்படுத்தி நாடு முழுவதற்கும் பொதுவான ஒரு அமைச்சை வழங்கி, ஒரு பங்காளராக ஏற்றது பற்றி அவரது ஆதரவாளர்களும், கட்சி அங்கத்தவர்களும் பெருமைப்பட வேண்டும்.

ஆகவே ஒட்டு மொத்தத்தில் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு வழங்கப்பட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வள மூலங்கள் அமைச்சு மிகவும் பொருத்தமானதும், காலத்திற்கேற்ப அமைந்ததுமாகும். அடுத்த தேர்தல் இடைக்காலத்தில் அதனால் பயனடைய சகலரும் முன்வருவது அவசியம். அமைச்சரும், அவரது அமைச்சு காரியாலயமும் தயார் என்பதை இணைக்கப்பட்ட படங்கள் காண்பிக்கின்றன.
பி.கு: இதே அமைச்சர் பதவி முன்பொரு காலத்தில் அமரர் ஜீ. ஜீ. பொன்னம்பலம் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக