சனி, 2 நவம்பர், 2019

அதிமுகவிடம் 2 மேயர் பதவிகளை பாஜக கேட்கிறது

அதிமுகவிடம் 2 மேயர் சீட் கேட்கும் பாஜக!மின்னம்பலம் : உள்ளாட்சித் தேர்தலில் 2க்கும் குறையாமல் மேயர் சீட் ஒதுக்கித் தர வேண்டும் என அதிமுகவிடம் பாஜக வலியுறுத்திவருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, தேமுதிக, பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. பாஜக 5 தொகுதிகளில் போட்டியிட்டது. இக்கூட்டணி தேனி தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. எனினும் அப்போது நடந்த இடைத் தேர்தலில் 22 இடங்களில் 9 இடங்களை மட்டும் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்துக்கொண்டது. தோல்வியால் துவண்டிருந்த அதிமுக கூட்டணிக்கு தற்போது விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளில் பெற்ற வெற்றி பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகளை தற்போதே அரசியல் கட்சிகள் தொடங்கிவிட்டன. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் தொடர்ந்து சொல்லிவருகின்றன. தேர்தலில் தங்களுக்கு அதிக இடங்களை வழங்க வேண்டும் என பாஜக முன்கூட்டியே நிபந்தனை விதிக்க ஆரம்பித்துவிட்டது.
இதுதொடர்பாக நாம் ஏற்கனவே டிஜிட்டல் திண்ணையில், “மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை தமிழக அமைச்சர் வேலுமணி சந்தித்தபோது, இடைத் தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்றால் உள்ளாட்சித் தேர்தலில் ஐந்து மேயர் வேட்பாளர் இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருக்கிறார்” என்று சொல்லியிருந்தோம்.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 15 மாநகராட்சிகளில் 2 அல்லது அதற்கு மேற்பட்ட மாநகராட்சி மேயர் பதவிகளை அதிமுகவிடம் பாஜக எதிர்பார்த்து வருவதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அந்த இடங்களில் இளம் மற்றும் புதிய முகங்களை வேட்பாளர்களாக நிறுத்த பாஜக தலைமை முடிவு செய்து அதற்கான தேடுதலில் ஈடுபட்டுவருகிறது. எனினும் பாஜகவுக்கு மேயர் பதவியையோ அல்லது முக்கியமான உள்ளாட்சித் துறை பதவிகளையோ அளிக்க வாய்ப்பில்லை என்று அதிமுக மூத்த தலைவர்கள் கூறுகின்றனர். கடந்த தேர்தல்களின்போது பாஜக பெற்ற வாக்குகளையும் அதற்கான காரணமாக அவர்கள் முன்வைக்கின்றனர்.
எவ்வாறாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலை அதிமுகவுடன் இணைந்து சந்திப்பது என்ற முடிவில்தான் பாஜக இருக்கிறது. தமிழ்நாட்டில் வலுவாக காலூன்றுவதற்கான தனது திட்டத்தின் ஒருபகுதியாக உள்ளாட்சித் தேர்தலை பாஜக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதுதொடர்பாக பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் நாகேந்திரன் கூறுகையில், ‘உள்ளாட்சித் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் வரவழைக்கப்பட்டுள்ளன’ எனத் தெரிவித்துள்ளார். இந்த விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்க பாஜகவின் மூத்த தலைவர்கள் அடங்கிய உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இந்த குழுவானது இன்னும் ஓரிரு தினங்களில் அமைக்கப்படும் என்று பாஜக மாநிலச் செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக