வியாழன், 17 அக்டோபர், 2019

முதல்வர் எப்படாடி பழனிசாமி வாகனத்தில் பணம்: கவுதமன் சாலை மறியல்.. வீடியோ


முதல்வர் வாகனத்தில் பணம்: கவுதமன் சாலை மறியல்!மின்னம்பலம் : அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகக் கூறி விக்கிரவாண்டியில் இயக்குனர் கவுதமன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுகவின் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமியும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அண்மையில் தமிழ்ப் பேரரசு கட்சியைத் தொடங்கிய இயக்குனர் வ.கவுதமனும், விக்கிரவாண்டி தொகுதியில் சாவி சின்னத்தில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்த கவுதமன், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுவருவதாகவும் அதனை தடுக்க வேண்டுமெனவும் மனு அளித்திருந்தார்.

இந்த நிலையில் அதிமுக, திமுகவின் பணப்பட்டுவாடாவை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி இன்று (அக்டோபர் 17) காலை 11.30 மணியளவில் விக்கிரவாண்டி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வ.கவுதமன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
தேர்தல் ஆணையம் தங்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கூறி சாலையில் அமர்ந்துகொண்ட கவுதமன், “திமுகவும், அதிமுகவும் 150 கோடியை விக்கிரவாண்டி தொகுதிக்குள் இறக்கியிருப்பதாக 3 நாட்களுக்கு முன்பு கலெக்டரிடம் மனு அளித்தேன். ஆனால், கலெக்டர் கண்டுகொள்ளவில்லை. எல்லோருக்கும் பணம் கொடுத்து முடித்தாயிற்று. பரிசுப் பொருளும், பணமும் கொடுக்கிறார்கள். இது நாடா அல்லது சுடுகாடா? இதையெல்லாம் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்க்கிறதா? 50 வருடங்களாக திமுகவும், அதிமுகவும் கொள்ளையடித்துவிட்டு, அந்த காசில் மக்களுக்கு லஞ்சம் கொடுத்து மீண்டும் கொள்ளையடிக்கப் பார்க்கிறது. இங்கு மக்களாட்சி நடக்கிறதா அல்லது மன்னராட்சி நடக்கிறதா? முதல்வர் வண்டியில் பணம் வருகிறது, அமைச்சர்களின் வண்டியில் பணம் வருகிறது” என்று ஆவேசமாக குற்றம்சாட்டினார்.
கொட்டும் மழையில் நடைபெற்ற இப்போராட்டத்தால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலையில் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.தகவலறிந்து அங்கு விரைந்த விக்கிரவாண்டி காவல் துறையினர், கவுதமன் மற்றும் தமிழ்ப் பேரரசு கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று தனது சாலை மறியல் போராட்டத்தை கவுதமன் வாபஸ் பெற்றுக்கொண்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக