சனி, 12 அக்டோபர், 2019

அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய் அகமது அலிக்கு வழங்கப்படுகிறது

அமைதிக்கான நோபல் பரிசை வென்ற எத்தியோப்பியா பிரதமர்!மின்னம்பலம் : 2019 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பியா பிரதமர் அபேய் அகமது அலிக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், அமைதி, பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு வழங்கப்படும் உலகின் உயரிய விருதான நோபல் பரிசிற்கான 2019 ஆம் ஆண்டின் வெற்றியாளர்கள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 11) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வருடத்தின் அமைதிக்கான நோபல் பரிசை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் பரவலாக எழுந்திருந்தது. அந்த வகையில் தற்போது எத்தியோப்பியா பிரதமருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட எல்லைப் போரைத் தொடர்ந்து எத்தியோப்பியாவிற்கும் அதன் அண்டை நாடான ஏரிட்ரேயாவிற்கும் இடையே ராணுவ ரீதியிலான சிக்கல் நிலவி வந்தது. இந்த சிக்கலைத் தனது சமாதான ஒப்பந்தத்தின் மூலமாக முடிவுக்குக் கொண்டுவந்தார் பிரதமர் அபேய் அகமது அலி. இந்த எல்லைப் பிரச்னையைத் தீர்த்ததற்காகவும், அமைதியை நிலைநாட்டவும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் , அபேய் அகமது அலிக்கு இந்த விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் எத்தியோப்பியாவின் பிரதமராகப் பதவியேற்ற அகமது அலி, மிகவும் இறுக்கமாக கட்டுப்படுத்தப்பட்ட தனது நாட்டில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தினார். ஆயிரக்கணக்கான செயற்பாட்டாளர்களை சிறையில் இருந்து விடுவித்ததுடன், நாடுகடத்தப்பட்ட அதிருப்தியாளர்களை தாயகம் திரும்புவதற்கும் அனுமதி அளித்தார்.
அமைதிக்கான நோபல் பரிசை வெல்லும் 100ஆவது நபர் அபேய் அகமது அலி என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்த வரும் அக்டோபர் 14-ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக