வியாழன், 10 அக்டோபர், 2019

சீன அதிபர் சென்னை மகாபலிபுரம் கோவளம் ..காரிலேயே சுற்றி பார்க்க திட்டம் ! ஹெலிகாப்டர் தவிர்ப்பு..

tamil.oneindia.com - s/VelmuruganP. : சென்னை: நாளை காரிலேயே சென்னையில் இருந்து மாமல்லபுரம் செல்லும் சீன அதிபர்.. மீண்டும் காரிலேயே சென்னை வந்து ..மீண்டும் காரிலேயே கோவளம் போகிறார்.. மீண்டும் காரிலேயே சென்னை திரும்புகிறார். அப்படி சென்னையை முழுமையாக சுற்றிப்பார்த்தபடி சீன அதிபர் இரண்டு நாள் காரில் பயணம் மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
இதன் காரணமாவே நாளை மற்றும் நாளை மறு நாள் சென்னையில் முக்கிய சாலைகளான ஜிஎஸ்டி சாலை, ஒஎம்ஆர் சாலை, ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்தித்த இன்று நாள் பயணமாக நாளை மதியம் சென்னை வருகிறார். இதேபோல பிரதமர் மோடியும் இரண்டு நாள் பயணமாக சென்னை வருகிறார்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடி ஆகியோர் சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இரு நாட்டு விவகாரங்கள் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இது தொடர்பான விவரங்களை இப்போது முழுமையாக பார்க்கலாம்.

பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மதியம் 12.30 மணிக்கு சென்னை விமானநிலையம் வருகிறார். அங்கிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் கோவளம் செல்கிறார். இதற்காக அங்கு ‘ஹெலிபேட்' தளம் அமைக்கப்பட்டு உள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியவுடன் கார் மூலம் கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்' நட்சத்திர ஓட்டலுக்கு பிரதமர் மோடி போகிறார்.
அதே சமயம் சீன அதிபர் ஜி ஜின்பிங் மதியம் 1.30 மணி அளவில் தனி விமானத்தில் சென்னை வருகிறார். விமானநிலையத்தில் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும், அவர் காரில் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிரண்ட் சோழா நட்சத்திர ஓட்டலுக்கு மதியம் 1.45 மணிக்கு செல்கிறார். அங்கு மதிய உணவு சாப்பிட்டுவிட்டு ஓய்வு எடுக்கிறார்.
பின்னர் மாலை 4 மணிக்கு கிண்டியில் இருந்து கார் மூலம் மாமல்லபுரம் செல்கிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு பகுதிக்கு சென்றடைகிறார். அங்கு சீன அதிபர் ஜின்பிங்கை பிரதமர் மோடி வரவேற்கிறார்.
பின்னர் அவர்கள் இருவரும் சிற்பங்களை பார்த்து ரசித்தபடி, நடந்து சென்றபடி பேசுவார்கள். அப்போது அவர்கள் கிருஷ்ணன் வெண்ணெய் உருண்டை பாறையையும் பார்வையிடுகிறார்கள். பின்னர் கார் மூலம் இருவரும் ஐந்துரதம் மற்றும் கடற்கரை கோவிலுக்கு சென்று சுற்றி பார்க்க உள்ளார்கள். அங்கு பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. அதனை இரு நாட்டு தலைவர்களும் பார்வையிடுகிறார்கள். அங்கேயே இரவு உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
பின்னர் சீன அதிபர் ஜின்பிங் மாமல்லபுரத்தில் இருந்து கார் மூலம் கிண்டி ஐ.டி.சி. கிரண்ட் சோழா ஓட்டலுக்கு மீண்டும் வருகிறநார். பிரதமர் மோடி கோவளத்தில் உள்ள ‘தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ்' ஓட்டலுக்கு செல்கிறார்.
கிண்டி நட்சத்திர ஓட்டலில் இரவில் தங்கும் சீன அதிபர் ஜின்பிங் 12-ந்தேதி சனிக்கிழமை காலை 9.05 மணிக்கு அங்கிருந்து காரில் புறப்பட்டு கோவளத்தில் பிரதமர் நரேந்திர மோடி தங்கி இருக்கும் ஓட்டலை நோக்கி புறப்படுகிறார் காலை 9.50 மணிக்கு அவர் ஓட்டலை அடைகிறார்.
அங்கு போய்ச் சேர்ந்ததும் அவரும் மோடியும் ஓட்டலில் உள்ள ஒரு அறையில் காலை 10 மணி முதல் 10.40 மணி வரை தேனீர் அருந்தியவாறு தனியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்கள். எல்லையில் அமைதியை ஏற்படுத்துவது இந்தியா-சீனா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது, உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு உள்ளது.
பின்னர் 10.50 மணி முதல் 11.40 மணி வரை அந்த ஓட்டலில் உள்ள மற்றொரு அறையில் இருவரின் தலைமையில் இருநாட்டு உயர் மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடத்துகிறார்கள்.. இதனைதொடர்ந்து 2 பேரும் பேசிக்கொண்டே மதிய உணவு அருந்துகிறார்கள். அதன்பிறகு ஜின்பிங் தனது 2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, மதியம் 12.45 மணிக்கு அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு 1.25 மணிக்கு சென்னை விமானநிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து அவர் தனிவிமானம் மூலம் 1.35 மணிக்கு நேபாளம் புறப்பட்டு செல்கிறார். அதைத்தொடர்ந்து பிரதமர் மோடியும் மதியம் 2 மணிக்கு டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
இரு நாட்டு தலைவர்களின் வருகைக்காக 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. சீன அதிபர் காரிலேயே பயணத்தை மேற்கொள்வதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக