வெள்ளி, 25 அக்டோபர், 2019

ஹரியானாவில் ஆட்சியமைக்கப் போவது யார்? மகாராஷ்டிரா ஹரியான தேர்தல்களால் காங்கிரஸ் மீள்கிறது? வீடியோ


BBC : கடந்த அக்டோபர் 21-ஆம் தேதியன்று நடந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை முதல் நடந்தது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் ஹரியாணாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடந்த 2014-இல் இம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளை வென்று பாஜக ஆட்சியமைத்தது. மனோகர் லால் கட்டார் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். 19 தொகுதிகளை பெற்ற இந்திய தேசிய லோக் தளம் எதிர்கட்சியானது. அதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 15 இடங்களை மட்டுமே வெல்ல, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
e>இந்நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாஜக 40 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வென்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகள் மீது அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப் பேரனும், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரனுமான துஷ்யந்த் தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளை வென்றுள்ளது.
இக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் பங்கேற்க அறைக்கூவல் விடுத்துள்ளன.

இந்நிலையில், ஹரியாணாவில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பது குறித்தும், துஷ்யந்த் சௌதாலாவின் பங்களிப்பு குறித்தும் பிபிசி பஞ்சாபி சேவை பிரிவின் ஆசிரியர் அதுல் சங்கர் கூறுகையில், ''ஹரியாணாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் கடந்த தேர்தலை விட இரட்டிப்பு மடங்கு அதிக இடங்களில் வென்றுள்ளது அக்கட்சிக்கு மகிழ்ச்சியாக இருக்கும்'' என்று கூறினார்.
''அதேவேளையில், ஆட்சியமைக்கும் அளவுக்கு வெல்லாவிட்டாலும், அதிக இடங்களில் வென்ற பாஜக, மீண்டும் ஆட்சியமைக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்தார்.
''தேர்தல் பிரசாரத்தில் மாநில பிரச்சனைகள் குறித்து பேசாமல் தேசிய பிரச்சனைகள் மற்றும் 370 சட்டப்பிரிவு ஆகியவை குறித்து பாஜக கவனம் செலுத்தியது மக்களை பெரிதாக ஈர்க்கவில்லை'' என்று அவர் கூறினார்.
''மாநிலத்தில் கணிசமாக உள்ள ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை, ஜாட் சமூகத்தினரை தவிர மற்ற சமூகத்தினரை ஒருங்கிணைக்கவே அக்கட்சி முயற்சித்தது. ஜாட் சமூகத்தினரின் வாக்கு துஷ்யந்த் சௌதாலாவின் தலைமையிலான புதிய கட்சியான ஜனநாயக் ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கிடைத்துள்ளதாக தெரிகிறது'' என்று அதுல் சங்கர் கூறினார்.
''ஆட்சியமைக்க ஜனநாயக் ஜனதா கட்சியின் ஆதரவவை பாஜக கோரலாம். ஆனால் அவ்வாறு பாஜக ஆதரவு கோரினால், ஜனநாயக் ஜனதா கட்சியின் எதிர்பார்ப்புகளை அக்கட்சியால் சமாளிக்கமுடியாமல் போகலாம். இனிவரும் நாட்களில் ஹரியாணாவில் ஆட்சியமைக்க போவது யார் என்பது தெளிவாகும்'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக