வெள்ளி, 25 அக்டோபர், 2019

கீழடி: அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி!

கீழடி: அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி! மின்னம்பலம் : கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் கட்ட பணிக்கு மத்திய அரசு இன்று (அக்டோபர் 24) அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில்  நடத்தப்படும் அகழாய்வு மூலம், 2600 ஆண்டுகளுக்கு முன்பே வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. பானை ஓடுகள், தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், நீர் செல்வதற்கான குழாய்கள் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஐந்தாம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.
நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற பணியின் போது, YD6/3 என்ற குழியில் பனையின் விளிம்பு போன்ற ஒரு அமைப்பு தென்பட்டது. அதை முழுமையாக வெளிப்படுத்திய போது, சிவப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையிலிருந்தது தெரியவந்தது. இது பாதுகாப்பாக நீரை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்திய நிலையில் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அருகில் வடிகட்டி ஒன்றும் பொருத்தப்பட்டவாறு கண்டுபிடிக்கப்பட்டது. இது சங்ககால மக்கள் திரவ பொருள்களை எப்படிக் கையாண்டுள்ளனர் என்பதைக் காட்டும் வகையில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
5ஆம் கட்ட பணி நடைபெற்றும் வரும் நிலையில் இன்று (அக்டோபர் 24) ஆறாம் கட்ட பணிக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சிவகங்கையில் உள்ள கீழடி, தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளை, ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்திற்கு உட்பட கொடுமணல் ஆகிய பகுதிகளில் அகழாய்வு நடத்த அடுத்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக