செவ்வாய், 29 அக்டோபர், 2019

மருத்துவர்கள் சங்கங்களுக்கு எதிராக அரசு!

மருத்துவர்கள் சங்கங்களுக்கு எதிராக அரசு!
மின்னம்பலம் : அரசு மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபிக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.
காலமுறை ஊதியம், பதவி உயர்வு வழங்குதல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் கடந்த ஐந்து நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 18 ஆயிரம் பேர் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் கடும் அவதியடைந்தனர். மருத்துவர்களுடன் சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்டம் நீடித்துவருகிறது. இதற்கிடையே பல இடங்களில் நோயாளிகளின் உறவினர்களுக்கும் மருத்துவர்களுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டன.
இந்த நிலையில் டிஜிபி திரிபாதிக்கு சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் இன்று (அக்டோபர் 29) எழுதியுள்ள கடிதத்தில், “போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்களின் சங்கங்களுடன் கடந்த 25ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது, மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும் என்ற உத்தரவாதத்தினை ஏற்று போராட்டத்தை திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்தனர். எனினும், அதனை மீறும் விதமாக மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த 5 பேர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சாகும்வரை உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “இதுபோலவே அரசு மருத்துவக் கல்லூரிகள், மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மருத்துவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் 20 சதவிகித மருத்துவர்கள்தான் கலந்துகொண்டுள்ளனர்” என்று கூறியுள்ள பீலா ராஜேஷ், “பணிக்கு வரும் மருத்துவர்களை பணியாற்ற விடாமல் இடையூறு செய்யும் விதமாக மருத்துவ சங்கங்களின் செயல்பாடுகள் உள்ளன. ஆகவே பொதுமக்களுக்கு மருத்துவ சேவை வழங்கப்பட, போராட்டத்தில் ஈடுபடாத மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக