ஞாயிறு, 27 அக்டோபர், 2019

யானை தந்தங்கள் வழக்கு .. நடிகர் மோகன் லாலுக்கு அழைபானை

யானைத் தந்தங்கள்: மோகன் லாலுக்கு சம்மன்!மின்னம்பலம் : கேரளாவில் யானைத் தந்தங்களை வைத்திருந்த வழக்கில் பிரபல நடிகர் மோகன்லாலுக்கு பெரும்பாவூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
கேரள மாநிலம் தேவாராவில் உள்ள நடிகர் மோகன்லால் வீட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி நான்கு யானை தந்தங்களைக் கைப்பற்றினர். இது தொடர்பாக மோகன் லால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. யானை தந்தங்களைத் திருப்பி ஒப்படைக்கும்படி அரசிடம் மோகன் லால் கோரிக்கை விடுத்தார்.
வனத் துறை சட்டப்படி யானை தந்தங்களை வீட்டில் வைக்கத் தடை உள்ளது. ஆனாலும், அப்போதைய வனத் துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் சட்டத்தில் திருத்தம் செய்து யானை தந்தங்களை மோகன் லாலிடம் திருப்பி கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதை எதிர்த்து நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏழு வருடங்களுக்குப் பிறகு கொடநாடு வனத் துறையினர் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்தக் குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய கோரி கேரள உயர் நீதிமன்றத்தில் மோகன் லால் மனுத் தாக்கல் செய்தார். அதில் தந்தங்கள் வைத்துக்கொள்ள தன்னிடம் லைசென்ஸ் உள்ளது என்றும், தனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பெரும்பாவூர் நீதிமன்றம் டிசம்பர் 6ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மோகன் லாலுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் மூன்று பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக