ஞாயிறு, 27 அக்டோபர், 2019

பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் காலமானார்!.. நியூஸ் 18

பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் காலமானார்!மின்னம்பலம் : மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
நியூஸ் 18 தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும், மூத்த பத்திரிகையாளருமான திருநாவுக்கரசு, நேற்று முன்தினம் மாலை பணியில் இருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகேயுள்ள எரிசனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, பத்திரிகை மற்றும் காட்சி ஊடகத் துறையில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர். தினமணி, தினமலர் உள்பட பல்வேறு முக்கிய நிறுவனங்களில் பணியாற்றி இருக்கிறார்.
அவரது உடல் சென்னையில் ஆர்.ஏ.புரத்திலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பத்திரிகையாளர்களும், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் திருநாவுக்கரசு உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து, அவரது உடல் சொந்த ஊரான எரிசினம்பட்டிக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணிக்கு இறுதி நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. திருநாவுக்கரசுவின் மறைவுக்குத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
முதல்வர்  எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “நியூஸ் 18 தொலைக்காட்சியின் மூத்த ஆசிரியர் திருநாவுக்கரசு பணியிடத்தில் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். திருநாவுக்கரசு பழகுவதற்கு இனிமையானவர், எளிமையானவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு, நியூஸ் 18 தொலைக்காட்சி நிறுவனத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா எல்லாம் வல்ல இறைவனின் நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில், “மூத்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு பணியில் இருந்தபோதே திடீரென்று மறைவு எய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். கோவை, சென்னை, ஈரோடு எனப் பல இடங்களில் பல்வேறு ஊடகத்தில் பணியாற்றிய திருநாவுக்கரசு அவர்கள் ஆற்றிய பணி சிறப்புக்குரியது. திருநாவுக்கரசுவின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொலைக்காட்சி நிறுவனத்துக்கும், சக பத்திரிகையாளர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.< மமக தலைவர் ஜவாஹிருல்லா, “திருநாவுக்கரசு ஒரு நேர்மையான பத்திரிகையாளராக, இனிமையான பண்பாளராக, அறநெறி பேணும் அன்பான தோழராக விளங்கியவர். அவர் தினசரிகளில் பணியாற்றும்போதும் சரி; நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றும்போதும் சரி... அவருடன் தொடர்பு கொண்ட தருணங்கள் மறக்க முடியாதவை. இன்னும் பல சாதனைகளை ஊடகத் துறையில் நிகழ்த்தும் வயதிருந்தும் அவரது அகால மரணம் பெரும் துன்பத்திற்குரியதாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது இரங்கல் குறிப்பில், “இனிய நண்பரும் நியூஸ் 18 தொலைக்காட்சியின் காலத்தின் குரல் நிகழ்ச்சியின் தயாரிப்பாளருமான திருநாவுக்கரசு மாரடைப்பால் இறந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பாஜக மாநிலப் பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், “நியூஸ் 18 ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு அவர்களின் மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. கோவை பகுதியைச் சார்ந்த அவர் தினமலரில் பணிபுரிந்த காலகட்டத்திலிருந்து நல்ல அறிமுகம். அவரது குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக