செவ்வாய், 22 அக்டோபர், 2019

வங்கிகளை இணைக்க எதிர்ப்பு: நாடு முழுவதும் செவ்வாயன்று வங்கிகள் வேலை நிறுத்தம்

banking-operations-may-be-affected-due-to-strike-on-tuesdayhindutamil.in :புதுடெல்லி, மத்திய அரசு வங்கிகளை இணைக்க வங்கி ஊழியர்கள் சங்கங்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளதால் நாளை (செவ்வாய்க்கிழமை) நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றதிலிருந்து வங்கி இணைப்பு ஒரு முக்கிய இலக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் சில வங்கிகளை குறைத்து அவற்றை தேசியமயமாக்கப்பட்ட பெரிய வங்கிகளோடு இணைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வங்கி இணைப்பிற்கு எதிர்ப்பு மற்றும் வைப்பு விகிதத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு செவ்வாயன்று சில பணியாளர்கள் சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இதனால் அரசுக்கு சொந்தமான வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனினும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (ஏஐபிஇஏ) மற்றும் இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு (பிஇஎப்ஐ) விடுத்துள்ள வேலைநிறுத்த அழைப்பில் வங்கி உயரதிகாரிகளும் தனியார் வங்கிகளும் கலந்துகொள்ளப் போவதில்லை என்று கூறப்படுகிறது.
நாட்டின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) உட்பட பெரும்பாலான வங்கிகள் நாளை நடைபெறும் வேலைநிறுத்தம் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் வாடிக்கையாளர்களிடம் முன்னரே தகவல் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கடந்தவாரம் பாரத ஸ்டேட் வங்கி பங்கு சந்தைகளுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியதாவது:
"வேலைநிறுத்தத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களில் எங்கள் வங்கி ஊழியர்களின் உறுப்பினர் எண்ணிக்கை மிகக் குறைவு, எனவே வங்கிகளின் செயல்பாட்டில் வேலைநிறுத்தத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருக்கும்
மற்றொரு பொதுத்துறை கடன் வழங்குநரான சிண்டிகேட் வங்கியும் ''உத்தேச வேலைநிறுத்த நாளில் கிளைகளை சீராக செயல்படுத்த வங்கி தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், வேலைநிறுத்தம் செயல்பட்டால், கிளை அலுவலகங்களின் செயல்பாடு பாதிக்கப்படலாம்'' என்று சற்று தங்கள் வங்கி செயல்பாடுகள் குறித்து சந்தேகத்தோடு தெரிவித்துள்ளது.
தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை
வேலைநிறுத்தம் குறித்து ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் சி. எச். வெங்கடாச்சலம் கூறியதாவது:
பணியாளர்கள் சங்கம் எழுப்பிய கோரிக்கைகள் தொடர்பாக பேச தலைமை தொழிலாளர் ஆணையாளர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்தக் கூட்டத்தில் எந்தவொரு சாதகமான முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில்தான் வேலைநிறுத்தத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது'
தலைமை தொழிலாளர் ஆணையர் முன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் இந்திய வங்கிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. ஆனால் ஒரு பொதுவான நிலையை அடையத் தவறிவிட்டது.
"எனவே வேலைநிறுத்தத்திற்காக நாங்கள் அழைப்புவிடுக்கும் நிலை ஏற்பட்டது. நாளை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க நாடு முழுவதும் உள்ள எங்கள் தொழிற்சங்கங்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் நாங்கள் அறிவுறுத்துகிறோம்.
இவ்வாறு ஏஐபிஇஏ பொதுச் செயலாளர் தெரிவித்தார்.
கடந்த மாதம், அதிகாரிகள் சங்கங்கள் செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்களுக்கு அகில இந்திய வங்கி வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன, பின்னர் அவை அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து திரும்பப் பெறப்பட்டன.
பிடிஐ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக