சனி, 26 அக்டோபர், 2019

சுர்ஜித்தைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கும் முயற்சி நடக்கிறது

சுர்ஜித்தைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கும் வீரர்கள்!மின்னம்பலம் : நேற்று (அக்டோபர் 25) மாலை சுமார் 5:40 மணியளவில் திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணறுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க 25 மணி நேரங்கள் கடந்தும் தீவிர மீட்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை 26 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாமேரி தம்பதியரின் மகனான அவரை மீட்டெடுக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு முழுவதும் அவரை மீட்க மீட்புப்படையினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில் அதிகாலை 2:30 மணியளவில் எதிர்பாராத விதமாக 26 அடி ஆழத்தில் இருந்து 70 அடி ஆழத்திற்கு குழந்தை கீழே தள்ளப்பட்டார். இதனால் அவரை மீட்டெடுக்கும் பணிகளில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனினும் அனைவரும் அவரை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

ஆழ்துளைக் கிணறுகளுக்குள் தவறி விழும் குழந்தைகளை மீட்பதற்காக மதுரையைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் உருவாக்கிய கருவியைப் பயன்படுத்தி குழந்தையை மீட்க முயற்சி செய்தனர். தொடர்ந்து ஐஐடி குழுவினர் நவீன கருவி ஒன்றைக் கொண்டு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை குழுவினர், நாமக்கல் குழுவினர், டேனியல் என்று பல்வேறு மீட்புக் குழுவினரும் குழந்தையை மீட்க முயற்சி செய்தும் எதுவும் பலனை அளிக்கவில்லை.
அதனைத் தொடர்ந்து மாநில பேரிடர் மீட்பு குழுவினரும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினரும் பல்வேறு நவீன கருவிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சுர்ஜித்தை மீட்க பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு சுவாசிப்பதில் சிக்கல் ஏற்படாமல் இருக்க அவர் விழுந்த குழிக்குள் ஆக்ஸிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.
எப்படியும் குழந்தையை மீட்டெடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் அனைவரும் போராடிக்கொண்டிருந்த போது மீண்டும் அதிர்ச்சியளிக்கும் விதத்தில் குழந்தை 70 அடி ஆழத்தில் இருந்து 80 அடி ஆழத்திற்கும் பின்னர் 85 அடி ஆழத்திற்கும் சென்று விட்டார். கனமழை பெய்து ஈரமாக இருந்த மண் குழந்தையின் கைகளை மறைத்து மூடிக்கொண்டது. இதனால் மண்ணை அகற்றி குழந்தையை மீட்க பெரும் சிரமம் ஏற்பட்டது.
தொடர்ந்து என்எல்சி, ஓஎன்ஜிசி மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தை சிக்கியுள்ள ஆழ்துளைக் கிணறுக்கு அருகில் 3 மீட்டர் தொலைவில் மற்றொரு குழி தோண்டப்பட்டு சுரங்கப் பாதை அமைக்கப்படவுள்ளது. ஓஎன்ஜிசியின் ரிக் இயந்திரம் மூலம் இந்த குழியைத் தோண்ட திட்டமிட்டுள்ளனர். 90 அடிக்கு அந்த குழியைத் தோண்டி அதன் வழியாக மூன்று வீரர்கள் உள்ளே சென்று குழந்தையை மீட்டு வரத் தயாராகவுள்ளனர்.
குழந்தை மீட்கப்படுவதைப் பார்க்க பல ஊர்களில் இருந்தும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். நாளை தீபாவளி பண்டிகை என்பதையும் பொருட்படுத்தாமல் குழந்தை மீட்கப்பட வேண்டும் என்ற பிரார்த்தனையோடு அனைவரும் அங்கு கூடியுள்ளனர்.
குழந்தையை மீட்பதற்கான பணிகள் துரிதமாக நடந்துவரும் நிலையில் அவரின் வருகையை தமிழக மக்கள் அனைவரும் எதிர் நோக்கிக் காத்திருக்கின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக