செவ்வாய், 1 அக்டோபர், 2019

காஞ்சிபுரத்தில் கள்ள மணல் எடுக்கும் எடப்பாடியின் லாரிகள் .. வழக்கு பதிந்த போலீசுக்கு ஈமெயிலில் இடமாற்றம்

சவுடு மண் எடுக்கும் லாரிகள்`விகடன் :இது யாரோட லாரி தெரியுமா?'- காஞ்சி அதிகாரிகளைப் பதறவைத்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள்!
அதிகாரிகள், அதிரடியாகத் தென்மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் சக காவலர்கள் கொதிப்படைந்துள்ளனர்.
சவுடு மண் எடுக்கும் லாரிகள்  சட்டவிரோதமாக குளத்தில் மண் எடுத்த ஆளும் கட்சியின் ஆட்சி பீடத்தில் உள்ளவர்களுக்கு நெருக்கமானவர்களின் லாரிகளைப் பிடித்து, காஞ்சிபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததால், அதிகாரிகள் அதிரடியாகத் தென்மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால், சக காவலர்கள் கொதிப்படைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அருகே உள்ளது மேலக்கோட்டையூர். இங்குள்ள குளத்தில், சில நாள்களாக திருட்டுத்தனமாக மண் அள்ளப்பட்டுவந்தது. இதனால் இப்பகுதி மக்கள் காவல்துறையின் புகார் எண் '100' க்கு போன் செய்து தகவலைச் சொன்னார்கள். இந்தப் புகாரின் அடிப்படையில் காஞ்சிபுரம் எஸ்பி கண்ணன் தாழம்பூர் காவல்நிலையத்திற்கு போன் செய்து, விசாரணை செய்யுமாறு உத்தரவிட்டார்.

தகவலை உறுதிப்படுத்திய பின்னர், எஸ்பி அறிவுறுத்தலின் பேரில் சட்ட விரோதமாக மண் எடுத்துக்கொண்டிருந்த மூன்று லாரிகளைப் பிடித்து தாழம்பூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த லாரிகள், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான சேலம் பகுதியைச் சேர்ந்த, ‘சேலம் மைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமானது எனக் கூறப்படுகிறது.




சம்பவத்தைக் கேள்விப்பட்ட அப்பகுதி ஆளும் கட்சிப் பிரமுகர்கள், தாழம்பூர் காவல்நிலையத்திற்கு வந்தனர். காவல் துறையினருக்கும் ஆளும் கட்சி பிரமுகர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. ‘எஸ்பி உத்தரவின் பேரில்தான் நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்’ என அங்கிருந்த காவலர்கள் தெரிவிக்க, கொதிப்படைந்த ஆளும் கட்சிப் பிரமுகர்கள் “இது யாரோட லாரி தெரியுமா? எடப்பாடி பழனிசாமியோட லாரி. முதலமைச்சர் லாரி மேலயே வழக்குப் போடுறீயா? இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்கப்போகுதுன்னு பாரு…” என மிரட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில், லாரிகளைப் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்த தலைமைக் காவலர் ராஜ்குமார், காவலர் புருஷேத்தமன், தனிப்பிரிவு ஏட்டு இளையராஜா ஆகியோர் கூடுதல் டிஜிபி உத்தரவின் பேரில் தென்மண்டலத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று இமெயிலில் உத்தரவு வந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட காவலர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
`இது யாரோட லாரி தெரியுமா? எடப்பாடி பழனிசாமியோட லாரி. முதலமைச்சர் லாரி மேலயே வழக்குப் போடுறீயா? இன்னும் கொஞ்ச நேரத்துல என்ன நடக்கப்போகுதுன்னு பாரு'.
``கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பார் உரிமையாளர் தற்கொலைக்குக் காரணமான காவல்துறையினருக்குக்கூட பெரிய அளவிலான தண்டனை அளிக்கப்படவில்லை. காஞ்சிபுரம் பகுதியிலேயே கன்ட்ரோல் ரூமுக்கு பணிமாறுதல் செய்தார்கள். தவறு செய்யும் காவலர்களுக்கே உச்சபட்ச தண்டனையாக அதே மாவட்டத்தில் அதிகாரம் இல்லாத பணிக்கு அனுப்பப்படுவார்கள். ஆனால், உயர் அதிகாரியின் உத்தரவை சட்டப்படி அமல்படுத்திய காவல்துறையினருக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?'' என காவல்துறையினர் குமுறுகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட எஸ்பி கண்ணன், ”நான் சொல்லித்தான் அவர்கள் லாரிகளைப் பிடித்தார்கள். பிடிபட்ட லாரிகளுக்கும் முதல்வருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மூவர் பணியிட மாற்றம் என்பது அட்மின் தரப்பில் எடுக்கப்பட்ட முடிவு” என்றார்.
காஞ்சிபுரம் அ.தி.மு.க மத்திய மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், “நீங்க சொல்லிதான் எனக்கு தகவல் தெரியும். எனக்கும் எங்கள் கட்சியினருக்கும் அதில் எந்தத் தொடர்பும் இல்லை” என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக