செவ்வாய், 1 அக்டோபர், 2019

பெரியார் திடலில் உதயநிதி அசத்தல் பேச்சு .. திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை நூல் வெளியீடு வீடியோ


Arul Prakasam : திமுகழக இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக ஆனபிறகு முதல்முறையாக ஒரு மேடையில் நீண்ட உரை ஒன்றை ஆற்றி அசத்தி இருக்கிறார் உதயநிதி .
இந்நிகழ்வின் சிறப்பு அவர் உரை ஆற்றிய இடமும் மேடையும் ஆகும். பெரியார் திடலில் திராவிட இயக்க வரலாற்று ஆவணமாக 1400 பக்கங்களில் திரு அர.திருவிடம் அவர்கள் எழுதிய திருவல்லிக்கேணி முதல் திருவாரூர் வரை என்னும் நூல் அறிமுகவிழா மேடையில் அவர் ஆற்றிய உரையின் சிறப்பு அம்சங்கள் இரண்டை குறிப்பிட்டே ஆகவேண்டும்.
முதலாவதாக தம்பி உதயநிதி பேசிய பாணி. திமுகழக மேடைகளில் பெரும்பாலும் அறிஞர் அண்ணாவின் அடுக்கு மொழி பேச்சும் கலைஞரின் கன்னல் மொழி உரையும் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் கழகத்தலைவர் தளபதியார் வரையில் தொடர்வதைக் காண்கிறோம். திமுகழக மேடைகளுக்கு புதிய பாணியாக தம்பி உதயநிதி தேர்ந்தெடுத்த பாணி பெரியார் பாணி என்பதில் நாம் பெருமைப்பட வேண்டும். ஆம் பெரியாரின் பாமரத்தமிழில் பெரியார் திடலில் திராவிட இயக்க வரலாற்று குறிப்புகளுடன் முதல்முதலாக அவர் ஆற்றிய நீண்ட உரை அவருடைய அரசியல் பயணத்தில் ஒரு மைல்கல் என்றால் மிகை அல்ல.

அடுத்த சிறப்பு, அவருடைய உரையில் பார்ப்பனர் என்ற பதத்தை பயன்படுத்தியது.
இன்றைக்கு திமுகழக மேடைகளில் பார்ப்பனர் என்கின்ற சொல்லை கழக முன்னணித் தலைவர்களும் கூட உச்சரிக்கத் தயங்கும் சூழலில் தம்பி உதயநிதி தைரியமாக அந்த சொல்லை குறிப்பிட்டுப் பேசியது உண்மையில் அவர் திராவிட இயக்கப் பரம்பரையின் சொந்தம் சொத்து என்பதை நிரூபித்து இருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
திராவிட இயக்கத்தின் வலுவான விழுதாக வருவார் கழகத்தைக் காக்கும் கடமையில் வெல்வார் என்ற நம்பிக்கை துளிர்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக