செவ்வாய், 22 அக்டோபர், 2019

சமுக வலைத்தளங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம்? ... பாஜக ஆட்சிக்கு வந்ததே போலியான செய்திகள் மூலம்தானே?

சமூக வலைதளங்களை இனி தவறாகப் பயன்படுத்த இயலாது!மின்னம்பலம் : சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவதற்காகவும், இணையதளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அதிநவீன ஃபோன்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அதிகப்படியான இணைய வசதி போன்றவற்றின் காரணமாக சமூக வலைத் தளங்களின் பயன்பாடு இன்று பெருமளவில் அதிகரித்துள்ளது. செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பாகும் தலைப்புச் செய்திகளுக்காகவும், செய்தித்தாளுக்காகவும் காத்திருந்து செய்திகளையும் தகவல்களையும் தெரிந்துகொண்ட காலம் மாறிவிட்டது. அனைத்து செய்திகளும் உடனுக்குடன் உள்ளங்கைக்குள் கிடைக்கும் விதத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.

ஆனால், பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களுக்கு இருப்பது போன்ற எந்தவிதமான கட்டுப்பாடும் இணையதளங்களுக்கும் பிற சமூகவலைதளங்களுக்கும் இல்லை. இதன் காரணமாகவே பல்லாயிரக்கணக்கான தவறான செய்திகளும் பொய்யான தகவல்களும் சமூக வலைதளங்களில் வலம்வருகிறது. பல முக்கிய தலைவர்கள், திரைத்துறையினர், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களுக்கு எதிரான அவதூறு செய்திகளும் பரப்பப்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்குகளும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது.
அந்த வழக்கிற்கு மத்திய அரசு சார்பில் பதில் மனு இன்று (அக்டோபர் 22) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், இணையதளங்களை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க ஜனவரி இறுதிக்குள் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இண்டர்நெட் சேவை வழங்குபவர்கள், சர்ச் என்ஜின்கள், சமூக ஊடகங்களுடன் இணைந்த புதிய வழிகாட்டுதல்களை வடிவமைக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் ஏற்படும் தனிநபர் உரிமை மீறல்கள், நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தல்கள் போன்றவை கருத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 2020 ஆண்டு ஜனவரி இறுதிக்குள் இணையதளங்களை ஒழுங்குபடுத்த புதிய விதிமுறைகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை நடைமுறை படுத்தப்பட்டால் சமூக வலைதளங்களை யாராலும் தவறாகப் பயன்படுத்த இயலாது என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக