செவ்வாய், 22 அக்டோபர், 2019

செல்வி (கலைஞர் மகள்) : எங்கள் மருமகன் ஜோதிமணியின் எந்த செயலுக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை

கருணாநிதியுடன் செல்வி- செல்வம்
ஜோதிமணி (வட்டத்தில்)vikatan.com - அ.சையது அபுதாஹிர் : இதுபோன்று சிக்கலில் மாட்டுவது ஜோதிமணிக்கு ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஏற்கெனவே பல இடங்களில் இதுபோன்ற வில்லங்கமான காரியங்களில் ஈடுபட்டு சிக்கிய கதையும் இருக்கிறது. ``எங்கள் மருமகன் ஜோதிமணி அவர்களின் எந்தச் செயல்களுக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” இப்படி ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள், கருணாநிதியின் மகள் செல்வி மற்றும் அவருடைய கணவர் செல்வம். ஏன் இந்த அறிவிப்பு, என்ன நடக்கிறது செல்வி குடும்பத்தில் என விசாரித்தோம்.
கருணாநிதியின் மகளும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் தங்கையுமான செல்வி - முரசொலி செல்வம் ஆகியோரின் ஒரே மகள் டாக்டர் எழிலரசி.

இவரின் கணவர்தான் ஜோதிமணி. மருத்துவம் படிக்கும் காலத்தில் காதலித்து பெற்றோர் ஒப்புதலுடன் திருமணம் செய்துகொண்டனர் எழில் தம்பதியர். ஜோதிமணி மயக்கவியல் மருத்துவநிபுணராக இருக்கிறார்.

கடந்தவாரம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் தினேஷிடம், குடியாத்தத்தைச் சேர்ந்த ஜாகீர் அகமத் தமான் என்பவர் தன்னிடம் ஒரு கோடி ரூபாய்க்கு 100 ரூபாய் நோட்டுகள் இருப்பதால் அந்தப் பணத்திற்குப் பதிலாக 80 லட்ச ரூபாய்க்கு 500, 2000 ரூபாய் நோட்டுகளைத் தந்தால் போதும் என்று பேசியுள்ளார். இருபது லட்ச ரூபாய் பணத்திற்கு ஆசைப்பட்ட தினேஷ், அக்டோபர் 15-ம் தேதி நீலாங்கரையிலுள்ள ஒரு பங்களாவுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்புள்ள 500, 2000 ரூபாய் நோட்டுகளுடன் ஆஜரானார். அங்கு ஜாகீர் தனது நண்பர்கள் சிலருடன் வந்துள்ளார். தினேஷிடம் உங்கள் பணத்தை முதலில் எண்ணிப்பார்க்க வேண்டும் என்று பெட்டியை வாங்கிப் பக்கத்து அறைக்குள் சென்றுள்ளார். ஜாகீருடன் வந்திருந்த ஒரு நபர் மட்டும் வெளியே அமர்ந்திருக்க, அறைக்குள் பணப்பெட்டியுடன் சென்றவர் ஒருமணிநேரமாகியும் வராததால் சந்தேகமடைந்த தினேஷ் தரப்பினர் அறைக்கதவை உடைத்து திறந்து பார்த்தனர். அறைக்குள் பணப்பெட்டியுடன் சென்றவர், ஜன்னலைக் கழற்றி வெளியே தப்பிச்சென்றது கண்டு அதிர்ந்தனர். அறைக்கு வெளியே அமர்ந்திருந்த ஜாகீரின் நண்பரை அடித்து நீலாங்கரை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். ஜாகீரின் நண்பரை விசாரித்த காவல்துறைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவர் செல்வியின் மருமகன் ஜோதிமணி என்பதும், இந்தப் பணமாற்றத்தில் தனக்கு கமிஷன் கொடுப்பதாகச் சொல்லிக் கூட்டி வந்து ஏமாற்றிவிட்டார்கள் என்றும் புலம்பியுள்ளார். ஒருவழியாக நீலாங்கரை காவல்நிலையத்தில் விடிய விடிய பஞ்சாயத்து நடந்து, அதற்குப்பின் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். பறிகொடுத்த பணத்தைத் தருவதாக ஜோதிமணி தரப்பில் ஒப்புக்கொண்டபிறகு, இந்த வழக்கில் யாரையும் கைதுசெய்யாமல் விடுவித்தது காவல்துறை. இந்த விவகாரத்துக்குப் பிறகுதான் செல்வி குடும்பத்திலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜோதிமணி குறித்து விசாரித்தபோது, ``கருணாநிதிக்குச் செல்ல மகளாக இருந்தவர் செல்வி. அவருக்கு ஒரே வாரிசு எழிலரசி. மருத்துவம் பயின்றபோது ஜோதிமணியுடன் எழிலரசிக்கு ஏற்பட்ட நட்பு, பின்னர் அவர்கள் திருமணம்வரை சென்றது. ஆரம்பத்தில் இந்தத் திருமணத்திற்கு கருணாநிதி குடும்பத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்தபோது, படித்த பையன் என்று கருணாநிதிதான் அனைவரையும் சமாதானம் செய்துள்ளார். ஜோதிமணியின் அப்பா முருகேசனை, 'கப்பல் முருகேசன்' என்றே அழைப்பார்கள். முதலில் கப்பலில் பணியாற்றியவர், அதற்குப் பின் கப்பலிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்து வியாபாரம் செய்துள்ளார். < ஜோதிமணி - எழிலரசி தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இதில் முதல் மகள் ஓவியாவின் நிச்சயதார்த்தம் கடந்தமாதம் சென்னையில் புகழ்பெற்ற ஒரு நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. பிரபல தொழிலதிபர் அக்னி ஜெயப்பிரகாஷ் மகன்தான் மாப்பிள்ளை. இந்த நிச்சயதார்த்தம் முடிந்த சில நாள்களில் இப்படி ஒரு சிக்கலில் மாட்டியுள்ளார் ஜோதிமணி. இவர் பயன்படுத்தும் கார் முதல் கையில் கட்டியிருக்கும் வாட்ச் வரை அனைத்துமே மிக விலை உயர்ந்தவை. ஒரு கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள காரில்தான் இவர் பவனிவருவார். பசும்பொன் முத்துராமலிங்க சாலையில் உள்ள இவரின் வீடே பிரமாண்டமாகக் காட்சிதரும். அதன் மதிப்பே பல கோடி ரூபாய் இருக்கும். சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள முக்கிய மருத்துவமனையில் இவர் சைலன்ட் பார்ட்னராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பணத்திற்குப் பஞ்சமில்லாத நிலையில் பணத்திற்காக இதுபோன்ற மோசடியில் ஏன் ஈடுபடுகிறார் என்று தெரியவில்லை” என்கிறார்கள். இதுபோன்று சிக்கலில் மாட்டுவது ஜோதிமணிக்கு ஒன்றும் புதிதல்ல என்கிறார்கள், அவருக்கு நெருக்கமானவர்கள். ஏற்கெனவே பல இடங்களில் இதுபோன்ற வில்லங்கமான காரியங்களில் ஈடுபட்டு சிக்கிய கதையும் இருக்கிறது. அப்போதெல்லாம் செல்வியின் பெயரைச் சொல்லியே இவர் தப்பி வந்துள்ளார். மலேசியாவில் இவருக்கு சில வியாபாரம் இருக்கிறது. இதனால் செல்வி குடும்பத்தினரும் இவர்மீது ஏக கடுப்பில் இருந்துவந்தார்கள். எழிலரசியும் இவரின் நடவடிக்கை பிடிக்காமல் சண்டையிட்டபோது மனைவியையும் மிரட்டியுள்ளார். குடும்ப அளவில் இந்தப் பஞ்சாயத்துகள் பலமுறை நடந்துள்ளன. தி.மு.க ஆட்சியில் இருந்தபோது பலரிடம் 'கான்ட்ராக்ட் வாங்கித் தருகிறேன். நான் சொன்னால் இந்த ஆட்சியில் எதுவும் நடக்கும்' என்று பணத்தைப் பெற்றுக்கொண்டு அதைத் திருப்பிக் கொடுக்காத சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரே மகளின் வாழ்க்கையில் ஏற்பட்ட இந்தச் சிக்கல், செல்வி குடும்பத்திற்குப் பெரும் சுமையாகவே இருந்துவந்தது. ஜோதிமணி மட்டுமல்ல; அவருடைய அக்கா உமாவின்மீது இதற்கு முன்பு இடமோசடி வழக்கில் சிக்கிய வழக்கும் பதிவாகியுள்ளது. இதனால் கருணாநிதி குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் ஜோதிமணியை ஒதுக்கியே வைத்திருந்தார்கள். / இந்நிலையில் இந்தப் பணமோசடி விவகாரம் மீடியாக்களில் வெளியானதும், செல்வி வீட்டில் இதுகுறித்து ஆலோசனை நடந்துள்ளது. இனியும் நாம் அமைதியாக இருந்தால் நமக்கும் சிக்கல் வந்துவிடும் என்று முடிவுசெய்துள்ளனர். ஸ்டாலினிடமும் ஜோதிமணியின் விவகாரம் குறித்து பேசப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் செல்வி குடும்பத்தின் பெயரில் உள்ள சொத்துகளை முன்னிலைப்படுத்தி பணப்பரிவர்த்தனையிலும் இவர் ஈடுபட்டு அது தங்களுக்குச் சிக்கலாகிவிடக்கூடாது என்று முடிவுசெய்தபிறகே இந்தப் பத்திரிகை அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மகளின் திருமணத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு சிக்கலில் சிக்கிவிட்டாரே என்று செல்வி குடும்பத்தினர் பெரும் வருத்தத்தில் இருக்கிறார்கள். பணத்தைப் பறித்துச் சென்ற ஜாகீரை, இதுவரை காவல்துறையும் கைதுசெய்யவில்லை. ஆனால், ஜோதிமணி வழக்கம்போல் ஹாயாக வெளியே உளவ ஆரம்பித்துவிட்டார். தோண்டத்தோண்ட இவரைப் பற்றிய விவகாரங்கள் இன்னும் வெடிக்கும் என்கிறார்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக