ஞாயிறு, 13 அக்டோபர், 2019

காஷ்மீர் தொடர்பாக பேசவில்லை .. சீன அதிபரும் மோடியும் சந்திப்பு ...விபரம்

மோடி - ஜின்பிங்vikatan.com - சத்யா கோபாலன் : மோடி - ஜின்பிங் நடத்திய இரண்டாம் நாள் ஆலோசனையில் என்ன விஷயங்கள் பேசப்பட்டன என்பது பற்றி வெளியுறவுத்துறைச் செயலர் விளக்கியுள்ளார
63 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் 2 நாள் பயணமாகத் தமிழகம் வந்திருந்தார். நேற்று மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்களைச் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இந்தியப் பிரதமர் மோடியும் நேரில் பார்வையிட்டனர்.
அதன் பிறகு, இன்று கோவளத்தில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டனர். முன்னதாக இரு நாட்டு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் தனியாகப் பேசினர்,
அதன் பிறகு சீன, இந்திய அதிகாரிகள் கலந்துகொண்ட உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இறுதியாகத் தமிழக கலாசாரங்களை மையப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பொருள்களின் கண்காட்சியை மோடியும் ஜின்பிங்கும் பார்வையிட்டனர்.
பின்னர் கோவளம் ஹோட்டலில் இருந்து நேராக சென்னை விமான நிலையம் சென்ற சீன அதிபர், அங்கிருந்து தனி விமானத்தில் புறப்பட்டார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உட்படப் பல அமைச்சர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர். பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த நீண்ட பேச்சு வார்த்தை பற்றி காஞ்சிபுரத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார் இந்திய வெளியுறவுத்துறைச் செயலர் விஜய் கோகலே.

 ``இன்று இரு நாட்டுத் தலைவர்களும் கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் உரையாடினர். அதைத்தொடர்ந்து உயர்மட்ட பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது. பின்னர், சீன அதிபருக்கு இந்தியப் பிரதமர் மோடி மதிய விருந்து வழங்கினார். இந்த இரு நாள் உச்சி மாநாட்டில் இரு தலைவர்களும் மொத்தமாக ஆறு மணி நேரம் தனியாகப் பேசியுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், முதலீடு மற்றும் சேவைகள் போன்றவை குறித்து விவாதிக்க ஒரு புதிய உயர்மட்ட குழு உருவாக்கப்படும்.

இரு நாட்டு மக்களின் உறவில் கவனம் செலுத்த வேண்டும் என்ற ஆலோசனை பரிமாறப்பட்டது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. உள்நாட்டு விவகாரத்தில் நம் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுக்கு வருமாறு பிரதமர் மோடிக்கு அதிபர் ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார்.

மான்சேவார் யாத்திரை செல்லும் யாத்திரிகளுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அதிக வசதி குறித்து சீன அதிபர் ஆலோசித்தார். தொடர்ந்து சீனா - தமிழக உறவு குறித்து பிரதமர் மோடி பேசினார். தீவிரவாதம் மற்றும் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்வது மிகவும் முக்கியமானது என இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்” என மோடி - ஜின்பிங் ஆலோசனை பற்றி கோகலே பேசியுள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக