புதன், 9 அக்டோபர், 2019

சசிகலா உடல்நலனுக்கு ஆபத்து!

மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: சசிகலா உடல்நலனுக்கு ஆபத்து!மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் பெங்களூரூ காட்டியது.
“2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சிறைக்குச் சென்ற சசிகலா, கடந்த மூன்று வருடங்களாகச் சிறையில் இருக்கும் நிலையில்... விரைவில் வெளியே வருவார், வந்ததும் அதிமுக - அமமுக உறவில் மாற்றம் ஏற்படும், அமமுகவே இருக்காது, இரட்டை இலை சின்னம் இருக்கும். அதிமுகவோடே தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வார் என்றெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் வட்டாரத்தில் விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா நாளிதழில் அதிமுகவை இனி சசிகலா நெருங்கவே முடியாது என்றும் பிரகடனங்கள் வெளியாகி வருகின்றன.
ஆனால், சசிகலா சிறையில் ஆரோக்கியப் போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். கடுமையான உடல்நலக் குறைவில் இருக்கிறார் என்று அதிர்ச்சிச் செய்திகள் கிடைக்கின்றன.

இப்போதைய தகவலுக்கு முன், பிப்ரவரி 4ஆம் தேதி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் உடல்நிலை: பிடிவாதம் பிடிக்கும் சசிகலா என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தியில் ஒரு பகுதியை மீள் பார்க்கலாம்.
‘ஜெயலலிதா இருக்கும்போதே சசிகலாவுக்கு நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்து வந்திருக்கின்றன. குறிப்பாக கழுத்தின் பின்பக்கம் பிடரி பகுதியில் அவ்வப்போது சசிகலாவுக்கு வலி எடுக்கும். அதற்காக நரம்பியல் மருத்துவர்களையும் அப்போது பார்த்திருக்கிறார் சசிகலா. அப்போது பரிசோதித்துப் பார்த்து பிசியோதெரபி முறையில் ஐஎஃப்டி, அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பெற்றுள்ளார் சசிகலா. ஆனால், அதில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை. ஒருகட்டத்தில் தினமும் பிசியோதெரபி பண்ண வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லி கொஞ்ச நாள் பிசியோதெரபி செய்து வந்திருக்கிறார். பின் அதையும் விட்டிருக்கிறார். தினமும் பிசியோதெரபி செய்தாக வேண்டும் என்றும் குறைந்தபட்சம் ஒருவாரமாவது தொடர்ந்து பிசியோதெரபி பயிற்சி செய்தால்தான் வலி குறையும் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.
ஆனால், பரப்பன அக்ரஹாரா சிறை மருத்துவமனையில் பிசியோதெரபி வசதி இல்லையாம். எனவே வெளியே சென்றுதான் தினமும் ஒருமணி நேரம் பிசியோதெரபி செய்துகொள்ள வேண்டும். ஆனால், தினந்தோறும் வெளியே சென்று வருவதற்கு சிறை விதிகள் இடம் கொடுக்கவில்லை. எனவே ஏதாவது ஒரு மருத்துவமனையில் அட்மிட் ஆகி ஒரு வார காலம் தொடர்ந்து பிசியோதெரபி எடுத்துக்கொள்ள அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம் என்று இளவரசி யோசனை கூறியிருக்கிறார். ஆனால் சசிகலாவோ, ‘நான் வெளியே போய் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆக மாட்டேன் என மறுத்துவிட்டார்’ என்று அச்செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.
ஏற்கெனவே பிடரி வலியினால் அவதிப்பட்டு வந்த சசிகலாவுக்கு சில நாட்களாகக் கண்களில் இருந்து தொடர்ச்சியாகக் கண்ணீர் வந்துகொண்டே இருக்கிறது. கண் நோய்களால் இது ஏற்படலாம் அல்லது தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதாலும் இதுபோன்று ஏற்படலாம். தொடர்ந்து கண்களில் நீர் வடிந்துகொண்டிருப்பதால் சசிகலா கடுமையாக அவதிப்படுகிறார். இதுமட்டுமல்ல, பிசியோதெரபி செய்யாததால் பிடரிவலி இப்போது நீண்டு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டு வருகிறார். இரவில் முதுகுவலியால் உறக்கம் வராமல், விழித்திருக்கும்போது கண்களிலிருந்து நீர் வடிவதால் எப்போதும் அழுதுகொண்டிருப்பதைப் போலவே காட்சியளிக்கிறார் சசிகலா. இதோடு சர்க்கரை அளவும் அதிகமாகிவிட்டது.
குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள், கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகள், சிறைக்குள்ளும் தலை நீட்டும் அரசியல் நெருக்கடிகள் ஆகியவற்றால் ஏற்கெனவே உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார் சசிகலா. இதில் பிடரிவலி, முதுகுவலி, சர்க்கரை அதிகமானது, கண்களில் நீர் வடிதல் ஆகிய அனைத்தும் சேர்ந்து சசிகலாவின் உடல்நலனைக் கடுமையாக பாதித்திருக்கிறது . அண்மையில் சிறைக்குச் சென்று சசிகலாவைச் சந்தித்த தினகரன், சிறப்பு அனுமதி பெற்று வெளியே மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லியும் சசிகலா மறுத்துவிட்டார். இளவரசி தினமும் சசிகலா படும்பாட்டைப் பார்த்து தாங்க முடியாமல் சசிகலா இப்படி இருப்பது ஆபத்தில் கொண்டுபோய் விட்டுவிடும் என்று தன்னை சந்திக்க வந்த உறவினர்களிடம் எச்சரித்திருக்கிறார்.
வெளியே சசிகலாவைப் பற்றி அரசியல் பகடைக் காய்கள் நகர்த்தப்பட்டு வரும் நிலையில், கடுமையான உடல்நலக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகிறார் அவர். சட்ட நடவடிக்கைகள் மூலம் அவர் கூடிய சீக்கிரம் விடுதலையானாலும் தொடர் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சசிகலா என்கிறார்கள் சிறை வட்டாரத்தினர்” என்ற தகவலுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக