ஞாயிறு, 13 அக்டோபர், 2019

மாமல்லபுரமும் சீனாவும் .. சீன வரலாற்றில் மாமல்லபுரத்தின் முக்கியத்துவம்

இந்திய - சீன உறவில் மாமல்லபுரத்தின் சிறப்பு
#தீக்கதிர் அக்டோபர் 10, 2019
மாமல்லபுரம்:
உலகில் முதலில் நாகரீகம் அடைந்த குடிகளில் தமிழ்க் குடியும் ஒன்று. பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே கடலோடுவதிலும், கடல் கடந்த வியாபாரம் செய்வதிலும் தமிழர்கள் தனித் தேர்ச்சி பெற்றிருந்தனர்.2000 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் கிழக்குப் பேரரசாக இருந்த சீனாவும், மேற்கத்தியப் பேரரசாக இருந்த ரோம் சாம்ராஜ்யமும் தமிழகத்தையே தங்களின் வர்த்தக மைய இடமாக கொண்டிருந்தன. கிழக்கில் இருந்து வந்த பொருட்களையும், மேற்கில் இருந்து வந்தபொருட்களையும் தமிழக வணி கர்களே வாங்கி விற்று வந்தனர். சங்க காலப் பாடலான பட்டினப்பாலையில் சீனப் பட்டு, குணகடல் துகிர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு பின்னர் முடிவேந்தர் மூவரின் ஆட்சியும் முடிந்து களப்பிரர் ஆட்சி நடந்த மூன்று நூற்றாண்டு காலத்திலும் தமிழகத்திற்கும் சீனாவுக்குமான வணிகம் தொடர்ந்தது.

கி.பி.மூன்றாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு பேரரசை உருவாக்கிய பல்லவர்கள், தொடக்கம் முதலே சீனத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர். அவர்களின் துறைமுகமான மாமல்லபுரத்தில் சீன வணிகக் கப்பல்கள் ஆடி நின்றன. மாமல்ல னான முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் சீனப் பயணியான யுவான் சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தார்.முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் தான் சீனப் பட்டுத்துணி முதலில் காஞ்சிபுரத்தில் நெசவு செய்யப்படத் தொடங்கியது. அன்றுமுதல் இன்று வரை காஞ்சிப் பட்டுதனிச் சிறப்பு பெற்றிருக்க, அங்குதான் இந்தியாவிலேயே முதன்முதலில் பட்டு நெசவு தொடங்கியது என்பது தான் காரணம்.பட்டு நெசவு ரகசியத்தைப் பெற தமிழகத்தின் புராதன மருத்துவத்தை சீனத்திற்கு பல்லவர்கள் தாரை வார்க்க நேர்ந்ததாகக் கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். அத்துடன் நாகையில் சீனவணிகர்கள், துறவிகள் தங்க இரண்டாம் நரசிம்மவர்மன் சத்திரமும், கோவிலும் கட்டவும் அனுமதி அளித்தான்.
சீன நாட்டு புத்த மத மாணவர்கள் படிக்கும் கடிகைகளும் காஞ்சியில் கட்டப்பட்டிருந்தன. முதலாம் நரசிம்மவர்மன் காலத்தில் பல்லவ தூதுக் குழுவினர் சீன மன்னரின் அவையில் வீற்றிருந்தனர்.நரசிம்மவர்மன் காலம் முதல் பல்லவர்களின் கடைசி மன்னனானஅபராஜித வர்மன் காலம் வரை யிலான பல நூறு ஆண்டுகாலம் சீன வணிகர்களுக்கு மாமல்லபுரமே வியாபாரத் தலமாக இருந்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தொல்லியல் துறை ஆய்வாளரும், அழகப்பா பல்கலை க்கழகப் பேராசிரியருமான எஸ்.ராஜவேலு, சீனாவில் வாழும் ‘ஹன்’ எனப்படும் வணிக இனக் குழுவினர் தமிழர்களோடு நேரடியான வணிகத் தொடர்பு வைத்திருந்தார்கள் என்றார்.கிமு 185-149 ஆண்டுகளில் வாழ்ந்த சீன அரசர் வீய், தங்கள்நாட்டில் உள்ள வர்த்தகர்களை காஞ்சிபுரத்துக்கு அனுப்பி வர்த்தகம் செய்ய ஊக்கப்படுத்தியதற்காக குறிப்புகள் உள்ளதாக அவர் கூறினார்.சீனாவில் காஞ்சிபுரத்தை ஹுவாங்-செ(“Huang-Che”) என்றுகுறிப்பிடுவார்கள் என்றும், சீனஅரசர்கள் தங்கள் பிரதிநிதிகளை காஞ்சிபுரத்துக்கு அனுப்பியுள்ளனர் என்றும், மாமல்லபுரம் அருகே இருக்கும் வயலூர் சான்றுகளை ஆய்வு செய்த போது, காஞ்சிக்கும் சீனாவுக்கும் தொடர்பு இருந்ததன் முக்கிய ஆதாரமாக சீன மண் ஜாடிகள், சீன நாணயங்கள் கிடைத்ததாக அவர் கூறினார்.
சீனாவில் நடத்தப்பட்ட அகழ்வாய்வில் தமிழர்களின் ஓலைச்சுவடிகளும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையிலான பல நூறுஆண்டு கால வணிக, வரலாற்றுத்தொடர்பை நினைவு கூரவே மோடி -ஜீ ஜின்பிங் சந்திப்புக்கு மாமல்லபுரம் தேர்வு செய்யப் பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக